தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கவர்னகிரி சுந்தரலிங்கம் நகரைச் சேர்ந்தவர் தமிழ் அழகன். இவர் மகன் காசிராஜன். மகன் காசி ராஜனின் மனைவியிடம் கடந்த 2020-ம் ஆண்டு தந்தை தமிழ் அழகன், தவறாக நடக்க முயற்சித்தாராம். இதனையடுத்து மகன் காசிராஜனுக்கும் தந்தை தமிழ் அழகனுக்கும் மோதல் ஏற்பட்டது. காசிராஜனின் மனைவி, ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ் அழகன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த அவர், அதே வழக்கில் தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணக்காக ஆஜராகி வந்திருக்கிறார்.

இதற்கிடையில், காசிராஜனின் மனைவி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். தன் மனைவியின் இறப்பிற்கு தந்தைதான் காரணம் எனவும், மனைவியின் இறப்பிற்கு பழி தீர்ப்பேன் எனவும் கூறி தந்தையிடம் சண்டையிட்டு வந்துள்ளார். அத்துடன், சொத்துப் பிரச்னை தொடர்பாகவும் தந்தை, மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தகராறு ஏற்படும் போதெல்லாம் ஊர்க்காரர்கள் தடுத்து விலக்கி விடுவதும், இருவருக்கும் அறிவுரை கூறும் படியாக நடந்து வந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில், இன்று தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜராகிட தமிழ் அழகன் காரில் வந்துள்ளார். அவருடன் தம்பி கடல்ராஜா, உறவினர் காசிதுரை ஆகியோரும் துனையாக வந்துள்ளனர். நீதிமன்றத்திற்கு எதிரில் காரை நிறுத்திவிட்டு, நீதிமன்றத்தித்தில் வழக்கு விசாரணையில் ஆஜராகிவிட்டு மூன்று பேரும் காரில் ஏற வந்துள்ளனர். அப்போது மறைந்திருந்த காசிராஜன் அரிவாளால் மூன்று பேரையும் சரமாரியாக வெட்டினார். இதில், சுதாரித்துக் கொண்ட தமிழ் அழகன், அத்திரத்தில் அரிவாளைப் பிடுங்கி அவரை ஓடஓட விரட்டிச் சென்று வெட்டினார். அவருடன் இணைந்து கடல்ராஜா, காசிதுரை ஆகியோரும் காசிராஜனை விரட்டிச் சென்றுள்ளனர். கழுத்து, தலை, கை, கால் உள்ளிட்ட உடலின் பல இடங்களில் வெட்டுப்பட்ட காசிராஜன் நிலைதடுமாறி நடுரோட்டிலேயே விழுந்து உயிரிழந்தார்.

காசிராஜனால் வெட்டுப்பட்ட தந்தை தமிழ் அழகன், அவர் தம்பி கடல்ராஜா, காசிதுரை ஆகியோருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மத்திய பாகம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்றம், அரசு மருத்துவமனை, வணிகவளாகம் ஆகியவை உள்ள பகுதியில் பகல் நேரத்தில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், தூத்துக்குடி – திருநெல்வேலி சாலையில் சுமார் 30 நிமிடம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.