Published:Updated:

`பகலில் கஞ்சா விற்பனை... இரவில் வழிப்பறி!’ - நெல்லை போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த இளைஞர்கள்

representational image
representational image

நெல்லை மாநகரப் பகுதியில் நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்பட்டது போன்று நடித்து உதவிக்கு வருபவர்களை அடித்து அவர்களிடமிருந்து இருசக்கர வாகனங்கள், பணத்தைப் பறித்துச் செல்லும் கும்பல் கைது செய்யப்பட்டனர். 

நெல்லை மாநகரப் பகுதிகள் மற்றும் சுற்றுப் புறப்பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி கொள்ளைச் சம்பவங்கள் நடப்பதாகக் காவல்துறையினருக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன. இரவு நேரங்களில் தனியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களைக் குறிவைத்து அந்தக் கும்பல் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது. 

தேசிய நெடுஞ்சாலை
தேசிய நெடுஞ்சாலை

தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் இத்தகைய துணிகரக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடும் நபர்களைப் பிடிக்க குற்றப்பிரிவு துணை ஆணையர் மகேஷ்குமார் நடவடிக்கை மேற்கொண்டார். அதனால் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சேவியர் ஆகியோர் நான்கு வழிச் சாலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் பைக்கில் வேகமாக வந்த 5 பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினார்கள். முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய ஐவரையும் தனித்தனியே விசாரித்தபோது, போலீஸார் தேடிவந்த நெடுஞ்சாலைக் கொள்ளையர்கள் அவர்கள்தான் என்பது தெரியவந்தது. 

வழிப்பறி தொடர்பாக கைதான இளைஞர்கள்
வழிப்பறி தொடர்பாக கைதான இளைஞர்கள்

அவர்களிடம் விசாரித்தபோது, நெல்லை பகுதியைச் சேர்ந்த முத்துவேல், ஹரிஹரன், மணிகண்டன், சங்கரநாராயணன், மாரிசக்தி என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் 18 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள், பகல் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி வாசல்களில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர். இரவு நேரங்களில் மது குடித்துவிட்டு நெல்லையில் தாழையூத்து முதல் பொன்னாக்குடி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் அங்குமிங்குமாகச் சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள்.

கைதான இளைஞர்கள்
கைதான இளைஞர்கள்

அப்போது தேசிய நெடுஞ்சாலையில் தனியாக இரு சக்கர வாகனங்களில் வருவோரை வழிமறித்து அவர்களிடமிருந்து பணம் நகையைக் கொள்ளையடித்துள்ளனர். இரு சக்கர வாகனங்களில் வருவோர் சிக்காவிட்டால் நெடுஞ்சாலையில் விபத்து நடந்தது போன்று நடித்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோர் உதவிக்கு நிறுத்தும்போது அவர்களிடம் கொள்ளையடித்துள்ளனர்.

இந்தக் கும்பல் தாங்கள் கொள்ளையடிக்கும் பணத்தில் குடித்துவிட்டு ஊர்சுற்றியுள்ளனர். அவர்கள் அனைவரும் இளைஞர்களாக இருப்பதால் யாரும் எளிதில் சந்தேகம் ஏற்படாதபடி செயல்பட்டு வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. 

நெல்லை வங்கி அதிகாரி வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை! - பூட்டை உடைத்து துணிகரம்

பிடிபட்ட 5 பேரிடமும் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அவர்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரூ.16,500 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் சிறையில் அடைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு