Published:Updated:

சிதறிக்கிடந்த ஊசிகள்; அளவுக்கு அதிகமான மயக்க மருந்து! - பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடுமை

மருத்துவர் சோனம்
மருத்துவர் சோனம் ( FB/@SonamMotis )

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர், ஹரியானாவில் உள்ள தன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிய 29 வயதான சோனம் மோடிஸ் என்ற பெண், ஹரியானாவில் கடந்த திங்கள்கிழமை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அதிக மயக்க மருந்து எடுத்துக்கொண்டதே உயிரிழப்புக்குக் காரணம் என பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. சோனம் உயிரிழப்புக்கான காரணம் மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளதாக ஹரியானா போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இறப்பு
இறப்பு

தன் மகள் சோனம் உயிரிழப்பு பற்றிப் பேசிய தந்தை ஓன்கர் லால் மோரிஸ், “ ராஜஸ்தான் மாநிலம் கோடாதான் எங்கள் சொந்த ஊர். என் மகளுக்கு தற்போது 29 வயதாகிறது. மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, கடந்த 2017-ம் ஆண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார். அங்கு ஒரு வருடம் பணியாற்றிய என் மகளுக்கும் அதே மருத்துவமனையில் மருத்துவராகப் பணி செய்த ஷிகர் மோர் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் மருத்துவர்கள் என்பதால், எங்கள் மகளின் ஆசைக்கு மறுப்பு தெரிவிக்காமல் 2018 மே மாதம் இருவருக்கும் திருமணம் செய்துவைத்தோம்.

ஆனால், திருமணமான பிறகுதான் ஷிகரின் உண்மையான முகம் எங்களுக்குத் தெரியவந்தது. திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே வரதட்சணை கேட்டு என் மகளை அடித்துத் துன்புறுத்தத் தொடங்கினார். ஷிகர், போதைப் பொருள்களுக்கு அடிமையானவர். அதனால் என் மகளையும் கட்டாயப்படுத்தி போதைப் பொருள்களைக் கொடுத்துவந்தார். உடல்நிலை மோசமடைந்து, என் மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகுதான், கணவன் - மனைவிக்குள் நடக்கும் பிரச்னைகள் குறித்து எங்களுக்குத் தெரியவந்தது.

தாக்குதல்
தாக்குதல்

பின்னர் ஷிகரின் பெற்றோர், சோனமை சமாதானப்படுத்தி அவளை மட்டும் கொல்கத்தா அழைத்துச்சென்று தங்களுடன் வைத்திருந்தனர். ஆனால், அங்கும் சோனம் நிம்மதியாக இல்லை. அவர்களும் அவளை அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். இதனால் சோனம் ராஜஸ்தான் வந்து எங்களுடன் சில நாள்கள் தங்கியிருந்தாள். அப்போது அவள், சிறிய விபத்தொன்றில் சிக்கிப் படுகாயமடைந்தாள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த என் மகளைப் பார்க்க கணவரோ அவர் வீட்டினரோ யாரும் வரவில்லை. உடல்நிலை சரியான பிறகு, இந்த வருடம் செப்டம்பரில் மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிக்குச் சேர்ந்தாள்.

`திரும்பி வந்தால் என்னைக் கொன்றுவிடுவான், காப்பாற்றுங்கள்!’ -ஷார்ஜாவில் கதறிய இந்தியப் பெண்

அங்கும் அவரது கணவர் தொல்லைகொடுத்ததால், ஹரியானாவுக்குச் சென்று குருகிராமில் தனியாக வீடு எடுத்துத் தங்கி, அங்குள்ள ஒரு மருத்துவமனையில் வேலை செய்துவந்தாள். அப்போதும் அவளைவிடாத ஷிகர் மற்றும் அவரது பெற்றோர், ஹரியானாவுக்குச் சென்று அவளை அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இறுதியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை என் மகளுடன் போனில் பேசினேன். திங்கள்கிழமை காலை முதல் தொடர்ந்து போன் செய்துகொண்டே இருந்தேன், அவள் எடுக்கவில்லை. பின்னர், அவள் வசிக்கும் குடியிருப்பில் இருக்கும் வாட்ச்மேனைத் தொடர்புகொண்டு மகளைப் பற்றி விசாரித்தேன். அப்போது, `சோனம் காலையிலிருந்து வீட்டை விட்டு வெளியில் வரவில்லை’ என்ற தகவல் கிடைத்தது.

சோனம்
சோனம்
FB/@SonamMotis

இதைக் கேட்டதும் எனக்கு பதற்றமானது. என்னால் உடனடியாக ஹரியானா செல்ல முடியாது என்பதால், ஷிகருக்கு போன் செய்து அவரை ஹரியானாவுக்குச் செல்லுமாறு கூறினேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். நான் செல்வதற்குள் அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். காவலர்கள் சென்று பார்த்தபோது, என் மகள் தங்கியிருந்த வீடு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. அவர்கள் கதவை உடைத்துப் பார்த்தபோது சோனம், இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

ஷிகரும் அவரது குடும்பத்தினரும்தான் என் மகளைக் கொலை செய்திருக்க வேண்டும், இல்லை என்றால், அவர்கள் என் மகளை வற்புறுத்தி தற்கொலை செய்துகொள்ள வைத்திருக்க வேண்டும். தானாக தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு என் மகள் கோழை இல்லை” எனக் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

``சோனம் நீண்ட நேரமாக வெளியில் வரவில்லை என அக்கம்பக்கத்தினர் எங்களுக்குத் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, நாங்கள் அவரது வீட்டை உடைத்துப் பார்த்தபோது, உள்ளே அந்தப் பெண் இறந்த நிலையில் கிடந்தார். அவருக்கு அருகில் சில மாத்திரைகளும் ஊசிகளும் சிதறிக்கிடந்தன. பின்னர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தோம். அதிகப்படியான மயக்க மருந்து எடுத்துக்கொண்டதால், சோனம் உயிரிழந்துள்ளார் என அறிக்கை வெளியாகியுள்ளது.

சோனம்
சோனம்
FB/@SonamMotis

இறந்த பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஷிகர் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சோனம் பயன்படுத்திய ஊசி போன்றவை தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அனைத்து முடிவுகளும் வெளியான பிறகுதான் அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற உண்மை தெரியவரும்” என குருகிராம் காவல்துறை செய்தித் தொடர்பாளர் சுபாஷ் கூறியுள்ளார்.

சோனம் கணவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் அவர் கைதுசெய்யப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு