தமிழ்நாட்டிலேயே கொங்கு மண்டலத்தில் தான் புதிய புதிய நிதி மோசடிகள் நடக்கும். அந்த வகையில் பைன் பியூச்சர் நிதி நிறுவன மோசடி வழக்கு மாநிலம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கோவையைச் சேர்ந்த செந்தில்குமார், விவேக் ஆகியோர் இணைந்து பைன் பியூச்சர் என்ற பெயரில் நிதி நிறுவனத்தைத் தொடங்கினர்.

அதில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, முதலீட்டாளர்களிடம் வசூல் வேட்டை நடத்தி மோசடியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள், கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகாரளித்தனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், விவேக் சகோதரர் நித்யானந்தன் என்பவரை கைது செய்தனர். அந்த நிறுவனம் ரூ.180 கோடி மோசடி செய்தது தெரியவந்தது.

5 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை கோவை டான்பிட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். பொதுவாக வழக்கில் குற்றம் சாட்டப்பவர்களுக்கு, குற்றப் பத்திரிகை நகல் வழங்குவது வழக்கம்.
ஆனால், இந்த வழக்கில் மொத்தம் 47 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 5 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை வழங்க வேண்டுமென்றால், ரூ.1 கோடியே 75 லட்சம் செலவாகும். இதற்கு அனுமதி கேட்டு அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.

தொகை அதிகமாக இருப்பதால் அரசு அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து குற்றப் பத்திரிகை ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் வழங்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் போலீஸார் முறையிட்டனர்.
கோவை டான்பிட் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றமும் காவல்துறை கோரிக்கையை நிராகரித்து விட்டது. இதனால் குற்றப் பத்திரிகை ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் வழங்க அனுமதி கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.