Published:Updated:

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது பாய்ந்த துப்பாக்கிக் குண்டுகள்; சுட்டது யார்? - தொடரும் மர்மம்!

காயமடைந்த மீனவருக்குc சிகிச்சை அளிக்கப்பட்டபோது

நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது பாய்ந்த துப்பாக்கிக் குண்டுகள்; சுட்டது யார்? - தொடரும் மர்மம்!

நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
காயமடைந்த மீனவருக்குc சிகிச்சை அளிக்கப்பட்டபோது

காரைக்கால் மாவட்டம், அக்கரைப்பேட்டையிலிருந்து விசைப்படகில் தமிழகம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த பத்து மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக, கடந்த 15-ம் தேதி புறப்பட்டுள்ளனர். நாகை மாவட்டம், கோடியக்கரை பகுதியில் நேற்று நள்ளிரவு மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு படகில் வந்த மர்ம நபர்கள் சிலர் இவர்கள்மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் மயிலாடுதுறை மாவட்டம், மானகிரி பகுதியைச் சேர்ந்த வீரவேல் (30) என்ற மீனவரின் இடது கால் மற்றும் வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்திருக்கிறது. இது குறித்து தகவலறிந்து நாகை மாவட்ட இந்திய கடற்படையினர் சம்பவம் நடந்த நடுக்கடல் பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப் புள்ளியிலுள்ள இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ் பருந்து விமானப்படைத் தளத்துக்குத் தகவல் தெரிவித்தனர். ஹெலிகாப்டர் மூலம் நடுக்கடலில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து படுகாயமடைந்திருந்த மீனவரை மீட்டு, விமானப்படை தளத்துக்கு கொண்டுவந்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு, இன்று அதிகாலை ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காகக் கொண்டுவந்தனர்.

படுகாயம் அடைந்த மீனவரை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்
படுகாயம் அடைந்த மீனவரை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பதாகவும், அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் தகவல் தீயாகப் பரவியதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மீனவர்கள் அங்கு வரத் தொடங்கினர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர்.

இது குறித்து தகவலறிந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அரசு மருத்துவமனைக்கு வந்து காயமடைந்த மீனவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் மீனவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பரபரப்பான சூழல் நிலவியத்தைத் தொடர்ந்து ஆம்புலன்ஸின் முன்னும் பின்னும் பாதுகாப்புப் பணிக்காக நான்கு ஜீப்புகளில் போலீஸார் அனுப்பிவைக்கப்பட்டனர்.

மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்ட மீனவர் வீரவேல்
மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்ட மீனவர் வீரவேல்

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர், "மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. தற்போது துப்பாக்கிக்குண்டு பாய்ந்த மீனவருக்கு இரண்டு யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கிறோம். இவர்களைத் துப்பாக்கியால் சுட்டது யார் என முழுமையான விசாரணைக்குப் பிறகு தகவல் தெரிவிக்கப்படும்” என கூறினார்.

இந்த நிலையில் இந்திய கடற்படையினர்தான், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தகவல்கள் பரவின. அதை இந்திய கடற்படை அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதனால் தமிழக மீனவரைத் துப்பாக்கியால் சுட்டது யார், அவருடன் வந்த மற்ற ஒன்பது மீனவர்களின் கதி என்ன என்பது தற்போது வரை மர்மமாகவே இருக்கிறது.