Published:Updated:

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட திண்டிவனம் சிறுமி உயிரிழந்தது ஏன்?- எஃப்ஐஆரில் அதிர்ச்சி தகவல்

representational image
representational image

திண்டிவனத்தில், 16 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, உயிரிழந்தது குறித்து முதல் தகவல் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த அகிலாவின் (பெயர் மாற்றம்) 2 பெண் குழந்தைகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பிரம்மதேசம் காவல் நிலையத்தில் 2019 ஜூலை மாதத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸார் அகிலாவின் உறவினர்களான 16 பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கைதான 16 பேரும் ஜாமீனில் வெளியில் வந்துவிட்டனர். வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

representational image
representational image
`வீட்டில் திடீரென வாந்தி எடுத்தார்..' -பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த துயரம்

இந்த நிலையில், அகிலாவின் 2-வது மகளான 7 வயது சிறுமிக்கு திடீரென வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது. கழிவறைக்குச் சென்ற அந்தச் சிறுமி, அங்கேயே மயங்கிவிழுந்து இறந்தார். இதுதொடர்பாக அகிலா அளித்த புகாரின்பேரில், சென்னை கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ், முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவுசெய்துள்ளார். அந்த அறிக்கையில், சிறுமிக்கு என்ன நடந்தது என்ற விவரம் இடம்பெற்றுள்ளது.

அகிலா கொடுத்த புகாரில்... 'நான், கடந்த 2 மாதங்களாக சென்னையில் குடியிருந்துவருகிறேன். என்னுடைய சொந்த ஊர் திண்டிவனம் அருகில் உள்ள கிராமம். எனக்கும் என் தாய்மாமனுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு, தற்போது 10, 7 வயதாகுகின்றன. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், எனக்கும் என் கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் தாய்வீட்டுக்கு வந்துவிட்டேன்.

மருத்துவமனையில் சோகத்துடன் காத்திருந்த உறவினர்கள்
மருத்துவமனையில் சோகத்துடன் காத்திருந்த உறவினர்கள்
“10 பேர் எங்களை வன்கொடுமை செய்தார்கள்!”- மகள்களின் கதறலால் கண்ணீர் வடித்த தாய்

என்னுடைய 2 பெண் குழந்தைகளையும் அம்மா வீட்டில் விட்டுவிட்டு, நான் புதுச்சேரிக்கு வேலைக்காகச் சென்றேன். அந்தச் சமயத்தில் சித்தப்பா, பெரியப்பா மற்றும் அக்கம் பக்கத்தினர் என 15-க்கும் மேற்பட்டவர்கள் எனது குழந்தைகளிடம் தவறாக நடந்துள்ளனர். இதுதொடர்பாக 18.7.2019ல் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகாரளித்தேன். அதன்பேரில் வழக்குப்பதிந்து, குற்றம் செய்தவர்களை போலீஸார் சிறையில் அடைத்தனர். தற்போது, அவர்கள் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், நான் 2-வது திருமணம் செய்து கொண்டேன். அவருக்கும் எனக்கும் ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. தற்போது, என் கணவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்துவருகிறார். அதனால் 3 குழந்தைகளோடு சென்னையில் குடியேறினோம். என்னுடைய 2-வது மகள், 13.2.2020ல் திடீரென வயிற்றுவலி ஏற்படுவதாகக் கூறி வாந்தி எடுத்தார். உடனே நான், அருகில் உள்ள மருத்துக் கடையில் மாத்திரை வாங்கிக் கொடுத்தேன். மீண்டும் அவர் வாந்தி எடுத்ததால், குளுக்கோஸ் மற்றும் மாத்திரைகளை வாங்கிக்கொடுத்தேன்.

சென்னை அரசு மருத்துவமனை
சென்னை அரசு மருத்துவமனை

இரவு 10 மணியளவில் கழிவறைக்குச் சென்றவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றேன். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், இறந்துவிட்டதாகக் கூறினர். விசாரணை முடித்து எங்களின் குலவழக்கம்படி என் மகளை அடக்கம் செய்ய இருப்பதனால், சடலத்தை என்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியிருந்தார். அதன்பேரில், 174 பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

சென்னை கே.கே.நகர் போலீஸார் பதிந்த எஃப்ஐஆரில், 7 வயது சிறுமிக்கு 2 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொடூர சம்பவத்துக்குப் பிறகு, அவருக்கு சில தவறான பழக்கம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பழக்கத்தை கைவிடும்படி அவரின் தாயார் அடிக்கடி கண்டித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிறுமியின் சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

எப்.ஐ.ஆர்
எப்.ஐ.ஆர்

சிறுமியின் சொந்த ஊரில்தான் 2 ஆண்டுகளுக்கு முன் உறவினர்களாலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களாலும் வன்கொடுமை நடந்தது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறுமியின் சொந்தக் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் சிறுமியின் சடலத்தை உறவினர்கள் அடக்கம் செய்தனர். அப்போது, சிறுமியின் அம்மாவும் சிறுமியின் சகோதரியும் (10 வயது) கதறி அழுத காட்சி, அங்கிருந்தவர்களைக் கண்கலங்க வைத்தது.

பின் செல்ல