Published:Updated:

”வாங்க சும்மா வெளியில போயிட்டு வரலாம்!” -தூத்துக்குடியில் தந்தையால் 2 குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்

குடும்பத்தினருடன் தேவிகுமார்
குடும்பத்தினருடன் தேவிகுமார்

தூத்துக்குடியில், கடன் பிரச்னையால் இரண்டு பெண் குழந்தைகளை வெளியில் அழைத்துச்செல்வது போல அழைத்துச்சென்று, அப்பாவே கிணற்றில் தள்ளி கொன்ற கொடூரச் சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட தாமஸ்நகரைச் சேர்ந்தவர் தேவிகுமார் (வயது 39). இவர், இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்களின் இடைத்தரகராக இருந்துவருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 32). இவர்களுக்கு 5-ம் வகுப்பு படித்து வரும் ஷைனி ஜெயசத்யா (வயது 11) மற்றும் 3-ம் வகுப்பு படித்து வரும் ஜெசிகாராணி (வயது 9) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். தேவிகுமாருக்கு கடன் பிரச்னை இருந்துவந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

குழந்தைகளை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர்
குழந்தைகளை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர்

இதனால், கடந்த சில நாள்களாகவே மனமுடைந்த நிலையில் இருந்த தேவிகுமார், தனது இரு மகள்களை பைக்கில் அழைத்துச் சென்று கோவில்பட்டி - சாத்தூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு கிணற்றுக்குள் தள்ளிவிட்டுள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு தேவிகுமார், தனது வீட்டருகே உள்ள நண்பருக்குப் போன் செய்து, ”கடன் தொல்லை தாங்க முடியல. ரெண்டு பிள்ளைகளையும் கிணத்துல தள்ளிவிட்டுட்டேன். தப்பு பண்ணிட்டேண்டா” என்று சொல்லி அழுது புலம்பிவிட்டு போன் இணைப்பைத் துண்டித்துவிட்டாராம்.

அந்த நண்பர் கிழக்கு காவல் நிலையத்துக்கு அளித்த தகவலின் அடிப்படையில், கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையிலான வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி கிணற்றிலிருந்து 2 குழந்தைகளின் உடல்களையும் மீட்டனர். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேவி குமாரை கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.

குழந்தையின் சடலத்தை மீட்ட தீயணைப்பு வீரர்
குழந்தையின் சடலத்தை மீட்ட தீயணைப்பு வீரர்

இதுகுறித்து போலீஸாரின் விசாரணையில் கூறிய தேவிகுமார், “இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கான டிரைவிங் லைசென்ஸ் வாங்கித் தரும் இடைத்தரகராக இருந்துவருகிறேன். பலர் இதுபோன்ற வேலைகளை முடித்துத் தரச்சொல்லி பணம் கொடுத்தார்கள். ஆனால், இதில் சில வேலைகள்தான் முடிந்தன. பல வேலைகளை முடிக்க முடியவில்லை. இதனால், அவரவர்கள் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டனர்.

ஒருசிலர் என் வீட்டுக்கே வந்து சத்தம் போட்டுச் சென்றனர். அக்கம்பக்கது வீட்டார் முன்னிலையில் என்னை அவதூறாகப் பேசிச் சென்றதால் எனக்கு அவமானம் ஏற்பட்டது. ஏற்கெனவே வேலையை முடித்துக்கொடுத்த சிலர் எனக்குப் பணம் தரவில்லை. அவர்களிடமும் கேட்டுப்பார்த்தேன், இல்லை என்றே கூறினர். பலரிடம் கடனுக்குப் பணம் கேட்டும் கிடைக்கவில்லை. உறவினர்களும் கையை விரித்த நிலையில், என்ன செய்வதென்றே தெரியலை.

குழந்தையின் சடலத்தை மீட்ட தீயணைப்பு வீரர்
குழந்தையின் சடலத்தை மீட்ட தீயணைப்பு வீரர்

படுத்தால் தூக்கமும் வரவில்லை. அதனால்தான், குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற எண்ணத்தில், வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு பெண் பிள்ளைகளையும் “வாங்கடா ... பைக்ல சும்மா வெளியில ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்”னு சொல்லிக் கூப்பிட்டேன். ”சரி டாடி”ன்னு சந்தோஷமா வந்தாங்க. சாத்தூர் ரோட்டுல உள்ள கிணத்துப் பக்கம் வண்டியை நிறுத்தினேன். முதல் மகள் ஷைனியை தூக்கி கிணத்துக்குள் போட்டேன். அதைப் பார்த்து ஓட முயன்ற ஜெசிகாவையும் தூக்கிப்போட்டேன்.

பிறகு, அங்கிருந்து பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பி, கொஞ்ச தூரம் போனதும் வண்டியை நிறுத்திட்டு, தீயணைப்புத் துறையில் வேலைபார்க்கும் என்னோட நண்பர் ஒருவருக்கு போன் செய்து நடந்ததைச் சொல்லி அழுதேன். பிறகு, என் குழந்தைகளைச் சடலமாக மீட்கப்பட்டனர். ஒன்றரை லட்சம் கடன் பிரச்னைக்காக என்னோட ரெண்டு செல்லங்களை அநியாயமா கொன்னுட்டேனே...” என்று சொல்லி அழுதுள்ளார்.

கைது செய்யப்பட்ட தேவிகுமார்
கைது செய்யப்பட்ட தேவிகுமார்

தேவிகுமார், தன் குழந்தைகளைத் தள்ளிய கிணறு உள்ள பகுதி, போக்குவரத்து அதிகமுள்ள மெயின் பகுதி. தற்போது, கொரோனா முன்னெச்சரிக்கையால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் சாலையில் ஆள் நடமாட்டமில்லாமல்போனது. கடன் பிரச்னைக்காக தந்தையே தன் இரண்டு பெண் குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு