Published:Updated:

`அவனை விட்டு வந்துவிட வேண்டும்.. இல்லையென்றால்?!'- மகள் மீது அமிலம் வீசிய தந்தை

தீபிகா
தீபிகா

திருவள்ளூர் வேப்பம்பட்டு அருகே மகள் காதலித்து திருமணம் செய்ததால் அவர் முகம் மீது அவரது தந்தையே அமிலம் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த பாலாஜி மற்றும் பாக்கியலட்சுமி தம்பதி. இவர்களுக்கு 21 வயதில் சாய்குமார் என்ற மகன் உள்ளார். ஏசி மெக்கானிக் படித்த சாய்குமார் குடும்பம் சென்னையில் சில காலம் வசித்துவந்துள்ளனர். அப்போது தனது வீட்டின் அருகே வசித்து வந்த ஓய்வுப்பெற்ற காவலர் பாலகுமார் என்பவரின் மகள் தீபிகாவைக் காதலித்து வந்துள்ளார்.

8 ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில் இவர்களின் காதலுக்கு தீபிகாவின் தந்தை பாலகுமார் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்காகவே ஒருகட்டத்தில் சென்னை வீட்டை காலிசெய்த காவலர் பாலகுமார் திருத்தணியில் செட்டில் ஆகியுள்ளார்.

பாலகுமார்
பாலகுமார்

தீபிகாவையும் திருத்தணி கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். இருந்தாலும் தீபிகா சாய்குமாரை மறக்காததால் அவரை வீட்டில் அடைத்துவைத்து பாலகுமார் சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

தந்தையின் செயலால் மனஉளைச்சலுக்கு ஆளான தீபிகா கடந்த ஜூனில் சாய்குமார் உடன் பெங்களூரு சென்று திருமணம் செய்ததுடன், 2 மாதம் வெளியூரிலேயே இருவரும் தங்கியிருந்துள்ளனர். பின்னர் சாய்குமார் தீபிகாவை அழைத்துக்கொண்டு வேப்பம்பட்டில் உள்ள தனது வீட்டுக்கே வந்து தங்கத் தொடங்கியுள்ளார். தற்போது தீபிகா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இதற்கிடையே, சமீபத்தில் வேப்பம்பட்டில் உள்ள சாய்குமார் வீட்டுக்கு வந்து அம்மாவின் உடல்நிலை சரியில்லாததால் தனது வீட்டுக்கு வரவேண்டும் என தீபிகாவை அழைத்துள்ளார் பாலகுமார். ஆனால், பாலகுமார் உடன் செல்ல தீபிகா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர் பாலகுமார் வீட்டில் சத்தமாகக் கூச்சலிட்டுள்ளார்.

கூடவே குண்டர்களை அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. பாலகுமாரின் சத்தத்தைக் கேட்டு வெளியே இருந்த குண்டர்கள் சாய்குமாரின் வீட்டுக்குள் புகுந்து தீபிகாவைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். அப்போது கையில் வைத்திருந்த பவுடர் கலந்த அமிலத்தை தீபிகாவின் முகத்தில் பூசுவதற்கு அவர்கள் முயற்சி செய்துள்ளனர்.

பாக்கியலட்சுமி - தீபிகா நாத்தனார் - தீபிகா
பாக்கியலட்சுமி - தீபிகா நாத்தனார் - தீபிகா

அப்போது தீபிகாவின் மாமியாரும், அவரது நாத்தனாரும் அதை தடுக்க முயன்றுள்ளனர். பாலகுமார் மற்றும் அவருடன் வந்தவர்கள் மூவரையும் தாக்கியதுடன், கும்பல் அனைவர் முகத்திலும் அமிலத்தைப் பூசியுள்ளனர். இதில் மூன்று பெண்களும் வலியில் கதறி துடித்துள்ளனர். அமிலம் பூசியதால் அவர்கள் முகம் வெந்ததுபோல் வந்துள்ளது. வேதனையில் துடித்த மகளை கர்ப்பிணி என்றும்கூட பாராமல் மீண்டும் பாலகுமார் அடித்ததாகச் சொல்கிறார்கள். பின்னர், தீபிகா மயக்கமடைய அவரை காரில் கடத்திச் சென்றுள்ளார் பாலகுமார்.

சம்பவம் அறிந்துவந்த சாய்குமாரின் தந்தை பாலாஜி இதுதொடர்பாக செவ்வாய்ப்பேட்டை போலீஸில் புகார் கொடுத்துள்ளார். பின்பு இரவு 7 மணி அளவில் தீபிகாவை வேப்பம்பட்டு மெயின் ரோட்டில் இறக்கிவிட்டுள்ளார் பாலகுமார். அவரை மீட்ட போலீஸார் 3 பெண்களையும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

பாக்கியலட்சுமி - தீபிகா நாத்தனார் - தீபிகா
பாக்கியலட்சுமி - தீபிகா நாத்தனார் - தீபிகா

போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடத்திச் சென்றபோது `சாய்குமாரை விட்டு வந்துவிட வேண்டும் என்றும் இல்லையென்றால் உன்னைக் கொலை செய்துவிடுவேன்' என்று பாலகுமார் மிரட்டியதாக தீபிகா கூறியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக செவ்வாய்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதுடன் தலைமறைவாகி உள்ள பாலகுமாரையும் அவருடன் வந்தவர்களையும் தேடி வருகின்றனர்.

பின் செல்ல