பிரதமர் மோடி பாராட்டிய சலூன்கடை மோகன் மீது கந்துவட்டிப் புகார்! - போலீஸ் வழக்கு

கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்கு உதவியதற்காக பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட சலூன் கடை மோகன், கந்துவட்டி தடுப்பு வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டுவருவது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மீது கந்துவட்டிப் புகாரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை அண்ணா நகர், மேலமடைப் பகுதியில் சலூன் கடை வைத்திருப்பவர் மோகன். இவர், சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா ஊரடங்கால் மக்கள் கஷ்டப்படுவதைக் கண்டு பள்ளியில் பயிலும் மகளின் விருப்பப்படி, அவரது உயர்கல்வி செலவுக்குச் சேமித்துவைத்திருந்த பணத்தை எடுத்து, அதைக்கொண்டு மக்களுக்கு உணவுப்பொருள்களை வழங்கினார்.
இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, மன் கி பாத் வானொலி உரையில் மோகனைப் பாராட்டிப் பேசினார். அதன் பிறகு ஊடகங்கள் மூலம் பிரபலமானார் மோகன். அதைத் தொடர்ந்து அவர் மகள் நேத்ராவுக்கு, ஐ.நா-வின் கீழ் செயல்படும் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று ஒரு லட்ச ரூபாய் பரிசுடன் `ஏழ்மை ஒழிப்பு தூதர்' என்ற விருதை அறிவித்தது.

இதை முதலமைச்சர், ஆளுநர், எதிர்க் கட்சித் தலைவர் உட்பட பல பிரபலங்களும் வாழ்த்தினர்கள். நேத்ராவின் உயர்கல்விச் செலவை அரசு ஏற்றுக்கொண்டது. பல தனியார் அமைப்புகளும் மோகன் குடும்பத்தினருக்கு நிதியளித்தன. சமீபத்தில் அவர் குடும்பத்துடன் பா.ஜ.க-வில் இணைந்தார்.
இந்தநிலையில், `மோகனிடம் ரூ.30,000 கடன் வாங்கி, அதை வட்டியுடன் திருப்பிச் செலுத்திய பிறகும், அதிகமாக வட்டி கேட்டு அவர் மிரட்டுகிறார்' என்று அண்ணா நகரைச் சேர்ந்த சேங்கை ராஜன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்தப் புகார் பற்றி விசாரிக்க அண்ணா நகர் காவல்துறையினர் மோகனைப் பலமுறை அழைத்தும், அவர் வராமல் தவிர்த்திருக்கிறார். இந்தநிலையில் சேங்கை ராஜனின் புகாரின் அடிப்படையில் கந்துவட்டி தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் மோகனைத் தேடிவருகின்றனர்.

இது பற்றி விளக்கம் கேட்க, தொடர்புகொண்டபோது மோகனின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்கு உதவியதற்காக பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட சலூன் கடை மோகன், கந்துவட்டி தடுப்பு வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டுவருவது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.