Published:Updated:

ஆந்திரா: பெண் இன்ஜினீயர் கொலை; கொரோனா மரணம் என நாடகம்! - தீ வைத்து எரித்த கணவர் சிக்கியது எப்படி?

ஸ்ரீகாந்த் ரெட்டி

விவாகரத்து முடிவிலிருந்த மனைவியை கொலை செய்த கணவன், உடலை சூட்கேஸில் கிடத்தி தீயிட்டு கொளுத்தியச் சம்பவம், திருப்பதியில் திடுக்கிட செய்துள்ளது.

ஆந்திரா: பெண் இன்ஜினீயர் கொலை; கொரோனா மரணம் என நாடகம்! - தீ வைத்து எரித்த கணவர் சிக்கியது எப்படி?

விவாகரத்து முடிவிலிருந்த மனைவியை கொலை செய்த கணவன், உடலை சூட்கேஸில் கிடத்தி தீயிட்டு கொளுத்தியச் சம்பவம், திருப்பதியில் திடுக்கிட செய்துள்ளது.

Published:Updated:
ஸ்ரீகாந்த் ரெட்டி

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் ராமசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடப்பா. இவரின் 27 வயது மகள் புவனேஸ்வரி, ஹைதராபாத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில், சாப்ட்வேர் இன்ஜினீயராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கடப்பா மாவட்டம் பத்வேல் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ரெட்டி என்பவர் புவனேஸ்வரிக்கு அறிமுகம் ஆனார். இருவருக்குமான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. ஸ்ரீகாந்த் ரெட்டியைத் திருமணம் செய்து கொள்வதற்காக தன் பெற்றோரிடம் சம்மதம் கேட்டிருக்கிறார், புவனேஸ்வரி. ‘‘வேலை வெட்டிக்குச் செல்லாதவன்; சமூக ஆர்வலர் என்று சொல்லி தனக்குத் தானே விளம்பரம் தேடிக்கொள்கிறான். அவனை நம்பி எப்படி உன் வாழ்க்கையை ஒப்படைப்பது’’ என்று புவனேஸ்வரிக்குப் பெற்றோர் புத்திமதி கூறியிருக்கிறார்கள். எனினும் பெற்றோரின் அறிவுரையையும் மீறி அடம் பிடித்து ஸ்ரீகாந்த் ரெட்டியை கரம் பிடித்தார். தற்சமயம், இந்த தம்பதியருக்கு இரண்டு வயதில் காருண்யஸ்ரீ என்ற பெண் குழந்தை இருக்கிறாள்.

கொலைச் செய்யப்பட்ட புவனேஸ்வரி
கொலைச் செய்யப்பட்ட புவனேஸ்வரி

இதனிடையே, கருத்து-வேறுபாடு காரணமாக ஸ்ரீகாந்த் ரெட்டியுடன் புவனேஸ்வரிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. சமூக ஆர்வலர் போர்வையில், பலரிடம் ஸ்ரீகாந்த் ரெட்டி பணமோசடியில் ஈடுபட்டுவந்ததாகவும் கூறப்படுகிறது. கணவனின் செயலால், இல்லற வாழ்க்கையை வெறுத்துப்போன புவனேஸ்வரி விவாகரத்து செய்யும் முடிவிலும் இருந்துள்ளார். இந்த நிலையில், கொரோனா காரணமாக வீட்டிலிருந்து பணிபுரிந்துவந்த புவனேஸ்வரி, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருப்பதி டி.ஆர்.பி சாலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கணவன், குழந்தையுடன் வாடகைக்கு இடம் பெயர்ந்தார். அப்போதும், அவர்களுக்குள்ளான பிரச்னை தீரவில்லை. கடந்த 22-ஆம் தேதி மீண்டும் சண்டைப் போட்டுள்ளனர். ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த் ரெட்டி, மனைவி புவனேஸ்வரியை அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், கொலையை மறைக்க வீட்டில் அமர்ந்து சாவகாசமாக திட்டம் வகுத்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன்படி, சிகப்பு நிற சூட்கேஸ் ஒன்றில், மனைவியின் உடலை கிடத்திய ஸ்ரீகாந்த் ரெட்டி டாக்சியை வரவழைத்துள்ளார். டாக்சி வந்ததும் ஓட்டுநரிடம் விவரத்தைச் சொல்லி பணம் கொடுப்பதாகக் கூறியிருக்கிறார். ஓட்டுநரும் உதவுவதாகச் சொல்லியிருக்கிறார். இதையடுத்து, சூட்கேஸை அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து ஒரு கையில் இழுத்துக் கொண்டும், இன்னொரு கையில் குழந்தையை சுமந்தபடியும் வெளியே வந்த அவரிடமிருந்து சூட்கேஸை வாங்கிய டாக்ஸி ஓட்டுநர் டிக்கியில் தூக்கி வைத்துள்ளார். இதையடுத்து, ஓட்டுநருடன் டாக்ஸியில் ஏறிய ஸ்ரீகாந்த் ரெட்டி திருப்பதி ரூயா அரசு மருத்துவமனை வளாகத்துக்குச் சென்று அங்குள்ள புதர் மறைவில் சூட்கேஸை வீசியதுடன், அதனை திறந்து மனைவியின் உடலைப் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். அப்போதும், குழந்தை அவரின் கையில் இருந்துள்ளது. எரிவது தாயின் சடலம்தான் என்றுகூட குழந்தைக்குத் தெரியவில்லை. கொடூரத்தை நிகழ்த்தியப் பின், ஓட்டுநருடன் அங்கிருந்து புறப்பட்ட ஸ்ரீகாந்த் ரெட்டி, எந்தவித படபடப்புமில்லாமல் குழந்தையுடன் கர்னூலுக்குச் சென்று பதுங்கியிருக்கிறார்.

