Published:Updated:

`அழுகிய நிலையில் 5 சடலங்கள்; வீட்டில் கைப்பற்றப்பட்ட சுத்தியல்!’- டெல்லியில் மீண்டும் ஓர் அதிர்ச்சி

டெல்லி போலீஸார்
டெல்லி போலீஸார்

டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி பாஜன்பூர் நகரைச் சேர்ந்தவர் ஷாம்பூநாத் (வயது 43). மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரது பூர்வீகம் பீகார். பிழைப்புத்தேடி 20 வருடங்களுக்கு முன்பு டெல்லி வந்துள்ளார். திருமணம் ஆன பின் டெல்லியில் நிரந்தரமாகத் தங்கியுள்ளனர். கடந்த சில நாள்களாக ஷாம்பூநாத் வீடு பூட்டியே காணப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு விரைந்த போலீஸார் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அவர்கள் கண்ட காட்சி அதிரவைத்துள்ளது.

டெல்லி போலீஸார்
டெல்லி போலீஸார்

உடல் அழுகிய நிலையில் 5 பேர் சடலமாகக் கிடந்துள்ளனர். இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்காக உடல்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்த சடலங்கள் ஷாம்பூநாத் மற்றும் அவரின் குடும்பத்தினர் என்பதை போலீஸார் உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், ``ஷாம்பூநாத் இந்தப் பகுதிக்கு வந்து 5 மாதங்கள்தான் ஆகின்றன. மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். குழந்தைகள் மூவரும் பள்ளிப்படிப்பு படித்து வந்துள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு ஜூஸ் கடை நடத்தி வந்துள்ளார். இப்போது ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். குழந்தைகளை நல்லபடியாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காகக் கடுமையாக உழைத்து வந்துள்ளார்.

உயிரிழந்த டெல்லி தம்பதி
உயிரிழந்த டெல்லி தம்பதி

இரவு 11 மணியளவில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்ததையடுத்து நாங்கள் அங்கு விரைந்தோம். வீடு வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 5 பேரும் சடலமாகக் கிடந்தனர். உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டன. இதை வைத்து பார்க்கும்போது சம்பவம் நடந்து 5 நாள்கள் இருக்கும் எனத் தெரிகிறது.

`பட வாய்ப்புக்காக மும்பை பிளான்; மனைவிமீது சந்தேகம்!’- டி.வி தொகுப்பாளினி கொலையில் சிக்கிய கணவர்

வீட்டில் இருந்து சுத்தியல் மற்றும் ரம்பம் உள்ளிட்ட சில பொருள்களைக் கைப்பற்றியுள்ளோம். வீட்டின் உள்பக்க கதவு உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருந்தது. ஷாம்பூநாத் மட்டுமே மொபைல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். மற்றவர்களிடம் போன் எதுவும் இல்லை. உறவினர்களிடம் விசாரித்ததில் இவர்களுக்கு பணப்பிரச்னை இருப்பதாகத் தெரியவில்லை. சடலங்கள் வெவ்வேறு அறைகளில் இருந்தன. குழந்தைகள் மூவரும் ஒரு அறையிலும் ஷாம்பூநாத் மற்றும் அவரின் மனைவி மற்றொரு அறையில் சடலமாகக் கிடந்தனர்.

`அழுகிய நிலையில் 5 சடலங்கள்; வீட்டில் கைப்பற்றப்பட்ட சுத்தியல்!’- டெல்லியில் மீண்டும் ஓர் அதிர்ச்சி

வீட்டில் கொள்ளை போனதற்கான எந்தத் தடயமும் இல்லை. இது கொலையா அல்லது தற்கொலையா? என்பது குறித்தும் இப்போதைக்குத் தெரியவில்லை. உடல்கள் அழுகியிருந்ததால் காயங்கள் எதுவும் எங்களால் அடையாளம் காணமுடியவில்லை. ஷாம்பூநாத்தே தன் குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இந்த வழக்கில் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே முழுமையான தகவல்கள் தெரியவரும்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு