ராமேஸ்வரம் அருகே கடந்த 24-ம் தேதி கடலில் பாசி எடுக்கும் வேலைக்குச் சென்ற மீனவப் பெண் மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். மேலும், அவர் உடலைக் காட்டுக்குள்வைத்து எரித்துள்ளனர். அவரின் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இது குறித்து அப்பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட இறால் பண்ணையில் வேலை பார்த்த ஆறு வடமாநில வாலிபர்களைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் பிரகாஷ், ரஞ்சன் ராணா ஆகியோர் நகைக்காகக் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்களை மண்டபம் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்த போலீஸார் துருவித் துருவி விசாரணை நடத்தியதில் மீனவப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலைசெய்ததை ஒப்புக்கொண்டனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் அளித்த வாக்குமுலம் குறித்து போலீஸார் தெரிவித்ததாவது, ``தினமும் மீனா கடலில் தனியாகப் பாசி எடுக்கவருவதை இறால் பண்ணையில் வேலை பார்த்துவந்த இந்த இருவரும் நோட்டமிட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் கடலில் பாசி எடுக்க வந்த மீனாவிடம், தாங்கள் சமைப்பதற்காக கடலில் மீன்பிடித்து வைத்துள்ளதாகவும், வந்து சுத்தம் செய்துகொடுக்கும்படியும் கூறியுள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்காக மீனா சென்றுள்ளார்.
அங்கு மீன்கள் எதுவும் அவர்கள் பிடித்துவைத்திருக்கவில்லை. `என்னை எதற்காக அழைத்து வந்தீர்கள்?’ என மீனா கேட்டுள்ளார். அப்போது தங்களுடன் உறவுகொள்வதற்காக அழைத்துவந்ததாக கூறியதாகத் தெரிகிறது. அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மீனா அவர்களிடமிருந்து தப்ப முயன்றுள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் மீனாவைத் தப்பவிடாமல் கை கால்களைப் பிடித்து, வாயை மூடி இறால் பண்ணையின் மோட்டார் அறைக்குத் தூக்கிச் சென்று மாறி மாறிக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபின்னர் அவரின் சேலையாலேயே கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அவரின் தாலி, தோடு, மெட்டி ஆகிய நகைகளைப் பறித்துகொண்டு, யாருக்கும் தெரியாமல் உடலை காட்டுக்குள்வைத்து எரித்துவிட்டு, எதுவும் தெரியாததுபோல் இறால் பண்ணைக்கு வேலைக்குச் சென்றுள்ளனர்.
பின்னர் திருடிய நகைகளை ராமேஸ்வரத்தில் உள்ள நகைக்கடைகள் மற்றும் அடகுகடைகளுக்கு விற்கச் சென்றுள்ளனர். அவர்கள் கொண்டு சென்ற தாலி, மெட்டி ஆகியவற்றைப் பார்த்த நகைக்கடை உரிமையாளர்கள் இது தமிழ்நாட்டுப் பெண்கள் கட்டக்கூடிய தாலி உங்களுக்கு எப்படிக்` கிடைத்தது?’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் நகைகளை விற்க முடியாமல் இறால் பண்ணையின் மோட்டார் அறையில் புதைத்துள்ளனர்.

எப்படியும் கொலை செய்தது மறுநாள் தெரிந்துவிடும் என அஞ்சிய இருவரும் தன்னுடன் வேலை பார்க்கும் மற்ற நான்கு பேரையும், இங்கு சம்பளம் சரியாகக் கொடுக்க மாட்டார்கள் வேறு இடத்தில் வேலை கேட்டிருக்கிறோம் எனக் கூறி அவசர அவசரமாக ஊருக்குச் செல்ல ஆன்லைன் மூலம் டிக்கெட் போட்டுள்ளனர். கிராம மக்கள் கண்டுபிடித்து சுற்றிவளைத்துத் தாக்கியதால் தப்பிக்க முடியாமல் சிக்கிக்கொண்டதாக அவர்கள் தெரிவித்தது பதைபதைக்க வைத்தது’’ என போலீஸார் கூறினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும் ``அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கொலையை எப்படி செய்தனர் என இருவரையும் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று நடித்துக் காட்டவைத்து வீடியோ பதிவு செய்துகொண்டோம், அதேபோல் நகையை விற்கச் சென்ற நகைக்கடைகளில் அவர்கள் வந்து சென்ற சிசிடிவி வீடியோ பதிவுகளையும் சேகரித்துள்ளோம். விரைவில் முழு ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளோம்’’ எனத் தெரிவித்தனர்.

மீனவப் பெண் கொலையில் கூடுதல் ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக, அந்தப் பெண் இறந்து கிடந்த கடற்கரையோர காட்டுப் பகுதியில் போலீஸார் டிரோன் கேமரா முலம் ஆய்வு செய்தனர். அப்போது கடலின் மேல் பறந்த கேமரா திடீரென சிக்னல் கட்டாகி கடலில் விழுந்தது. மீனவர்கள் மூலம் நீண்ட நேரம் தேடியும் கேமராவைக் கண்டுபிடிக்க முடியாததால் போலீஸார் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட மீனவப் பெண்ணுக்கு இதுவரை தமிழக முதலமைச்சர் எந்த ஓர் அனுதாபமோ, அறிக்கையோ விடவில்லை. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணமும் அறிவிக்கவில்லை. இதைக் கண்டித்து 30-ம் தேதி போராட்டம் நடத்தவிருப்பதாக ராமேஸ்வரம் அனைத்து மீனவர் சங்கப் பிரதிநிதிகளின் அவசரக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.