Published:Updated:

'அவர்கிட்ட கடன் வாங்காதனு சொன்னாங்க.. நான்தான் கேட்கல!' - நிதிநிறுவன அதிபரால் இளைஞருக்கு நேர்ந்த கதி

கரூரைச் சேர்ந்த நிதிநிறுவன அதிபர் ஒருவர், இளைஞர் ஒருவருக்கு கொடுத்த கடனுக்காக அதிக வட்டி கேட்டு, அறையில் அடைத்து வைத்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாக்கப்பட்ட காளிமுத்து
தாக்கப்பட்ட காளிமுத்து ( நா.ராஜமுருகன் )

கரூர் மாவட்டம், பாப்பையன்பட்டியைச் சேர்ந்தவர் காளிமுத்து. விவசாய கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். இவர் குடும்பத்தின் அத்தியாவசிய தேவைக்காக, கரூரில் நிதிநிறுவனம் நடத்திவரும் சசிகுமார் என்பவரிடம், பத்தாயிரம் ரூபாயை வட்டிக்கு கடனாகப் பெற்றுள்ளார். சொன்ன வட்டியையும் சரியாகக் கொடுத்து வந்ததாகக் கூறுகின்றனர் காளிமுத்து உறவினர்கள். ஆனால், சசிகுமார், காளிமுத்துவிடம் கடுமையான அளவில் வட்டி கேட்க, அதைக்கேட்டு நொந்துபோயிருக்கிறார்.

Vikatan
தாக்கப்பட்ட காளிமுத்து
தாக்கப்பட்ட காளிமுத்து
நா.ராஜமுருகன்

'அவ்வளவு வட்டியைத் தர முடியாது. எனக்கு அந்த அளவு வட்டிகொடுக்கவும் முடியாது' என்று மறுத்துள்ளார். அதனால் கோபமான சசிகுமார், காளிமுத்துவை அறையில் அடைத்து வைத்து தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், காளிமுத்து கொடுத்த புகாரின் பேரில், கரூர் நகர காவல்நிலைய உதவி ஆய்வாளர் பிரபாகரன், சசிகுமார் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். அவர்மீது மேல்நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், கரூர் அரசு மருத்துவமனையில் காளிமுத்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது முகம், கை, முதுகு, தோள்பட்டை என பல இடங்களில் தாக்கப்பட்டதற்கான தடயங்கள் காணப்பட்டது. நம்மிடம் கண்ணீர்மல்க பேசிய காளிமுத்து,

"நான் தினமும் கூலி வேலைக்குப் போய்தான் குடும்பத்தைக் காப்பாத்துறேன். அரை வயிறு கஞ்சின்னாலும், மானம் மரியாதையோடு குடிச்சு, காலத்தை தள்ளிட்டு வந்தோம். குடும்பத்தை என் வருமானத்தை வச்சே ஓட்டிக்கிட்டு இருந்தோம். கடனெல்லாம் வாங்கியதில்லை. ஆனால், முதல்தடவையா அவசர தேவைக்கு பத்தாயிரம் ரூபாய் பணம் தேவைப்பட்டது. சொந்தக்காரங்க, நண்பர்கள் மட்டத்துல கைமாத்தா கேட்டு பார்த்தேன். எல்லாரும் கைவிரிச்சுட்டாங்க. நான் வேலை பார்த்த இடங்கள்ல கேட்டுப்பார்த்தேன். அவங்களும் இல்லைன்னாங்க. அதனால், வேற வழியில்லாம சசிகுமார்கிட்ட வட்டிக்குக் கடன் வாங்கினேன். அவர்கிட்ட பணம் வாங்க போறதைக் கேள்விப்பட்ட பலரும், 'அவர்கிட்ட பணம் வாங்காத; அசலுக்கு மேல வட்டி கேட்பார். அப்புறம் அல்லல்பட வேண்டியதுதான்'னு எச்சரிக்கை செஞ்சாங்க.

தாக்கப்பட்ட காளிமுத்து
தாக்கப்பட்ட காளிமுத்து
நா.ராஜமுருகன்

ஆனா, எனக்கு வேறு வழியில்லாததால, வாங்கினேன். ஆரம்பத்துல கம்மியாதான் வட்டி கேட்டார். ஆனால், போகப் போக அதிகமா வட்டி கேட்டார். அதுக்கு நான், 'நீங்க கேட்குற வட்டியையெல்லாம் தர முடியாது. கொஞ்சம் பொறுங்க, அசலை பொரட்டி தந்துர்றேன்'னு சொன்னேன். ஆனா, அதைக் காது கொடுத்து கேட்காத அவர், என்னைக் கெட்ட வார்த்தைகளைச் சொல்லி திட்டுவார். போகப் போக அவரோட டார்ச்சர் அதிகமாயிட்டு. நான் என் முடிவுல தெளிவாக இருக்கவும், என்னைத் தூக்கிட்டுப் போய் அறையில் அடைச்சு வச்சு கடுமையா தாக்கினார். வலிபொறுக்க முடியாம கதறுனேன். அவர்கிட்ட இருந்து தப்பிச்சு வந்து, போலீஸ்ல புகார் கொடுத்துட்டு, இப்போ சிகிச்சை எடுத்துக்கிட்டு இருக்கேன். தப்பிக்காம இருந்திருந்தா, என்னை அடிச்சே கொன்னுருப்பார் சசிகுமார்" என்றார்.