Published:Updated:

`பல பெண்களின் வாழ்க்கையை அழித்துள்ளார்!’ - முன்னாள் அமைச்சரை கதிகலக்கும் மாணவியின் வீடியோ

பிரேம் குமார் எஸ்.கே.

இந்த வீடியோவை அவர் கடந்த 23-ம் தேதி பதிவிட்டார். 24-ம் தேதி முதல் அவரைக் காணவில்லை. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 Chinmayanand
Chinmayanand ( Livehindustan )

முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் மீது, சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் காணாமல் போனது தொடர்பாக வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மூன்று முறை நாடாளுமன்றத்துக்கு உறுப்பினராகத் தேர்வான இவர், வாஜ்பாய் அரசில் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.

SS Law College
SS Law College
ANI

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது எஸ்.எஸ் சட்டக்கல்லூரி. இதன் சேர்மனாக இருக்கிறார் சுவாமி சின்மயானந்த். இந்நிலையில் அக்கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர், முகநூலில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். அந்த வீடியோ பதிவில், ``நான் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் இருந்து வருகிறேன். எஸ்.எஸ் கல்லூரியில் சட்டப் படிப்பு படித்து வருகிறேன். புனிதமான சமூகத்தை சேர்ந்த ஒருவர் இங்கு பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார். அவர் தற்போது என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார். பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர்தான் எனக்கு உதவ வேண்டும். அவர் என் குடும்பத்தையும் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்.

என்ன நடக்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும். பிரதமர் மோடி, தயவுசெய்து எனக்கு உதவுங்கள். இதைச் செய்பவர் ஒரு சந்நியாசி. அவர், `காவல்துறை, மாவட்ட நீதிபதி உள்ளிட்ட பலரும் எனக்குப் பழக்கம். அவர்கள் அனைவரும் எனக்காகத்தான் நிற்பார்கள். அவர்கள் யாரும் எனக்கு எதிராகச் செயல்பட மாட்டார்கள்' என மிரட்டுகிறார்” எனக் கூறியிருந்தார்.

இந்த வீடியோவை அவர் கடந்த 23-ம் தேதி பதிவிட்டிருக்கிறார். 24-ம் தேதி முதல் அவரைக் காணவில்லை. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில் முன்னாள் மத்திய அமைச்சரும் சட்டக் கல்லூரி சேர்மனுமான சின்மயானந்த் தான் தன் மகள் காணாமல் போனதற்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

UP Police
UP Police

இதுதொடர்பாகப் பேசிய மாணவியின் தாய், ``என் மகள் கடைசியாக ரக்‌ஷா பந்தன் தினத்தன்று வீட்டுக்கு வந்தார். அவ்வப்போது அவரின் போன் ஆஃப் ஆவது குறித்துக் கேட்டேன். அப்போதும் எதுவும் சொல்லவில்லை. எப்போது எனது போன் நீண்ட நேரத்துக்கு ஆஃப் ஆகிறதோ, அப்போது நான் ஆபத்தில் இருக்கிறேன் என்று அர்த்தம்’ என்று மட்டும்தான் சொன்னார்” என்றார்.

மாணவியின் தந்தை பேசுகையில், ``என் மகள் அவரது தனிப்பட்ட பிரச்னைகள் குறித்து என்னிடம் எதுவும் பேசவில்லை. ஆனால், கடைசியாக அவர் வீட்டுக்கு வரும்போது கவலையுடன் காணப்பட்டார். இப்போது அவர் காணாமல் போய் 4 நாள்களுக்கு மேல் ஆகிறது. எனினும் சின்மயானந்த் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனக் குற்றம்சாட்டினார். மேலும், தன் மகள் தங்கியிருந்த அறைக்குத் எங்களை அனுமதிக்கவில்லை எனவும் அதை ஊடகத்தினர் முன்னிலையில் திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார்.

மாணவி விவகாரம் தொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரிகள், ``தொடக்கத்தில் மாணவி பேசிய வீடியோவை பார்த்தோம். அதில் அவர் முன்னாள் அமைச்சர் சின்மயானந்த்தை நேரடியாகக் குற்றம்சாட்டவில்லை. அதனால்தான் காணாமல் போன வழக்காக விசாரித்தோம். தற்போது அவரின் தந்தையின் புகாரின் பெயரில் சின்மயானந்த் மீது ஆள் கடத்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது” என்கின்றன

இந்த விவகாரத்தில் எனது கட்சிக்காரர் செய்வதற்கோ சொல்வதற்கோ எதுவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் சின்மயானந்த், மாணவி காணாமல்போன விவகாரத்தில் கவலையாக இருக்கிறார்.
சின்மயானந்த் வழக்கறிஞர்

இந்த விவகாரம் தொடர்பாக டி.ஜி.பி ஓ.பி.சிங் கூறுகையில், ``இந்தக் கடத்தல் வழக்கில் சில முக்கிய ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் விரைவில் மாணவி மீட்கப்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

எஸ்.எஸ் கல்லூரியின் முதல்வர் சஞ்சய் பரன்வால் பேசும்போது, ``இது ஒரு விஷயமே இல்லை. அந்த மாணவியின் வீடு கல்லூரியில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் தான் இருக்கிறது. அவர் அவ்வப்போது வீட்டுக்குச் சென்று வருவார். அவர் விடுதியில் இல்லாதபோது நாங்கள் வீட்டுக்குச் சென்றிருப்பார் என நினைத்தோம். இப்போது அவர் தந்தை புகார் கொடுத்திருக்கிறார், காவல்துறை கண்டுபிடிக்கட்டும்” என்றார் இயல்பாக.

கடத்தல் வழக்கு தொடர்பாகப் பேசிய சின்மயானந்த் தரப்பு வழக்கறிஞர் ஓம் சிங், ``இந்த விவகாரத்தில் எனது கட்சிக்காரர் சொல்வதற்கோ செய்வதற்கோ எதுவும் இல்லை. இன்னும் சொல்ல போனால் சின்மயானந்த், மாணவி காணாமல்போன விவகாரத்தில் கவலையாக இருக்கிறார். இவருக்கு கடந்த 22-ம் தேதி ஒரு மெசேஜ் வருகிறது. அதில் `உங்கள் நற்பெயரை தரைமட்டமாக்கும் வீடியோ ஒன்று என்னிடம் இருக்கிறது. அதை வெளியிடக் கூடாது என்றால் 5 கோடி ரூபாய் வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் விசாரிக்கப்பட வேண்டும்” என்றார்.

`6 பேரால் 2 நாள்களாக பாலியல் வன்கொடுமை!' - பாதிக்கப்பட்ட சிறுமிக்கே தண்டனை கொடுத்த கிராம பஞ்சாயத்து

முன்னதாக 2011-ம் ஆண்டு சின்மயானந்த் ஆசிரமத்தில் நீண்டகாலமாகத் தங்கியிருந்த பெண் ஒருவர், அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடுத்தார். அதில் அவர், என்னை நீண்டகாலமாக அடைத்து வைத்ததுடன் தன்னைத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு 2018-ம் ஆண்டில் அரசு தரப்பிலிருந்து திரும்பபெறப்படுவதாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.