Published:Updated:

குமரி: முந்திச் செல்வதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்திக் கொலை - உணவு டெலிவரி பாய் கைது!

இறந்த சேவியர் பாபு

முந்திச் செல்வதில் ஏற்பட்ட பிரச்னையால் வாக்குவாதம் நடந்துகொண்டிருக்கும்போதே அந்த ஊழியர் திடீரென உணவு டெலிவரி செய்யும் பேக்கில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவர்கள் இருவரையும் சரமாரியாகக் குத்தியிருக்கிறார்.

குமரி: முந்திச் செல்வதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்திக் கொலை - உணவு டெலிவரி பாய் கைது!

முந்திச் செல்வதில் ஏற்பட்ட பிரச்னையால் வாக்குவாதம் நடந்துகொண்டிருக்கும்போதே அந்த ஊழியர் திடீரென உணவு டெலிவரி செய்யும் பேக்கில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவர்கள் இருவரையும் சரமாரியாகக் குத்தியிருக்கிறார்.

Published:Updated:
இறந்த சேவியர் பாபு

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் கப்பியறை அருகேயுள்ள புதுக்காடுவெட்டிவிளையைச் சோ்ந்தவர் சேவியர் பாபு (57). நில புரோக்கராகத் தொழில் செய்துவந்தார். இவருடைய மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுடைய இரண்டு மகள்களும் திருமணமாகி குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்துவருகிறார்கள். சேவியர் பாபு, நாகர்கோவிலை அடுத்த பள்ளவிளைப் பகுதியில் வசித்துவந்தார். நிலம் சம்பந்தமான பணிகளுக்காக சேவியர் பாபு அடிக்கடி நாகர்கோவிலிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த திங்கட்கிழமை மதியம் தன் நண்பரான நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த ஸொமேட்டோ உணவு விநியோக நிறுவனத்தின் டெலிவரி பாய் ஒருவர் முந்திச் செல்ல முயலும்போது, திடீரென அவர்கள்மீது மோதுவதுபோல் வந்திருக்கிறார். இதனால் அவரை சேவியர் பாபுவும் செல்வராஜும் ஆகியோர் கண்டித்தனர். இதனால் டெலிவரி பாய்க்கும் இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

கொலையாளி கொண்டுவந்த டெலிவரி பேக்
கொலையாளி கொண்டுவந்த டெலிவரி பேக்

பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சேவியர் பாபுவும் செல்வராஜும் தாங்கள் வந்த இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தனர். அவர்களைப் பின்தொடர்ந்து பைக்கில் சென்ற உணவு விநியோக நிறுவன ஊழியர் அவர்களிடம் மீண்டும் தகராறு செய்திருக்கிறார். வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும்போதே அந்த ஊழியர் திடீரென உணவு டெலிவரி செய்யும் பேக்கில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவர்கள் இருவரையும் சரமாரியாகக் குத்தியிருக்கிறார்.

சேவியர் பாபுவுக்கு இடது மார்புக்கு அருகிலும், முதுகுப் பகுதியிலும் பலமாக கத்திக்குத்து காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். செல்வராஜுக்கு வயிறு, தோள்பட்டை, முதுகு ஆகிய பகுதிகளில் கத்திக்குத்து விழுந்தது. டெலிவரி பாய் தான் கொண்டுவந்த பையை அங்கேயே போட்டுவிட்டு, பைக்கில் தப்பிச் சென்றுவிட்டார். படுகாயமடைந்த செல்வராஜை அருகிலிருந்தவர்கள் நாகர்கோவிலிலுள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றுவருகிறார். இது குறித்து தகவலறிந்த கோட்டார் போலீஸார் சேவியர் பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஸொமேட்டோ டெலிவரி பாய் சுபின்
கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஸொமேட்டோ டெலிவரி பாய் சுபின்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செல்வராஜ் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து கொலையாளியைத் தேடினர். கொலை நடந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுசெய்தனர். அப்போது தனியார் உணவு நிறுவன ஊழியருக்கும், சேவியர் பாபு- செல்வராஜ் ஆகியோருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது அந்த ஊழியரை சேவியர் பாபு ஹெல்மெட்டால் தாக்குவது போன்ற காட்சியும், பின்னர் அந்த ஊழியர், சேவியர் பாபுவையும் செல்வராஜையும் கத்தியால் குத்துவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. கொலைக் குற்றவாளி நாகர்கோவில் நேசமணிநகர் பெஞ்சமின் தெருவைச் சேர்ந்த சுபின் என்பதும், அவர் வள்ளியூரில் வசித்துவந்ததும் தெரியவந்தது. கொலை நடந்ததும் சுபின் தனது மோட்டார் சைக்கிளில் அஞ்சுகிராமம் வழியாக தூத்துக்குடி மாவட்டம், ஏரலுக்கு தப்பிச் சென்றிருக்கிறார். இதையடுத்து தனிப்படை போலீஸார் ஏரலுக்குச் சென்று சுபினைக் கைதுசெய்தனர்.

சுபின் மீது கோவை, ஆசாரிப்பள்ளம், கோட்டார், வடசேரி, நேசமணிநகர், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி வழக்கு, போக்சோ வழக்கு மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. அவர் ரெளடிப் பட்டியலிலும் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

கொலை
கொலை

தன்மீது பல வழக்குகள் இருப்பதால் பாதுகாப்புக்காகக் கத்தி வைத்திருந்ததாகவும், பெண்களும், வாகன ஓட்டிகளும் அதிகமாக இருக்கும் இடத்தில்வைத்து, சேவியர் பாபு தன்னை ஹெல்மெட்டால் தாக்கியதால் அவமானம் ஏற்பட்டதாகவும், அதனால் அவர்களைக் கத்தியால் குத்தியதாகவும் சுபின் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து ஆன்லைன் உணவு நிறுவனங்களிலுள்ள டெலிவரி செய்பவர்களின் வழக்கு உள்ளிட்ட விவரங்களை போலீஸார் சேகரித்துவருகின்றனர்.