Published:Updated:

உசிலம்பட்டியைத் தொடர்ந்து ஆண்டிபட்டி... கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யப்பட்டதா பெண் சிசு?!

ஆண்டிபட்டி
ஆண்டிபட்டி

ஆண்டிபட்டி அருகே, பிறந்து ஆறு நாள்கள் ஆன பெண் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்து, உறவினர்களே புதைத்தாக எழுந்த குற்றச்சாட்டில், போலீஸார் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது மொட்டனூத்து கிராமம். இங்கு வசிக்கும் சுரேஷ், கவிதா ஆகியோருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 10, 8, 2 ஆகிய வயதில் பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 26-ம் தேதி மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தை மார்ச் 2-ம் தேதி இறந்துவிட்டதாகக் கூறி வீட்டின் அருகே அடக்கம் செய்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்துள்ளனர். அப்புகாரின் அடிப்படையில், விசாரணையில் இறங்கிய மாவட்டக் குழந்தைகள் நலக்குழுவினர், நேரடியாகக் கள ஆய்வில் இறங்கினர்.

குழந்தை
குழந்தை

அப்போது, சுரேஷ் மற்றும் கவிதா இருவரும் முன்னுக்குப் பின் முரணான தகவல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மொட்டனூத்து கிராம நிர்வாக அலுவலர் ஜோதியை விசாரணை செய்யுமாறும், தனக்கு அறிக்கை அளிக்கும்படியும் ஆண்டிபட்டி தாசில்தார் உத்தரவிட்டார். விசாரணை செய்த ஜோதி, சுரேஷ் - கவிதா தம்பதிகள் மீது சந்தேகம் இருப்பதாக, ராஜதானி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப போலீஸார் திட்டமிட்டுள்ளனர். பெண் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்ததாக, சமீபத்தில், மதுரை மாவட்டத்தில், சிலர் கைதான நிலையில், தற்போது தேனி மாவட்டத்திலும் அதே போன்றதொரு சம்பவம் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`ஏழ்மையும் எதிர்காலத்தை நினைத்த பயமும்தான் காரணம்!' - உசிலம்பட்டி சிசுக்கொலையில் அதிரவைத்த பெற்றோர்
அடுத்த கட்டுரைக்கு