Published:Updated:

`பலவிதமாகப் பேசுவர்; செல்ஃபி எடுத்துத் திருடுவர்!'-திருவாரூரில் கைவரிசை காட்டிய வெளிநாட்டுத் தம்பதி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில், 'ஹலால்' என்ற பெயரில் இயங்கிவரும் டிபார்ட்மென்ட் ஸ்டோரில், வெளிநாட்டைச் சேர்ந்த இருவர் செல்ஃபி எடுத்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

செல்ஃபி எடுக்கும் வெளிநாட்டுப் பெண்
செல்ஃபி எடுக்கும் வெளிநாட்டுப் பெண்

முத்துப்பேட்டை ஆசாத் நகரில், முகமது சபியுல்லா என்பவர் டிபார்ட்மென்ட் ஸ்டோர் நடத்திவருகிறார். இவரது கடைக்கு வெளிநாட்டு தம்பதியினர் வந்துள்ளனர். அங்கு வந்தவர்கள், கடைக்காரரிடம் பிளேடு ஒன்றை வாங்கியுள்ளனர். அடுத்து அந்தக் கடைக்காரரிடம், `நாங்கள் இருவரும் வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வந்துள்ளோம்' எனக் கூறியுள்ளனர்.

வெளிநாட்டு பெண்
வெளிநாட்டு பெண்

பின்னர், வெளிநாட்டுப் பணத்தை எடுத்து இதை எங்கே மாற்றலாம் என்று கேட்டுள்ளனர். அதன் பின்னர், கடைக்காரரிடம் தொடர்ச்சியாக பேச்சுக்கொடுத்த நபர்கள், இங்குள்ள இந்தியப் பணத்தில் சி, எல் என்று போடப்பட்ட சீரியல் நம்பர் உள்ள பணம் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் தாருங்கள் எனக் கேட்டுள்ளனர். கடைக்காரர், `என்னிடம் அதுபோல பணம் இல்லை' எனக் கூறியுள்ளார். ஆனால் அவரை விடாமல், `சீரியல் நம்பராக இருந்தால்கூட பரவாயில்லை. பணத்தை ஒருமுறை காட்டுங்கள். நானே தேடிப் பார்க்கிறேன்' என்று தமிழில் புரியும்படி கூறியுள்ளனர்.

கடைக்காரர், 500 ரூபாய் பணக்கட்டை கொடுத்துள்ளார். அதை வாங்கிப் பார்த்த தம்பதி, `இதில் தொடர்ச்சியான சீரியல் நம்பர் இல்லை. வேறொரு பணக்கட்டு இருந்தால் தாருங்கள்' எனக்கேட்டு 2000 ரூபாய் கட்டு ஒன்றை வாங்கிப் பார்த்துவிட்டு கொடுத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், கடைக்காரர் மற்றும் அங்கு வேலை செய்த ஊழியர்களிடமும் நன்றாகப் பேசியுள்ளனர். அவர்கள் அனைவரையும் அருகே வரவழைத்து செஃல்பி எடுத்துள்ளனர். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாகப் பேசி, தன்னுடன் செல்ஃபி எடுக்கவைத்துள்ளனர். அப்போது, அவர்களைத் திசைதிருப்பித் திருடிவிட்டு அருகில் நின்ற வாகனத்தில் ஏறி சென்றுவிட்டனர்.

கடைக்காரர்களிடம் பேசும் வெளிநாட்டுப் பெண்
கடைக்காரர்களிடம் பேசும் வெளிநாட்டுப் பெண்

கடைக்காரர், அவர் சென்ற பின்பு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கட்டை சரிபார்த்தபோது, அதிலிருந்து 30 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, தனது கடையில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்தபோது, வெளிநாட்டுத் தம்பதி செல்ஃபி எடுக்கும்போது அனைவரையும் திசைதிருப்பி, 2 ஆயிரம் ரூபாய் கட்டில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் திருடுவது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடைக்காரர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்துவருகிறார்கள்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரையிடம் கேட்டபோது, ``திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் உள்ள சிசிடிவி கேமராக்கள் சோதனை செய்யப்பட்டு, தேடி வருகிறோம். விரைவில் அவர்கள் கைதுசெய்யப்படுவார்கள்'' என்றார்.

செல்ஃபி எடுக்கும் வெளிநாட்டுப் பெண்
செல்ஃபி எடுக்கும் வெளிநாட்டுப் பெண்

இதுபற்றி முத்துப்பேட்டை காவல் ஆய்வாளரிடம் கேட்டபோது, "கடைக்காரர், வெளிநாட்டவர்கள் இருவர் தன்னை ஏமாற்றி 30 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுவிட்டதாகப் புகார் அளித்தார். அதன்பிறகு, நாங்கள் வெளிநாட்டவர்கள் பணம் திருடிச் சென்றதாக வழக்குபதிவு செய்து விசாரித்துவருகிறோம். அவர்கள், பார்ப்பதற்கு வெளிநாட்டவர்கள்போல்தான் இருக்கிறார்கள்" என்றார்.

இது மட்டுமின்றி, திருவாரூர் மாவட்டத்தின் கூத்தாநல்லூரிலும் அந்த வெளிநாட்டவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.