Published:Updated:

` புலியை சுட்டுக்கொல்ல 48 மணி நேரம் கெடு!' - களமிறங்கிய கர்நாடக வனத்துறை

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் இரண்டு பேரைக்கொன்ற புலியை, `ஆட்கொல்லி' என முடிவு செய்து 48 மணி நேரத்துக்குள் சுட்டுக்கொல்ல வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

Shivalingappa
Shivalingappa

தமிழகத்தின் முதுமலை புலிகள் காப்பகம், கர்நாடகத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பகம், கேரளாவின் வயநாடு காட்டுயிர் சரணாலயம் ஆகிய இந்த மூன்று வனப்பகுதிகளும் இணைந்த முச்சந்திப்பு பகுதியே உலக அளவில் காடுகளில் வங்கப் புலிகள் அதிகம் வாழும் பகுதியாக உள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பகம் 1974-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 874 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ள இந்தப் புலிகள் காப்பகத்தில் 130-க்கும் அதிகமான புலிகள் உள்ளன. புலிகள் காப்பகங்களைச் சுற்றிலும் விளைநிலங்கள், குடியிருப்புகள், சாலைகள் அதிகளவு உள்ளதால் அவ்வப்போது மனித-வனவிலங்கு எதிர்கொள்ளல் ஏற்படுகின்றன. மூன்று மாநில எல்லையோர வனப்பகுதிகளில் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் புலிகளால் தாக்கப்படுவதும், மனிதர்களால் புலிகள் கொல்லப்படுவதும் நடைபெற்றுவருகின்றன.

Shivamadaiah's dhothi was found near a bush.
Shivamadaiah's dhothi was found near a bush.

இந்தநிலையில் கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தையொட்டியுள்ள சவுதஹள்ளி பகுதியில் நேற்று காலை 10.30 மணி அளவில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிவலிங்கப்பா என்ற முதியவரை புலி தாக்கியது. அவர் சத்தம் போட்டதால் அருகில் வயல் வெளிகளில் வேலை செய்துகொண்டிருந்த மக்கள் புலியை விரட்டி இவரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால், அதற்குள் சிவலிங்கப்பாவை புலி கடித்துக் கொன்றது. பின்னர் இந்தப் பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல மணிநேரம் போராடி சிவலிங்கப்பாவின் உடலைப் புலியிடமிருந்து மீட்டனர்.

இதேபகுதியில் கடந்த ஒரு வாரத்தில் இந்தப் புலி 3 மாடுகளையும் தாக்கிக் கொன்றது. கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி இதே பகுதியைச் சேர்ந்த சிவமாதையா என்பவரையும் புலி தாக்கிக் கொன்றது. தொடர்ந்து மனிதர்களையும் கால்நடைகளையும் வேட்டையாடும் புலியால் உள்ளூர் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும், இந்தப் புலியைப் பிடிக்க வேண்டுமென போராட்டமும் நடத்திவருகின்றனர். இதனால் அவசரக் கூட்டமொன்றை நடத்திய கர்நாடக வனத்துறை இந்தப் புலியை 48 மணி நேரத்துக்குள் உயிருடன் பிடிக்க அல்லது சுட்டுக்கொல்ல உத்தரவிட்டுள்ளது.

Shivamadaiah
Shivamadaiah

இதுகுறித்து பந்திப்பூர் புலிகள் காப்பக வனஉயிர் அறிவியலாளர் ஒருவர் கூறுகையில், "இந்தப் பகுதியில் மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்குவது ஒரே புலிதான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் புலியின் உடலில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் வேட்டையாட முடியாமல் எளிய வழியாக மனிதர்களைத் தேர்வு செய்கிறது. புலியின் புகைப்படம் ஏதும் கிடைக்காததால் இது ஆண் புலியா பெண் புலியா என்பது உறுதி செய்யப்படவில்லை. 8 முதல் ஒன்பது வயது வரை இருக்கக்கூடும் எனத் தெரியவந்துள்ளது" என்றார்.

இதுகுறித்து கர்நாடக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "இதே பகுதியில் தொடர்ந்து மனிதர்களும் கால்நடைகளும் தாக்கப்படுவதால் மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். புலியைக் கண்காணிக்க பல இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கூண்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. முடிந்தவரை கூண்டில் உயிருடன் பிடிக்கவே முயற்சி மேற்கொண்டு வருகிறோம். அப்படி இல்லாதபட்சத்தில் மனித உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் இந்தப் புலி சுட்டுக் கொல்லப்படும்" என்றார்.

P.C.C.F press Relaese
P.C.C.F press Relaese

மற்றொரு அதிகாரி கூறுகையில், ``கடந்த மாதம் ஒருவரைப் புலி தாக்கிய சம்பவத்தில் இந்தப் புலி ஆட்கொல்லி என்ற முடிவுக்கு நாங்கள் வரவில்லை. மாடுகளைத் தாக்க வந்து மனிதர்களை தவறுதலாகத் தாக்கி இருக்கக்கூடும் எனக் கண்காணித்து வந்தோம். இந்த நிலையில் நேற்று மற்றொருவரைத் தாக்கியதால் இது ஆட்கொல்லி புலியாக மாறி இருக்கக்கூடும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்" என்றார்.

ஆட்கொல்லி என்ற பெயரில் கடந்த ஆறு ஆண்டுகளில் நீலகிரி மாவட்டத்தில் மூன்று புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், தற்போது இதே காரணத்தால் கர்நாடக மாநிலத்தில் சுட்டுக்கொல்லப்படுவதற்காகப் புலியைத் தேடி வரும் சம்பவம் காட்டுயிர் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.