திருத்தணி: கஞ்சா பழக்கம்; போதையில் ரகளை! - மகனை அடித்துக் கொன்று போலீஸில் சரணடைந்த தந்தை

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கஞ்சா மற்றும் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டு, பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட மகனை, தந்தையே அடித்துக் கொலை செய்திருக்கும் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த செட்டிகுளம் பகுதியில் வசித்துவருபவர் பழனி (50). திருத்தணி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். பழனியின் மகன் கோகுல் (21), படித்து முடித்துவிட்டு தன் தந்தையின் வியாபாரத்துக்கு உதவியாக இருந்துவந்திருக்கிறார்.
பள்ளிப் பருவத்திலிருந்தே பழனியின் மகன் கோகுலுக்கு மது மற்றும் கஞ்சா பழக்கம் இருந்துவந்ததாகவும், கடந்த சில மாதங்களாக அவர் கஞ்சா பழக்கத்துக்குத் தீவிர அடிமையாகிவிட்டதாகவும் அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கோகுல் தன் தாயிடம் அடிக்கடி தந்தைக்குத் தெரியாமல் பணம் கேட்டு வாங்கி, தன் நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு, போதையில் தன் தந்தை பழனியிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்துவந்ததாகத் தெரிகிறது. அதன் காரணமாக, தந்தை - மகன் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்துவந்தது. இந்த்நிலையில், நேற்று மாலை நண்பர்களுடன் மது குடித்துவிட்டு போதையில், தந்தை பழனியின் காய்கறிக் கடைக்குச் சென்ற கோகுல், பணம் கேட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அதையடுத்து ஆத்திரமடைந்த பழனி, கோகுலை அடித்திருக்கிறார். அப்போது போதையில் கோகுல் பழனியைத் திருப்பி அடிக்க முயன்றிருக்கிறார்.
அதனால், கோபமடைந்த பழனி, கடையிலிருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து கோகுலைப் பலமாகத் தாக்கியிருக்கிறார். மேலும், ஆத்திரம் தணியாத அவர், கற்களைக் கொண்டும் அவரைத் தலையில் தாக்கியிருக்கிறார். பழனி கத்தி மற்றும் கற்களைக்கொண்டு தாக்கியதில், கோகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து மார்க்கெட் வியாபாரிகள் திருத்தணி காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். ஆனால், பழனி போலீஸார் வருவதற்கு முன் தானாகவே காவல் நிலையம் சென்று நடந்ததைக் கூறி சரணடைந்திருக்கிறார். போலீஸார் பழனியைக் கைதுசெய்து காவலில் வைத்துவிட்டு, சம்பவ இடத்துக்கு விரைந்து கோகுலின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, திருத்தணி அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட மகனை, தந்தையே அடித்துக் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.