புவனேஸ்வரி உடல் அடைக்கப்பட்ட சூட்கேஸை இழுத்துச்செல்லும் ஸ்ரீகாந்த் ரெட்டி.
புவனேஸ்வரி உடல் அடைக்கப்பட்ட சூட்கேஸை இழுத்துச்செல்லும் ஸ்ரீகாந்த் ரெட்டி.

மகள் புவனேஸ்வரியின் செல் நம்பருக்குத் தினமும் போன் செய்யும் அவரின் பெற்றோர், அன்றைய நாளும் போன் செய்துள்ளனர். போன் சுவிட்ச்-ஆஃப் செய்யப்பட்டிருந்ததால், மருமகன் ஸ்ரீகாந்த் ரெட்டியைத் தொடர்பு கொண்டு ‘மகளிடம் பேச வேண்டும்’ என்று கூறியுள்ளனர். சுதாரித்துக்கொண்ட ஸ்ரீகாந்த் ரெட்டி, ‘‘புவனேஸ்வரி டெல்டா பிளஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்துள்ளேன்’’ என்று கூறியிருக்கிறார். ‘மகளுக்கு என்ன ஆனதோ, எப்படி இருக்கிறாளோ?’ என்று பதறி மறுநாள் போன் செய்த மாமனார், மாமியாரிடம், ‘‘உங்கப் பொண்ணு கொரேனாவுல இறந்துட்டா. ஹாஸ்பிட்டல் நிர்வாகம் அவ உடலைத் தர மறுத்துட்டாங்க’’ என்று கூறி நம்ப வைத்துள்ளார் ஸ்ரீகாந்த் ரெட்டி. அவர்களும், மகளை இழந்துவிட்ட துயரச் செய்தியை உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, 23-ஆம் தேதியன்றே சூட்கேஸில் எரிக்கப்பட்ட சடலத்தை திருப்பதி போலீஸார் கைப்பற்றினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உடல் 90 சதவிகிதம் கரிக்கட்டையாக எரிந்துப் போயிருந்ததால், உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. ஆணா, பெண்ணா என்கிற பாலின வேறுபாடும்கூட கண்டறிய முடியாமல் இருந்தது. ஆனாலும், கொலை என்ற முடிவில் போலீஸார் உறுதியாக இருந்தனர். தடயவியல் சோதனை மற்றும் மருத்துவர்களின் பிரேத அறிக்கையில் இறந்தவர் பெண் என்பது தெரியவந்தது. இதையடுத்து, விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீஸார், சித்தூர் மாவட்டத்தில் சமீபத்தில் மாயமானவர்களின் பட்டியலை சேகரிக்கத் தொடங்கினர். இந்த நிலையில், கர்னூலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சி பெறும் புவனேஸ்வரியின் உறவினர் ஒருவரின் தகவலின்பேரில், கைப்பற்றப்பட்ட சடலத்தின் அடையாளங்களுடன் புவனேஸ்வரியின் அடையாளமும் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது. அது ஒத்துப்போனதால், போலீஸார் உட்பட அனைவருமே அதிர்ந்து போயினர். விசாரணையின் கோணமும் புவனேஸ்வரியின் கணவன் மீது திரும்பியது.

ஸ்ரீகாந்த் ரெட்டி
ஸ்ரீகாந்த் ரெட்டி

‘‘கொரோனாவால் மனைவி இறந்துவிட்டதாகவும், உடலைக்கூட மருத்துவமனை நிர்வாகம் தரவில்லை’’ எனவும் கூறியிருந்த ஸ்ரீகாந்த் ரெட்டியைப் பிடிக்க அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்குப் போலீஸார் விரைந்தனர். அவர் அங்கு இல்லை என்றதும், அங்குப் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளைப் போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், சடலம் கண்டெடுக்கப்பட்ட அதே சிகப்பு நிற சூட்கேஸை ஸ்ரீகாந்த் ரெட்டி வீட்டிலிருந்து இழுத்துச் சென்று டாக்ஸியில் ஏற்றுவது தெளிவாகப் பதிவாகியிருந்தது. இதையடுத்து, செல்போன் சிக்னலை ஆய்வு செய்து, கர்னூலில் பதுங்கியிருந்த ஸ்ரீகாந்த் ரெட்டியைப் போலீஸார் நேற்று கைது செய்து திருப்பதிக்கு அழைத்துவந்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மனைவியை கொன்று எரித்துவிட்டு நாடகமாடியதை ஒப்புக்கொண்டார். இதனிடையே, பணத்துக்கு ஆசைப்பட்டு சடலத்தை எரிக்க உதவிய டாக்ஸி ஓட்டுநரையும் போலீஸார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து ஸ்ரீகாந்த் ரெட்டியிடம் போலீஸார் கிடுக்கிப்பிடியாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தந்தையின் இந்த கொடூரச் செயலால் தாயையும் இழந்து ஆதரவின்றி பரிதவிக்கிறாள், குழந்தை காருண்யஸ்ரீ.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism