Published:Updated:

பெசன்ட் நகர்: `குளிர்பானம் குடித்த சிறுமி பரிதாப பலி?!' - ஆலைக்கு சீல் வைத்த அதிகாரிகள்

`குளிர்பானம் குடித்த சிறுமி பரிதாப பலி?!'
`குளிர்பானம் குடித்த சிறுமி பரிதாப பலி?!'

பெசன்ட் நகரில், 13 வயது சிறுமி ஒருவர் குளிர்பானம் அருந்தி மயக்கமடைந்து உயிரிழந்ததை அடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குளிர்பான ஆலைக்கு தற்காலிகமாக சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (40). இவரின் மனைவி காயத்ரி (34). இந்தத் தம்பதிக்கு அஸ்வினி (16) மற்றும் தாரணி (13) என இரு மகள்கள் உள்ளனர். இளைய மகள் தாரணி அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துவந்தார். கொரோனா பரவல் காரணமாகப் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருப்பதால் இரண்டு வாரங்களுக்கு முன்பு காயத்ரி, இரு மகள்களையும் அழைத்துக்கொண்டு, சென்னை பெசன்ட் நகரை அடுத்த ஓடைக்குப்பம் பகுதியிலுள்ள தனது தாயார் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலை காயத்ரியின் இளைய மகள் தாரணி ஓடைக்குப்பம் பகுதியிலுள்ள மளிகைக் கடை ஒன்றுக்குச் சென்று பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட 10 ரூபாய் குளிர்பானம், ரஸ்னா பாக்கெட் ஆகியவற்றை வாங்கி அருந்தியிருக்கிறார். குளிர்பானம், ரஸ்னா இரண்டையும் சிறுமி தாரணி ஒன்றன் பின் ஒன்றாகக் குடித்ததாகக் கூறப்படுகிறது. குளிர்பானம் அருந்திய சில நிமிடங்களில் சிறுமி தாரணி வாந்தி எடுத்ததாகவும், பின்னர் மூக்கிலிருந்து ரத்தம் வந்து மயக்கமடைந்து கீழே சரிந்ததாகவும் கூறப்படுகிறது.

சிறுமி தாரணி
சிறுமி தாரணி

சிறுமி மயக்கமடைந்ததைக் கண்டு அதிர்ந்துபோன சிறுமியின் பெற்றோர், அக்கம்பக்கத்தினர் உடனடியாக சிறுமி தாரணியைத் தூக்கிக்கொண்டு அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றுக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமியின் உடல் முழுவதும் நீல நிறமாக மாறியதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள் உடனடியாகச் சம்பவம் குறித்து சாஸ்திரி நகர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதையடுத்து, மருத்துவமனைக்கு விரைந்த சாஸ்திரி நகர் போலீஸார் சிறுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

குளிர்பானம் அருந்திய சிறுமி மயக்கமடைந்து உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சிறுமி தாரணி குடித்த `Togito Cola' என்ற குளிர்பானத்திலிருந்து மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், குளிர்பானம் விற்பனை செய்யப்பட்ட மளிகைக் கடையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் சிறுமி குடித்த குளிர்பான பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். அப்போது அதே குளிர்பானம் சுமார் 17 பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

சிறுமி அருந்திய குளிர்பானம் மற்றும் ரஸ்னா பாக்கெட்
சிறுமி அருந்திய குளிர்பானம் மற்றும் ரஸ்னா பாக்கெட்

சம்பவம் தொடர்பாக, சாஸ்திரி நகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தநிலையில், திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த ஆத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள `அக்‌ஷயா ஃபுட் புராடக்ட்ஸ்' என்ற அந்தக் குளிர்பான உற்பத்தி ஆலையில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில், பொன்னேரி ஆர்.டி.ஓ-வும் அதிகாரிகளும் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

குளிர்பான ஆலைக்கு சீல்!
குளிர்பான ஆலைக்கு சீல்!

அப்போது ஜெகதீஷ், ஆலையில் குளிர்பானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப் பொருள்கள் குறித்த விவரங்களை அங்குள்ள ஊழியர்களிடம் கேட்டறிந்தார். மேலும், குளிர்பான ஆலையிலிருந்து சோதனைக்காக மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பிவைத்தார். அதைத் தொடர்ந்து, உடல் ஒவ்வாமை காரணமாகச் சிறுமி உயிரிழந்தாரா அல்லது குளிர்பானத்தில் நச்சுத்தன்மை இருந்ததன் காரணமாக உயிரிழந்தாரா என்பது ஆய்வில் தெரியவரும். அதுவரை குளிர்பான ஆலையைத் தற்காலிகமாக மூட உத்தரவிட்டார். ஜெகதீஷின் உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆலைக்கு சீல் வைத்தனர்.

குளிர்பானம் அருந்திய சிறுமி சில நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

மும்பை: `காட்டிக்கொடுத்த ரத்தக்கறை!’ - பிறந்த தன் குழந்தையை 7-வது மாடியிலிருந்து வீசிய சிறுமி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு