Election bannerElection banner
Published:Updated:

குமரி: நகை பறிக்கும்போது கூச்சலிட்ட பெண்! - குளத்தில் தள்ளிக் கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர்

கைதுசெய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ்
கைதுசெய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ்

தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று முன்னாள் ராணுவ வீரரால் குளத்தில் தள்ளிவிடப்பட்ட மேரி ஜெயாவைத் தேடினார்கள். ஆனால் அவரது சடலத்தைதான் தீயணைப்பு வீரர்களால் மீட்க முடிந்தது.

கன்னியாகுமரி மாவட்டம், முளகுமூடு பகுதியைச் சேர்ந்தவர் மெர்லின் ராஜ் (35). ராணுவத்தில் பணிபுரிந்த இவர் நடத்தை சரியில்லாத காரணத்தால் அந்தப் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் வேறு வேலைக்குச் செல்லாமல் ஊரில் சுற்றிக்கொண்டிருந்திருக்கிறார். மேலும், அவர் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்தததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று முளகுமூடு அருகே பூந்தோப்புப் பகுதியைச் சேர்ந்த மேரி ஜெயா (45) என்பவர், ரேஷன் கடைக்கு பொருள்கள் வாங்கச் சென்றிருக்கிறார். ரேஷன் கடை திறக்காததால் அவர் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மெர்லின் ராஜ், அந்தப் பெண்ணின் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றிருக்கிறார். ஆனால் செயினை விடாமல் கூச்சல் போட்டிருக்கிறார் அந்த பெண். இதைக் கேட்டு அந்தப் பகுதியினர் அங்கு ஓடிவந்ததால், அந்தப் பெண்ணை அருகிலுள்ள குளத்தில் தள்ளிவிட்டுவிட்டு தப்பி ஓட முயன்றார் மெர்லின் ராஜ்.

கொலை செய்யப்பட்ட மேரி ஜெயா
கொலை செய்யப்பட்ட மேரி ஜெயா

ஆனால், அப்பகுதி மக்கள் அவரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும், இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று குளத்தில் தள்ளிவிடப்பட்ட மேரி ஜெயாவைத் தேடினார்கள். ஆனால், அவரது சடலத்தைத்தான் தீயணைப்பு வீரர்களால் மீட்க முடிந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதற்கிடையே பொதுமக்கள் தாக்கியதாலும், பொதுமக்களிடமிருந்து தப்பிப்பதற்காக ஓடியபோதும் கீழே விழுந்த மெர்லின் ராஜுக்குக் காயம் ஏற்பட்டது. அவரையும் போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர். மெர்லின் ராஜ் மீது வீடு புகுந்து நகை திருடுவது, வழிப்பறி, அடிதடி உட்பட பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், தக்கலை மற்றும் திருவட்டார் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு மெர்லின் ராஜ் பலமுறை சிறை சென்றுவந்ததாகவும் கூறப்படுகிறது.

கைதுசெய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ்
கைதுசெய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ்

இது குறித்து திருவட்டாறு போலீஸார் கூறுகையில்,``மெர்லின் ராஜ் ராணுவத்தில் பணியாற்றிவந்திருக்கிறார். அவரது நடத்தை சரியில்லை என கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவரை ராணுவத்திலிருந்து வெளியேற்றியிருக்கிறார்கள். அதன் பிறகு தனது உடல் வலிமையைக் காட்டி பலரை அச்சுறுத்தி நகை, பணம் பறித்துவந்திருக்கிறார். இப்போது நகை பறிக்க முயன்று பெண்ணைக் கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அவர் காயமடைந்து சிகிச்சையில் இருப்பதால், கூடுதல் விவரங்கள் குறித்து விரைவில் விசாரணை நடத்துவோம்" என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு