Published:Updated:

`4 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையைக் கன்னத்தில் அடித்ததால் பழிவாங்கினேன்' - கொலை வழக்கில் கைதான மகன்!

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம்
கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம்

தூத்துக்குடியில் வீட்டின் முன்பு அமர்ந்து பேசிக்கொண்டிருந்த கட்டடத் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த ஐந்து பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள மேலபாண்டவர் மங்கலத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர், கடந்த 14-ம் தேதி இரவில் தனது வீட்டின் வாசாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர்கொண்ட கும்பல் கனகராஜை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது. அப்போது, கனகராஜின் தாயார் பார்வதி தடுக்க முயன்றிருக்கிறார். இதில், பார்வதிக்குக் காயம் ஏற்பட்டது. கனகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள்

கனகராஜின் வீட்டின் அருகேயுள்ள பாலகிருஷ்ணனுக்கும் கனகராஜுக்கும் ஏற்கெனவே முன் விரோதம் இருந்துவந்ததாகவும், இதனால் கனகராஜை பாலகிருஷ்ணன் வெட்டிக் கொலை செய்திருக்கலாம் எனவும் பேசப்பட்டது. இதையடுத்து, கனகராஜின் உறவினர்கள், பாலகிருஷ்ணனின் வீட்டை அடித்து நொறுக்கினர். இதனால் மேலபாண்டவர் மங்கலம் கிராமத்தில் பதற்றம் நிலவியது. 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் விசாரணையை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட கனகராஜூவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கனகராஜைத் தன் நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிய கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து பாலகிருஷ்ணனை போலீஸார் கைதுசெய்தனர்.

உயிரிழந்த கனகராஜ் - சிகிச்சை பெற்றுவரும் பார்வதி
உயிரிழந்த கனகராஜ் - சிகிச்சை பெற்றுவரும் பார்வதி
``தம்பியின் மரணத்துக்கு பழிக்குப்பழி; மதுபானம் வாங்கிக் கொடுத்து கொலை" - சென்னையில் நடந்த கொடூரம்

போலீஸாரின் விசாரணையில் கூறிய பாலகிருஷ்ணன், ``நாலு வருஷத்துக்கு முன்னாடி தெருக்குழாயில் தண்ணி பிடிக்கிறது சம்பந்தமா எங்க வீட்டுக்கும், கனகராஜ் வீட்டுக்கும் சண்டை வந்துச்சு. அந்தச் சண்டையில கனகராஜ், எங்க அப்பா, பூலோக பாண்டியனை கன்னத்துல அறைஞ்சுட்டார். அந்த நேரத்துல ஒரு விபத்துல காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு நடக்க முடியாம இருந்தேன். தெருவுல எல்லாரோட கண்ணு முன்னாலயும்வெச்சு, எங்க அப்பாவை கனகராஜ் அடிச்சதை என்னால தாங்கிக்க முடியலை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனக்கு கனகராஜ் மேல கோவம் இருந்துச்சு. போன வாரம் வெள்ளிக்கிழமை எங்க ஏரியாவுல இருக்குற ஒரு கோயில் திருவிழாவுக்குப் போயிருந்தேன். கனகராஜும் அவரோட அப்பாவும் என்னைப் பார்த்து ஏளனமாப் பேசுனாங்க. இதனால, கனகராஜ் மேல எனக்கு ஆத்திரம் அதிகமாச்சு. கனகராஜை அடிச்சுட்டு வரலாம்னு என் நண்பர்கள் நாலு பேரைக் கூட்டிட்டு போனேன். ஆனா, அந்த நாலு பேருக்குமே தெரியாம என் பைக்கு முன் சீட்டில்வெச்சுருந்த அரிவாளை எடுத்து கனகராஜை வெட்டினேன்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம்
கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம்

நான் அரிவாளால வெட்டுவேன்னு கொஞ்சமும் எதிர்பார்க்காத என் நண்பர்கள் அங்கே இருந்து பயந்து ஓடிட்டாங்க. அரிவாளால வெட்டியதுல கனகராஜ் இறந்துபோயிட்டார்” என்றார். பாலகிருஷ்ணனுடன் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட அவரின் நண்பர்களான ரஞ்சித்குமார், சிவபெருமாள், மகேந்திரன், சரவணக்குமார் ஆகிய நான்கு பேரைக் கைதுசெய்தனர் போலீஸார். பாலகிருஷ்ணனிடமிருந்து கொலைக்காகப் பயன்படுத்தப்பட்ட அரிவாளும் பறிமுதல் செய்யப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு