பணம், மனிதர்களை குற்றம் செய்யத் தூண்டுகிறது என்பதைப் பல சந்தர்ப்பங்களில் பார்க்க முடிகிறது. சொந்த ரத்த பந்தங்கள்கூட பண விவகாரத்தில் விட்டுக்கொடுப்பதில்லை. பெங்களூரில் சொந்த மகனை, பண விவகாரத்தில் தந்தை எரித்துக் கொலை செய்திருக்கிறார்.
பெங்களூரு வால்மீகி நகரில் வசிப்பவர் சுரேந்திர குமார். இவரின் மகன் அர்பித். சுரேந்திர குமார் சொந்தமாகக் கட்டுமானம் மற்றும் ஃபேப்ரிகேஷன் நிறுவனம் வைத்திருக்கிறார். அவருக்கு அர்பித் துணையாக இருந்துவந்தார். கடந்த சில மாதங்களாக தந்தை, மகன் இடையே பணப் பிரச்னையில் கருத்து வேறுபாடு இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. அர்பித் ரூ.1.5 கோடிக்கு தனது தந்தையிடம் சரியாகக் கணக்கு காட்டவில்லை என்றும், இது தொடர்பாக தந்தை, மகன் இடையே கடந்த வாரம் அலுவலகத்துக்குள் வைத்தே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதில் அர்பித் சரியான விளக்கம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சுரேந்திர குமார் அலுவலகத்தில் இருந்த பெயின்ட்டில் கலக்கப் பயன்படும் தின்னாரை (Thinner) எடுத்து தன் மகன் மீது ஊற்றினார். உடனே அர்பித் அலுவலகத்திலிருந்து வெளியில் ஓடி வந்தார். அவரைப் பின் தொடர்ந்து ஓடிவந்த சுரேந்திர குமார் தீப்பெட்டியிலிருந்து தீக்குச்சியை எடுத்து பற்ற வைத்து தன் மகன்மீது வீசினார். அர்பித் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சினார். ஆனால் முதல் முயற்சியில் தீ அர்பித் மீது படவில்லை. அப்படியிருந்தும் விடாமல் இரண்டாவது முறையாக தீக்குச்சியில் தீயைப் பற்றவைத்து தன் மகன் மீது போட்டார் சுரேந்திர குமார்.
இதில் அர்பித் மீது தீ பிடித்துக்கொண்டது. அர்பித் தீயுடன் தெருவில் உதவி கேட்டு ஓடினார். பக்கத்தில் இருப்பவர்கள் அவர் மீதான தீயை அணைத்து மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனார் அர்பித். சுரேந்திர குமார் மீது போலீஸார் கொலை வழக்கு பதிவுசெய்து, கைதுசெய்து விசாரித்துவருகின்றனர். அதோடு சுரேந்திர குமார் தன் மகனை விரட்டி விரட்டி தீவைத்த வீடியோ காட்சியும் இப்போது சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.