Published:Updated:

`குரங்கு கைரேகை... நடிகைக்கே தெரியாமல் திருட்டு!' - தடயவியல் நிபுணர்களின் நேரடி அனுபவம்

குரங்கையும் அந்த நபரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் குரங்கு மூலம் அந்த நபர் வீடுகளில் கொள்ளையடித்தது தெரியவந்தது.

குரங்கு
குரங்கு

அறிவியலின் உதவியுடன் குற்றச் செயல்களை ஆராயும் துறையாகத் தடயவியல் துறை உள்ளது. இதன்மூலம் எத்தனையோ வழக்குகளில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பல ஆண்டுகளாகக் கிடப்பில் போட்ட வழக்குகள்கூட தடய அறிவியல் துறையின் தகவல்களால் முடிவுக்கு வந்துள்ளன.

தடயஅறிவியல் துறையில் பணியாற்றும் கைரேகை நிபுணர்களைச் சந்தித்தோம். அவர்கள் கூறிய தகவல்கள் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தின.

கைரேகைப் பதிவு
கைரேகைப் பதிவு

நம்மிடம் பேசிய கைரேகை நிபுணர்கள் சிலர், ``மதுரையில் தொடர்ச்சியாக வீட்டின் பூட்டுகள் உடைக்கப்படாமல் விலை உயர்ந்த பொருள்கள் மட்டும் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளை நடந்த வீடுகளில் பதிவான கைரேகைகள் வித்தியாசமாக இருந்தன. மேலும் அவை, பழைய குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒத்துப்போகவில்லை. இதனால் கொள்ளை வழக்குகள் குறித்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

இந்தச் சமயத்தில் நள்ளிரவு நேரத்தில் குரங்குடன் வந்த ஒருநபரைப் போலீஸார் பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். இதனால் குரங்கையும் அந்த நபரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் குரங்கு மூலம் அந்த நபர் வீடுகளில் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து குரங்கின் கைரேகையை நாங்கள் பதிவு செய்தோம். அப்போதுதான் கொள்ளை நடந்த வீடுகளில் பதிவாகி இருந்த கைரேகையும் குரங்கின் கைரேகையும் ஒத்துப்போனது. இதையடுத்து அந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

Vikatan

தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டியை அடுத்த பட்டவர்த்தி கிராமத்தில் நடந்த கொலைச் சம்பவம் 8 ஆண்டுகளுக்குப்பிறகு கைரேகை மூலம் துப்பு துலங்கியது. பட்டவர்த்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரை 2011-ம் ஆண்டு கொலை செய்த வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ராமு, பாலு, கிருஷ்ணன், மீனாட்சி மற்றும் வளர்மதி என 5 பேர் கைது செய்யப்பட்டனர். ராமு, பாலு, கிருஷ்ணன் ஆகியோர் சகோதரர்கள்.

இந்தக் கொலை வழக்கில் ராமு, பாலு ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கிருஷ்ணன், வளர்மதி, மீனாட்சி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைதான கிருஷ்ணன் ஒரு ராணுவ வீரர். கொலை நடந்த தினத்தன்று ராணுவத்தில் இருந்ததாகவும் தன்னுடைய பெயரைத் தவறுதலாக வழக்கில் சேர்த்துவிட்டதாகவும் கூறியதால் தண்டனையிலிருந்து அவர் தப்பினார்.

பொன்.மாணிக்கவேல்
பொன்.மாணிக்கவேல்

இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணன் போலீஸார் மீது வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாகமுத்து, ஜெயசந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய சிறப்பு அதிகாரியாக ஐ.ஜி பொன்மாணிக்கவேலை நியமித்தது.

வழக்கின் கோப்புகளை கையில் எடுத்துக் கொண்டு தருமபுரிக்குச் சென்றார் ஐ.ஜி பொன்மாணிக்கவேல். அங்கு விசாரித்தபோது, அனைவரும் கிருஷ்ணனுக்கு ஆதரவாகவே பேசினர். இதையடுத்து, கிருஷ்ணன் படித்த பள்ளிக்குச் சென்று விசாரித்தார் பொன்.மாணிக்கவேல். அப்போதுதான், அவருக்கு முக்கிய தகவல் ஒன்று கிடைத்தது.

கிருஷ்ணனின் அண்ணன் கோவிந்தசாமி குறித்த தகவல்களை கைரேகை மூலம் சேகரித்த பொன்.மாணிக்கவேல், வழக்கின் விசாரணைக் கோணத்தை மாற்றினார். இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு கிருஷ்ணனாக நடித்த கோவிந்தசாமி சிறையில் அடைக்கப்பட்டார்" என ஆச்சரியத்துடன் விவரித்தனர்.

இந்தக் கொலை வழக்கை விசாரித்த அதிகாரிகளிடம் பேசியபோது, `` கிருஷ்ணனின் அண்ணன் கோவிந்தசாமி. இவர்கள் இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பார்கள். தூக்குப்போட்டுக் கொண்டு கிருஷ்ணன் தற்கொலை செய்யப்பட்ட பிறகு அவரது கல்விச் சான்றிதழ் உட்பட ஆவணங்களையும் பயன்படுத்திய கோவிந்தசாமி, கிருஷ்ணன் என்ற பெயரில் வாழ்ந்துள்ளார். மேலும், ராணுவத்தில் கிருஷ்ணன் பெயரில் சேர்ந்தார் கோவிந்தசாமி. அதன்மூலம் ஆள்மாறாட்டம் செய்து சின்னசாமி கொலை வழக்கிலிருந்து தப்பிக்கவும் முயன்றார். ஆனால், எங்களது விசாரணையில் கிருஷ்ணன் பெயரில் ஆள்மாறாட்டம் செய்த கோவிந்தசாமி சிக்கிக்கொண்டார். 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனையும் கிடைத்தது'' என்றனர் விரிவாக.

மன்மதன் படபாணியில் ஆள்மாறாட்டம் செய்த கோவிந்தசாமியை சிக்க வைக்க முக்கிய காரணமாக இருந்தது கைரேகை.

தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டியை அடுத்த பட்டவர்த்தி கிராமத்தில் நடந்த கொலைச் சம்பவம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு கைரேகை மூலம் துப்பு துலங்கியது
விசாரணை அதிகாரிகள்

சென்னையில், நடந்த சம்பவம் இது. ஆழ்வார்பேட்டையில் உள்ள பங்களா டைப் வீட்டுக்குள் நள்ளிரவில் திருடன் கொள்ளையடிக்கச் சென்றார். அந்த வீடு பிரபலமான நடிகைக்குச் சொந்தமானது. மும்பையில் செட்டிலான அந்த நடிகை சென்னை வீட்டுக்கு அவ்வப்போது வருவதுண்டு. நடிகை வீடு என்று தெரியாமல் உள்ளே நுழைந்த திருடன், கண்ட காட்சி ஆச்சர்யத்தையும் ஆசையையும் தூண்டியது. குடிபோதையில் மயங்கிக் கிடந்த நடிகையைப் பார்த்த திருடன், அவர் அணிந்திருந்த நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு மீதமிருந்த மதுபானங்களையும் குடித்துவிட்டு தப்பினார். சம்பந்தப்பட்ட நடிகை தரப்பில் எந்தவித புகாரும் காவல் நிலையத்தில் கொடுக்கப்படவில்லை. இந்தச் சமயத்தில் நடிகை வீட்டில் திருடியவர், வேறு ஒரு வழக்கில் சிக்கியபோது இந்தத் தகவல் தெரியவந்தது. தற்போது அந்த நடிகை உயிருடன் இல்லை.