Published:Updated:

`நண்பனின் மனைவியோடு நட்பு; கடத்தல் பணத்தில் தகராறு!' -மீன் வியாபாரிக்கு மீஞ்சூரில் நேர்ந்த கொடூரம்

கொலை செய்யப்பட்ட கணேஷ்குமாருடன் சபரிதா
கொலை செய்யப்பட்ட கணேஷ்குமாருடன் சபரிதா

நண்பன் மனைவியுடன் ஏற்பட்ட நட்பு மற்றும் கடத்தல் பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு ஆகியவை காரணமாக மீன் வியாபாரி மீஞ்சூரில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் (30). இவர் திருவொற்றியூரில் மீன் வியாபாரம் செய்துவந்தார். இவர் கடந்த 5 மாதங்களாக திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரத்தில் குடியிருந்து வந்தார். கணேஷ்குமாருடன் சபரிதா என்ற பெண்ணும் வசித்துவந்தார்.

சடலமாக கணேஷ்குமார்
சடலமாக கணேஷ்குமார்

இந்தநிலையில் நேற்று 4 பேர் கொண்ட கும்பல் கணேஷ்குமார் வீட்டுக்கு வந்தது. பின்னர் அவர்கள் கணேஷ்குமாருடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் கணேஷ்குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அந்தக் கும்பலிடம் சிக்காமல் சபரிதா உயிர் தப்பினார். பின்னர் கணேஷ்குமார் உயிரிழந்ததை உறுதிப்படுத்திவிட்டு அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

இதுகுறித்து மீஞ்சூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கணேஷ்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணைக்காக சபரிதாவை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

சபரிதா
சபரிதா

சபரிதா அளித்த தகவலின்படி போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். இதற்கிடையில் மீஞ்சூர் காவல்நிலையத்தில் பசுபதி என்பவர் தன்னுடைய கூட்டாளிகள் 2 பேருடன் கத்தி, அரிவாளுடன் சரண் அடைந்தார். அவர்களிடம் விசாரித்தபோது கணேஷ்குமார் கொலைக்கான காரணம் தெரியவந்தது.

தொழிலதிபர் கடத்தல்:

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கணேஷ்குமார் என்கிற சத்யாவின் நண்பர் பசுபதி. இவர்கள் இருவர் மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன் செங்குன்றத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை இந்தக் கும்பல் கடத்தி 6 லட்சம் ரூபாய் பறித்துள்ளது. கணேஷ்குமார், அடிக்கடி பசுபதி வீட்டுக்குச் சென்றுவந்துள்ளார். அப்போது பசுபதியின் மனைவி சபரிதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பசுபதிக்கும் அவரின் மனைவி சபரிதாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கணவரைப் பிரிந்த சபரிதா மீஞ்சூர் பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

`30 கி.மீ சைக்கிள் பயணம்; 200 கேமராக்கள் ஆய்வு' - மனைவி, மகன் கொலை வழக்கில் சிக்கிய சென்னை ஊழியர்
பசுபதியுடன் சபரிதா
பசுபதியுடன் சபரிதா

இந்தநிலையில் வழக்கு ஒன்றில் கைதான பசுபதி, சிறைக்குச் சென்றுவிட்டார். அதன்பிறகு கணேஷ்குமார், சபரிதா இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இந்தத் தகவல் தெரிந்ததும் பசுபதி ஆத்திரமடைந்தார். சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் வந்த பசுபதி தன்னுடைய கூட்டாளிகளுடன் கணேஷ்குமாரை கொலை செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தச் சமயத்தில் தொழிலதிபரைக் கடத்தி பணம் பறித்த வழக்கில் பசுபதிக்குரிய பங்கை கணேஷ்குமார் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் கணேஷ்குமாரிடம் பணம் கேட்டு பசுபதி மிரட்டிவந்துள்ளார்.

போனில் பேசிய பசுபதி:

இந்தச் சமயத்தில் நேற்று மதியம் சபரிதா வீட்டுக்கு பசுபதி மற்றும் அவரின் கூட்டாளிகள் சென்றுள்ளனர். அங்கிருந்த கணேஷ்குமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சரண் அடைந்த பசுபதி மற்றும் அவரின் கூட்டாளிகள் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். இந்தக் கொலை வழக்கில் மேலும் ஒருவரைத் தேடிவருகிறோம். இந்த வழக்கு தொடர்பாக சபரிதா அளித்த தகவலை வாக்குமூலமாக பதிவு செய்துள்ளோம்" என்றனர்.

சபரிதாவிடம் விசாரிக்கும் போலீஸ்
சபரிதாவிடம் விசாரிக்கும் போலீஸ்

சபரிதா கூறுகையில், ``என்னுடைய கணவர் பசுபதி எனக்கு போன் செய்து பேசினார். அப்போது உன்னைச் சந்திக்க வருகிறேன் என்று கூறினார். அதற்கு வீட்டில் கணேஷ்குமார் இருப்பதாகக் கூறினேன். அதனால் எனக்கும் பசுபதிக்கும் சண்டை ஏற்பட்டது" என்றார்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கணேஷ்குமார் கொலை வழக்கில் பசுபதி, முத்து, மணிகண்டன் ஆகியோரை கைது செய்துள்ளோம். கொலை வழக்கில் சிறைக்குச் சென்ற பசுபதியை கணேஷ்குமார் ஜாமீனில் எடுத்துள்ளார். அப்போதுதான் சபரிதாவுக்கும் கணேஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் கணேஷ்குமாரை பசுபதி கும்பல் கொலை செய்துள்ளது" என்றார்.

பட்டப்பகலில் மீஞ்சூரில் நடந்த இந்தக் கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு