Published:Updated:

பெற்ற மகன் குடும்பத்தையே எரித்துக் கொலைசெய்த கொடூர தந்தை!

குடும்பத்தினருடன் முகம்மது பைசல்
பிரீமியம் ஸ்டோரி
குடும்பத்தினருடன் முகம்மது பைசல்

அறைக்குப் பூட்டு... காலிசெய்யப்பட்ட தண்ணீர்த் தொட்டி... பெட்ரோல் குண்டு வீச்சு...

பெற்ற மகன் குடும்பத்தையே எரித்துக் கொலைசெய்த கொடூர தந்தை!

அறைக்குப் பூட்டு... காலிசெய்யப்பட்ட தண்ணீர்த் தொட்டி... பெட்ரோல் குண்டு வீச்சு...

Published:Updated:
குடும்பத்தினருடன் முகம்மது பைசல்
பிரீமியம் ஸ்டோரி
குடும்பத்தினருடன் முகம்மது பைசல்

1984-ம் ஆண்டு சென்னையில் தன் குடும்ப உறுப்பினர்கள் ஒன்பது பேரைக் கொடூரமாகக் கொலைசெய்தான் ஜெயப்பிரகாஷ். அதன் பிறகும் பல்வேறு குடும்பங்களில் இப்படியான சம்பவங்கள் நடந்திருக்கின்றனதான்... ஆனால், கேரளாவில் தந்தையே தன் மகன், மருமகள், இரண்டு பேத்திகளை பெட்ரோல் ஊற்றிக் கொலைசெய்ததுடன், எந்தவகையிலும் அவர்கள் தப்பித்துவிடக் கூடாது என்று கொடூரமாக திட்டங்களைத் தீட்டியது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் இடுக்கி மாவட்டம், தொடுபுழா அருகேயுள்ள சீனிக்குழியைச் சேர்ந்தவர் 79 வயதான ஹமீது. இவரின் மகன்கள் ஷாஜி மற்றும் முகம்மது பைசல். இவர்களில் இரண்டாவது மகன் முகம்மது பைசலுக்கு, ஷீபா என்ற மனைவியும், மெஹ்ரீன் (16), அஸ்னா (13) என இரண்டு மகள்களும் இருந்தார்கள். மார்ச் 18-ம் தேதி நள்ளிரவு முகம்மது பைசல், அவரின் மனைவி மற்றும் இரு குழந்தைகள் வீட்டின் அறையில் தூங்கிக்கொண்டிருந்தபோது, பெட்ரோல் ஊற்றி, தீவைத்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஹமீது
ஹமீது

இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத்துறைக்குத் தகவல் கொடுத்தார்கள். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்துவிட்டுப் பார்த்தபோது பெட்ரூமிலுள்ள குளியலறையில் பைசலின் குடும்பத்தினர் கட்டியணைத்தபடி கருகிய நிலையில் இறந்துகிடந்தார்கள். அவர்களின் உடல்களைத் தனித்தனியாகப் பிரித்து பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதற்குள் போலீஸாரே கலங்கிவிட்டார்கள். தொடர்ந்து நடந்த விசாரணையில், சொத்துப் பிரச்னையால் பைசலின் குடும்பத்தை, பெற்ற தந்தையான ஹமீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலைசெய்தது தெரியவந்தது. இதையடுத்து ஹமீது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனது குடும்பத்தைக் கொலைசெய்ய ஹமீது தீட்டிய திட்டங்களைக் கேட்ட போலீஸாரே கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்!

பெற்ற மகன் குடும்பத்தையே எரித்துக் கொலைசெய்த கொடூர தந்தை!

இந்த வழக்கை விசாரித்த போலீஸாரிடம் பேசினோம்... ‘‘ஹமீதின் தந்தை மக்கார், தன் பேரனான முகம்மது பைசலுக்கு தானமாகச் சொத்துகளை எழுதிவைத்திருக்கிறார். ‘என் அப்பாவின் சொத்து எனக்குத்தான் சொந்தம். நீ எப்படி வைத்துக்்கொள்ளலாம்?’ என்று மகன் பைசலிடம் தகராறு செய்துவந்திருக்கிறார் ஹமீது. இதனால், பைசல் வேறொரு வீட்டை புதிதாகக் கட்டிவந்தார். அந்த வீட்டின் பணிகள் 95 சதவிகிதம் முடிந்த நிலையில், அங்கு விரைவில் குடியேறவும் முடிவுசெய்திருந்தார். இந்த நிலையில்தான், ஹமீது தனது மகன் பைசலின் குடும்பத்தையே எரித்துக் கொலை செய்துவிட்டார். இதற்காக அவர் மிகக் கொடூரமாகத் திட்டங்கள் தீட்டியதுதான் அதிர்ச்சியளிக்கிறது.

நான்கைந்து பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி, துணியைத் திரியாக அதில் பொருத்தியிருக்கிறார். கொலைசெய்யும்போது யாரும் தப்பிவிடக் கூடாது என்பதற்காக, மகனும் அவரின் குடும்பத்தினரும் தூங்கிக்கொண்டிருந்த அறையின் கதவை வெளிப்புறமாகப் பூட்டியிருக்கிறார். பின்னர் வீட்டின் பிரதான வாசலையும் வெளிப்புறமாகப் பூட்டியிருக்கிறார். பைசல் தூங்கிக்கொண்டிருந்த அறை அட்டாச்டு பாத்ரூம் வசதிகொண்டது. பாத்ரூமிலிருந்து தண்ணீரைப் பிடித்து தீயை அணைத்துவிடக் கூடாது என்பதற்காக, மாடியிலிருக்கும் தண்ணீர் தொட்டியிலிருந்து தண்ணீரைத் திறந்து வெளியேற்றியிருக்கிறார். வெளியிலிருந்து யாராவது வந்து மின் மோட்டாரை இயக்கி தீயை அணைத்துவிடக் கூடாது என்பதற்காகக் கிணற்றின் மின் மோட்டார் ஒயரையும் துண்டித்திருக்கிறார். அதன் பிறகு வீட்டுக்கு வெளியே நின்றபடி ஜன்னல் வழியாக பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களைக் கொளுத்தி மகனின் அறைக்குள் வீசியிருக்கிறார். தீப்பற்றியதும் மகனும் அவரின் குடும்பத்தினரும் அலறித்துடித்து பாத்ரூமுக்குள் சென்று கதவை மூடியிருக்கிறார்கள். அப்போதும் விடாமல் பெட்ரோல் பாட்டில்களைக் கொளுத்தி பாத்ரூம் நோக்கி வீசியிருக்கிறார். இதில் இரண்டு பெண் குழந்தைகள் உட்பட நான்கு பேரும் தீயில் கருகி இறந்திருக்கிறார்கள்.

குடும்பத்தினருடன் முகம்மது பைசல்
குடும்பத்தினருடன் முகம்மது பைசல்

அங்கிருந்து கிளம்பிய ஹமீது தன் உறவினர்களிடம், ‘என் மகன் குடும்பத்தை எரித்துக் கொலை செய்துவிட்டேன்’ என்று சொல்லிவிட்டு, எங்களிடம் வந்து சரணடைந்தார். நாங்கள் விசாரித்தபோதுகூட அவரிடம் எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லை. ‘மட்டன், மீன் வறுவலோடு மதியச் சாப்பாடு வேண்டும்’ என்று கேட்டு வாங்கி வயிறு நிறைய சாப்பிட்டார். ‘ஏன் கொலை செய்தீர்கள்?’ என்று கேட்டதற்கு, ‘நல்ல சாப்பாடு சாப்பிட்டு, பல நாள்கள் ஆகிவிட்டன, ஜெயிலில்கூட வாரத்துக்கு ஒரு நாள் மட்டன் கிடைக்கும். அதைக்கூட மகன் வாங்கித் தரவில்லை’ என்று சொன்னார். இந்தக் கொடூரக் கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றனவா என்று விசாரித்துவருகிறோம்” என்றார்கள்!

முன்னதாக கடந்த பிப்ரவரி 25-ம் தேதியே பைசல் தொடுபுழா காவல் நிலையத்தில், ‘என் தந்தை ஹமீது கொலை மிரட்டல் விடுக்கிறார்’ என்று புகார் அளித்திருந்தார். குடும்பப் பிரச்னை என்பதால் அப்போது போலீஸார் சமாதானம் செய்து அனுப்பியிருக்கிறார்கள். இந்த நிலையில், “அப்பாவைச் சிறையிலிருந்து வெளியே விட்டுவிடாதீர்கள். பைசலைக் கொலை செய்வேன் என்று உறவினர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். சொன்னபடியே செய்துவிட்டார். அவர் வெளியே வந்தால் என்னையும், என் குடும்பத்தினரையும் கொலைசெய்துவிடுவார்” என்று பீதியுடன் கூறுகிறார் அவரின் மூத்த மகன் ஷாஜி!

79 வயதில் எங்கிருந்து வந்தது இவ்வளவு வன்மம்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism