Published:Updated:

எட்டி உதைக்கப்பட்ட பைக்; கெத்துகாட்டிய லோடுமேன்! -சமாதானத்துக்குச் சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம்

பாண்டியன்
பாண்டியன்

சென்னை திருமுல்லைவாயலில் கழுத்து நிறைய செயின்களை அணிந்து கொண்டு வலம்வந்த லோடுமேன் பாண்டியனை சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றது ஒரு கும்பல்.

சென்னை அயப்பாக்கத்தை அடுத்த அஞ்சுகம் நகரைச் சேர்ந்தவர் பாண்டியன் (31). இவர், சென்னை வானகரம் மீன் மார்க்கெட்டில் லோடுமேனாக வேலை செய்துவந்தார். மீன் மார்க்கெட் இன்று இல்லாததால் பாண்டியன் வீட்டில் இருந்தார். அப்போது, பாண்டியனைச் சந்திக்க அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் இன்று காலை வீட்டுக்கு வந்தார். இருவரும் பேசியடி வீட்டிலிருந்து நடந்துவந்தனர். அப்போது, பாண்டியனிடம், அந்த நபர், `எதற்கு பன்னீர், கார்த்திக்கிடம் தகராறு செய்தாய்?' என்று கேட்டுள்ளார். அதற்கு பாண்டியன், நடந்த சம்பவத்தை விளக்கமாக விவரித்துள்ளார்.

`கிரிக்கெட் மோதல்;ஒரு கிலோ மீட்டர் விரட்டிச் சென்று கொலை!' -சென்னையில் ஓராண்டுக்குப் பிறகு அதிர்ச்சி
பாண்டியன்
பாண்டியன்

இந்தச் சமயத்தில், பாண்டியனும் அந்த நபரும் அந்தப்பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு வந்தனர். அப்போது பாண்டியனுக்காக ஒரு கும்பல் அங்கு காத்திருந்தது. பாண்டியனிடம் அந்தக் கும்பல் சமரச பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே தகராறு செய்தது. தகராறு கை கலப்பாக மாறியுள்ளது. உடனே பாண்டியன், `சமாதானம் பேசத்தானே அழைத்துவந்தீர்கள்?' என்று கேட்பதற்குள், மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளால் அவரை மர்மக்கும்பல் வெட்டிச் சாய்த்தது. ரத்த வெள்ளத்தில் பாண்டியன் கீழே சரிந்தார்.

பாண்டியனை சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்த நபரும் சேர்ந்து வெட்டியுள்ளார். அதன்பிறகு அந்தக் கும்பல் தப்பிச்சென்றது. பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள், திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் புருஷோத்தம்மன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர்.

பின்னர், பாண்டியனை மீட்ட போலீஸார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், பாண்டியன் இறந்துவிட்டதாகக் கூறினர். இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்ததும், அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன், ஆவடி உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி மற்றும் போலீஸார் அங்கு வந்து விசாரித்தனர். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர்.

`62 வயது முதியவருடன் ஏற்பட்ட திடீர் நட்பு...' -சென்னை பெயின்டரால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பாண்டியன் லோடுமேனாக வானகரம் மீன் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். எப்போதும் கழுத்து நிறைய செயின் அணிந்திருக்கும் பாண்டியன், அயப்பாக்கம் பகுதியில் கெத்து காட்டி வந்துள்ளார். இந்தச் சமயத்தில், கடந்த 3 தினங்களுக்கு முன், பாண்டியனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பாண்டியன், தகராறு செய்தவர்களின் பைக்கை எட்டி உதைத்துள்ளார். அதனால் பாண்டியனை தீர்த்துக் கட்ட அந்தக் கும்பல் திட்டமிட்டுள்ளது.

இதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் மூலம், அவரை வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு அருகில் உள்ள கோயிலுக்கு வரவழைத்துள்ளனர். அங்கு தயாராக இருந்த கும்பல் பாண்டியனை வெட்டிக் கொலை செய்தது. இதில் பாண்டியனுக்கு தலையில் 6 வெட்டும் முட்டிக்குகீழ் முழங்காலிலும் வெட்டு விழுந்துள்ளது. அதனால் தப்பி ஓட முடியாமல் கீழே விழுந்துள்ளார் பாண்டியன். இந்தக் கொலை வழக்கில், கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன" என்றனர்.

பாண்டியன்
பாண்டியன்
`எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலை வரக்கூடாது' -திருமணமான 11 மாதத்தில் விபரீத முடிவெடுத்த மனைவி

கொலை செய்யப்பட்ட பாண்டியன் மீது பள்ளிக்காரணை காவல்நிலையத்திலும் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்நிலையத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், இந்தக் கொலை சம்பவத்தில் பாண்டியன், அதேபகுதியைச் சேர்ந்த சிலரிடம், என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது எனக் கெத்து காட்டி வந்துள்ளார். அதுதான் பாண்டியன் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்துவருகின்றனர். மேலும், இந்தக் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளிகள் என்ற தகவலும் போலீஸாருக்குத் தெரியவந்துள்ளது.

பாண்டியன் கொலை செய்யப்பட்ட தகவல் தெரிந்ததும், அவரின் குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து கதறி அழுதனர். பொதுமக்களைப் பார்த்ததும் கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பாண்டியனுக்கு உஷா என்ற மனைவியும் 8 வயதில் மகனும் உள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு