ஜார்கண்டின் தூபுதனா பகுதியில் நேற்றிரவு சந்தியா தொப்னா என்ற ராஞ்சி சப் இன்ஸ்பெக்டர் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக லோடு வண்டி ஒன்று வேகமாக வந்திருக்கிறது. அதைக் கண்ட சந்தியா தொப்னா, சைகை மூலம் வாகனத்தை ஓரம் கட்டுமாறு தெரிவித்திருக்கிறார். ஆனால், கொஞ்சமும் வேகம் குறையாமல் வந்த வாகனம் சந்தியா தொப்னாமீது மோதியது.
அதில் சந்தியா தொப்னா படுகாயமடைந்தார். அதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களிடம் பேசிய ராஞ்சி போலீஸார், ``கால்நடைகளை ஏற்றிக்கொண்டு வாகனம் ஒன்று வேகமாக வந்திருக்கிறது. அதை சப் இன்ஸ்பெக்டர் தடுத்து நிறுத்த முற்பட்டிருக்கிறார். ஆனால், அந்த வாகனத்தின் ஓட்டுநர் நிறுத்தாமல், அவர்மீது மோதிவிட்டு சென்றிருக்கிறார். அதில் படுகாயமடைந்த அவர் இறந்துவிட்டார். இது தொடர்பாக சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில், அந்த வாகனத்தை இயக்கிய ஓட்டுநரைக் கைதுசெய்து, வாகனத்தை பறிமுதல் செய்திருக்கிறோம்" என்றனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
