சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான மாணவர் ஒருவர், தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்த நிலையில், அண்மையில் அந்த மாணவருக்கு குற்றப்பிரிவு காவலர்கள் பேசுவதாக செல்போனுக்கு அழைப்பு வந்திருக்கிறது. மேலும் அவர்கள் அந்த மாணவரை அன்னதானப்பட்டி பகுதிக்கு வருமாறு கூறியிருப்பதாகத் தெரிகிறது. இதையடுத்து, மாணவரும் இதை நம்பி அந்தப் பகுதிக்கு சென்றிருக்கிறார். அங்கு தமிழரசன், மதன், ஏழுமலை, ஷாஜகான், முருகன் ஆகிய ஐவர் இருந்திருக்கின்றனர்.
அதன்பின்னர், அங்கு சென்ற மாணவரை குமரகிரி மலைக்கு அழைத்துச் சென்று மிரட்டியிருக்கின்றனர். அதோடு, ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக ரூ.10,000 பணத்தை தமிழரசன் என்பவரின் எண்ணுக்கு பெற்றுக் கொண்டனர். இந்த நிலையில், மாணவருக்குச் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

புகாரின்பேரில், காவல்துறையினர் சம்பந்தப்பட்ட ஐவரையும் வீட்டிலிருந்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதில் குற்றம் உறுதியான நிலையில், ஐவரையும் காவல்துறையினர் கைதுசெய்து, சிறையில் அடைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.