சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுரேஷின் மனைவி கர்ப்பமடைந்தார். இவர்களுக்கு 6 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு சுரேஷின் மனைவி அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், வேலை முடிந்து மதுபோதையில் வீட்டுக்கு சுரேஷ் வந்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ், `இந்தக் குழந்தை என் சாயலில் இல்லை..!' என்று கூறியப்படி அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு தெருவுக்குச் சென்றார். பின்னால் அவரின் மனைவி ஓடி வந்தார். கண் இமைக்கும் நேரத்தில் குழந்தையை சுரேஷ் தூக்கி வீசினார். அதனால் குழந்தை அழுதது. அதைப்பார்த்த சுரேஷின் மனைவி அதிர்ச்சியடைந்ததோடு ஓடிச் சென்று குழந்தையை தூக்கினார். வலியால் குழந்தை அழுது கொண்டே இருந்தது. மேலும் தூக்கி வீசியதில் குழந்தைக்கு காயம் ஏற்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உடனடியாக சுரேஷின் மனைவி குழந்தையைத் தூக்கிக் கொண்டு எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள், எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். அதனால் மேல் சிகிச்சைக்காக குழந்தையை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தகவல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் சுரேஷின் மனைவியிடம் விசாரித்தனர்.

பின்னர் அவர் அளித்த தகவலின்படி சுரேஷிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 6 மாத குழந்தையை தந்தையே வீசிய சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணைக்குப்பிறகு சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.