Published:Updated:

`ரூட் தல' யார் என்பதில் பிரச்னை? - பட்டப்பகலில் பட்டாக்கத்தி அரிவாளுடன் மோதிய மாணவர்கள்!

கலிலுல்லா.ச

சென்னையில் அரிவாள், பட்டாக்கத்தியுடன் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்டது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் மோதல்
மாணவர்கள் மோதல்

சென்னை பெரம்பூரிலிருந்து திருவேற்காடுக்கு 27 E வழித்தட பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது அரும்பாக்கம் மெகா மார்ட் ஷோரூம் அருகே உள்ள நிறுத்தத்தில் பேருந்து நின்றது. அங்கே பேருந்து நிறுத்தத்தில் இருந்த சில மாணவர்கள் வேகமாகப் பேருந்துக்குள் நுழைந்தனர். அவர்களின் கைகளில் பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தனர். பேருந்துக்குள் ஏறிய சில நிமிடங்களில், அங்கு அமர்ந்திருந்த கல்லூரி மாணவர்களை அரிவாளால் வெட்டத்தொடங்கினர். பயணிகள் கண்முன்னே இச்சம்பவம் நடந்துள்ளது.

பட்டாக்கத்தி
பட்டாக்கத்தி

அருகிலிருந்த சகபயணிகள் செய்வதறியாது; அதிர்ச்சியில் உறைந்தனர். உடனே வெட்டுவாங்கிய மாணவர்கள், பேருந்தின் முன் மற்றும் பின் வாயில்களிருந்து தப்பித்து சாலைகளில் ஓடத்தொடங்கினர். இருப்பினும், அவர்களை அந்தக் கும்பல் ஓடிச்சென்று வெட்டியது. இந்த பிரச்னையில் 2-ம் ஆண்டு தத்துவப் படிப்பு மாணவர் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

இது தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அரும்பாக்கம் காவல்துறையினர் காயமடைந்த மாணவர்கள் இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

`ரூட் தல' யார் என்பதில் பிரச்னை? - பட்டப்பகலில் பட்டாக்கத்தி அரிவாளுடன் மோதிய மாணவர்கள்!

இது தொடர்பாகக் காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ``ரூட் தல பிரச்னை தொடர்பாக மாணவர்களிடையே மோதல் நடந்துள்ளது என்பது எங்களின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிப்பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். அரிவாளால் வெட்டிய மாணவர்கள் யார் என்பதை விசாரித்து வருகிறோம். பட்டப்பகலில் கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட இந்த மோதல் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.