Published:Updated:

`அவளை விட்டுவிட்டு.. நீ கிளம்பு'- காதலியைக் காப்பாற்ற முடியாத சோகத்தில் உயிரை மாய்த்த இளைஞர்

இரவு 10 மணியளவில் பன்ஸ்வாரா டவுனில் இருந்து தன்னுடைய கிராமத்துக்கு காதலியை பைக்கில் அழைத்துவந்துள்ளார், அந்த இளைஞர்.

தற்கொலை
தற்கொலை

ராஜஸ்தானின் பன்ஸ்வாரா பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர், சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலை குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்தனர். அப்போது, அந்த இளைஞரின் காதலியிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெண்ணின் வாக்குமூலம் குறித்துப் பேசிய போலீஸார், `தற்கொலை செய்துகொண்ட அந்த இளைஞரும் அந்தப் பெண்ணும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்துவந்துள்ளனர். இதனால் அந்தப் பெண் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

தற்கொலை
தற்கொலை

இதற்கிடையே, கடந்த மாதம் 13-ம் தேதி இரவு 10 மணியளவில், பன்ஸ்வாரா டவுனில் இருந்து தன்னுடைய கிராமத்துக்கு காதலியை பைக்கில் அழைத்துவந்துள்ளார். அப்போது அவர்களை வழிமறித்த சுனில், விகாஸ், ஜிதேந்திரா ஆகிய 3 இளைஞர்கள், `அவளை இங்கேயே விட்டுவிட்டு நீ கிளம்பு' என்று அந்தக் காதலனிடம் கூறியுள்ளனர்.

ஆனால் அவர் மறுக்கவே, அவரை சரமாரியாக இரும்புக்கம்பியால் தாக்கி, அவரிடம் இருந்த செல்போனைப் பறித்ததுடன், அந்தப் பெண்ணையும் அங்கிருந்து தூக்கிச் சென்றுள்ளனர். யாரும் இல்லாத பகுதியில் வைத்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர், அந்த பெண்ணை தங்களது கிராமத்துக்கு தூக்கிச்சென்ற மூன்று பேரும், தங்கள் நண்பர்களான நரேஷ், விஜய் என்ற இருவரை வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பிறகு, மறுநாள் காலையில் அந்த பெண்ணை ரோட்டில் இறக்கிவிட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில், காதலியைக் காப்பாற்ற முடியாத வருத்தத்தில் இருந்த காதலன், தனது ஊருக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த தற்கொலைகுறித்து விசாரிக்கும்போது, அவரது செல்போனைக் காணவில்லை என்ற தகவல் கிடைத்தது. செல்போன் இயங்கிக்கொண்டிருந்தாலும் வேறொரு இடத்தில் இருப்பது தெரியவந்தது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இதையடுத்து, செல்போன் சிக்னலை வைத்து தொடர்புகொள்ளும்போது, குற்றவாளிகளில் ஒருவரான ஜிதேந்திரா, அந்த செல்போனை தனது மனைவிக்குக் கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில் மழுப்பலான பதிலைக் கூறியுள்ளார். பின்னர், இறந்த இளைஞருக்கு கடைசியாக யார் போன் செய்தார்கள் என்பதை ஆராயும்போது, அவரது காதலிதான் கடைசியாக தொடர்புக்கொண்டது தெரிந்தது. கர்ப்பம் கலைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில், நடந்த சம்பவம்குறித்து புகார் அளித்தார். அதன்படி, தற்போது எஸ்.சி/எஸ்.டி பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து, 5 பேரையும் கைதுசெய்துள்ளோம்' என்கின்றனர் போலீஸார்.