Published:Updated:

`40 ஏக்கர் ஏரியை மீட்டெடுக்க வழக்கு போட்டார்!' - குளித்தலையில் சமூக ஆர்வலர், மகனுக்கு நடந்த பயங்கரம்

தகுந்த ஆதாரங்களைக் காட்டி சமூக ஆர்வலர் நல்லதம்பி வழக்கை நடத்தியதால், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து ஏரியை மீட்க வருவாய்த்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதாம்.

கொலை செய்யப்பட்டவர்கள்
கொலை செய்யப்பட்டவர்கள்

கிராமத்துக்குச் சொந்தமான பொது ஏரியை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க வழக்கு தொடுத்த மகனும் தந்தையும் மர்ம நபர்களால் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம், குளித்தலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கொலை நடந்த இடத்தில் காவல்துறையினர் விசாரணை
கொலை நடந்த இடத்தில் காவல்துறையினர் விசாரணை

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள முதலைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை. இவரின் மகன் நல்லதம்பி. நல்லதம்பி சமூக ஆர்வலராக இருந்துள்ளார். அந்தப் பகுதியில் நிலவும் பொதுப்பிரச்னைகளை சரிசெய்வதில் ஆர்வம் உடையவராக இருந்து வந்தார். தவறு செய்பவர்களை நீதிமன்றம் மூலம் தண்டிக்கும் வழக்கத்தையும் வைத்திருந்தார். அந்த வகையில், முதலைப்பட்டியில் 40 ஏக்கரில் ஏரி ஒன்று உள்ளது.

காடுகளில் ஏன் இந்தப் பயணம்? -  `மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சிக்கு மோடி ஒப்புக்கொண்ட பின்னணி

அந்த ஏரியை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து, பெரும்பகுதியைத் தங்களுக்கு சார்பாக மாற்றிக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியின் நீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், முதலைப்பட்டி கிராம மக்கள், ஏரியை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டுத்தரக்கோரி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அதிகாரிகள் யாரும் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரியை மீட்டுத்தர எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

கொலை சம்பவம் குறித்து விசாரணை செய்யும் கரூர் மாவட்ட எஸ்.பி
கொலை சம்பவம் குறித்து விசாரணை செய்யும் கரூர் மாவட்ட எஸ்.பி

இதனால், கோபமான நல்லதம்பி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ஏரியை மீட்பதற்காக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருக்கிறார். தகுந்த ஆதாரங்களைக் காட்டி அவர் வழக்கை நடத்தியதால், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து ஏரியை மீட்க வருவாய்த்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதாம். அதனடிப்படையில் 40 ஏக்கர் நிலத்தை மீட்டெடுத்த சமூக ஆர்வலர் நல்லதம்பியும் அவரின் தந்தை வீரமலையும் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள், நல்லதம்பி மீது கடும்கோபத்தில் இருந்ததாகச் சொல்கிறார்கள்.

இந்நிலையில், வயலில் இருந்து இருசக்கர வாகனத்தில் தன் தந்தை வீரமலையுடன் வீட்டுக்குத் திரும்பி வந்திருக்கிறார் நல்லதம்பி. அப்போது, திடீரென அவர்களை பைக்கில் இருந்து கீழே தள்ளிய ஆறுபேர் கொண்ட கும்பல், இருவரையும் சரமாரியாக வெட்டிக் கொன்றது. சமூக ஆர்வலரை மர்மக்கும்பல் வெட்டிக்கொன்றதால், அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது. இதனால், அந்தப் பகுதியில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

கொலை சம்பவம்
கொலை சம்பவம்

அதற்குள், 'தந்தையும் மகனையும் வெட்டிக்கொன்ற கும்பலை உடனே கைது செய்ய வேண்டும், அவர்களை ஏவியவர்களை ஒருமணி நேரத்துக்குள் கைது செய்ய வேண்டும்' என்று பொதுமக்கள் சாலைமறியல் செய்ய முயன்றனர். அதற்குள், அங்கே வந்த கரூர் மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன், 'கொலையாளிகளை 24 மணி நேரத்துக்குள் கைது செய்வோம். அதுவரை பொறுமையாக இருங்கள்' என்று சொன்னதையடுத்து, பொதுமக்கள் அமைதியானார்கள். ஆனால், சமூக ஆர்வலர் தன் தந்தையோடு நடுரோட்டில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.