Published:Updated:

`போலீஸ் சட்டையில் இருந்து கையை எடு!' -ரோட்டில் டீ வியாபாரிக்கும் காவலருக்கும் இடையே நடந்த மோதல்

மோதல்
மோதல்

`போலீஸ் சட்டையில் இருந்து கையை எடு' எனக் கூற, பதிலுக்கு இளைஞரான நந்தவர்மனும் `நீ முதலில் என் சட்டையிலிருந்து கையை எடு' எனக் கூறியிருக்கிறார். இதைப் பலரும் வேடிக்கைபார்த்துள்ளனர்.

கும்பகோணம் அருகே, கேனில் டீ வியாபாரம் செய்த இளைஞருக்கும் போலீஸ் ஏட்டுக்கும் மோதல் ஏற்பட்டது. இருவரும் தாக்கிக்கொள்ளும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

போலீஸுடன் மோதல்
போலீஸுடன் மோதல்

கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக இருப்பவர் தீபக் (வயது 31) இவர், கடந்த 17-ம் தேதி ஊரடங்கை மீறி மக்கள் வெளியே நடமாடுகிறார்களா என திருப்பனந்தாள் பகுதிகளில் ரோந்து சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது அந்தப் பகுதியில், நந்தவர்மன் (வயது 25) என்பவர் சைக்கிளில் கேன் வைத்து டீ விற்றுக்கொண்டிருந்துள்ளார். இதை பார்த்த தீபக், கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் டீ விற்கக் கூடாது எனக் கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, ஒருவர் சட்டையை ஒருவர் இருக்கமாகப் பிடித்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டனர். `போலீஸ் சட்டையில் இருந்து கையை எடு' என ஏட்டு கூற, பதிலுக்கு இளைஞரான நந்தவர்மனும் `நீ முதலில் என் சட்டையிலிருந்து கையை எடு' எனக் கூறியிருக்கிறார். இதைப் பலரும் வேடிக்கை பார்த்துள்ளனர்.

போலீஸ்
போலீஸ்

பின்னர் தீபக், சாலையில் கிடந்த கட்டை ஒன்றை எடுத்து நந்தவர்மனைத் தாக்க, போலீஸ் கையிலிருந்த கட்டையைப் பிடுங்கி தீபக்கைத் தாக்க பதற்றம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இருபது நிமிடங்களுக்கு மேலாக இருவருக்குமான சண்டை நடந்துள்ளது. போலீஸும், டீ விற்றவரும் தாக்கிக்கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இதையடுத்து, உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் நந்தவர்மனை போலீஸார் கைதுசெய்து வழக்குப் பதிந்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ``நந்தவர்மன், ஏற்கெனவே இரண்டு முறை போலீஸாரைத் தாக்கியுள்ளார். அதனால், நான்தான் ஊரில் கெத்து என்றும் கூறிவந்துள்ளார். தற்போது, ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸைத் தாக்கியுள்ளார். இதனால் அவரைக் கைதுசெய்து விசாரணை செய்துவருகிறோம்" என்றனர்.

இளைஞர்
இளைஞர்

சிலரோ, டீ வியாபாரம் செய்துகொண்டிருந்தவரிடம் அந்த ஏட்டு கடுமையாக நடந்துகொண்டார். அதுதான் பிரச்னைக்குக் காரணம் என்கின்றனர். இந்தச் சம்பவம், திருப்பனந்தாள் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு