Published:Updated:

`புதிய பயணத்தைத் தொடங்குகிறேன்!’ - முன்னாள் ஆளுநர் அஷ்வனி குமார் தற்கொலை

அஷ்வனி குமார் பதவிக் காலத்தில், தற்போது மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா மீதான போலி என்கவுன்ட்டர் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இமாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியான அஷ்வனி குமார் நேற்று இரவு அவரின் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார், அவருக்கு வயது 69. அவருடைய வீட்டிலிருந்து, அவர் எழுதிவைத்திருந்த கடிதம் ஒன்றையும் போலீஸார் கைப்பற்றியிருக்கிறார்கள்.

1973 பேட்ஜ் ஐ.பி.எஸ் அதிகாரியான அஷ்வனி குமார், 2006 முதல் 2008 வரை இமாச்சலப்பிரதேச டி.ஜி.பி-யாகப் பணியாற்றியவர். பின்னர் பதவி உயர்வு காரணமாக 2008 -ம் ஆண்டு முதல் 2010 வரை சி.பி.ஐ அமைப்பின் இயக்குநராக இருந்தார். தொடர்ந்து 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் மணிப்பூர், நாகலாந்து ஆகிய மாநிலங்களின் ஆளுநராகவும் அஷ்வனி குமார் பணிபுரிந்தார். இவருக்கு மனைவியும் ஒரு மகனும் இருக்கிறார்கள். பல்வேறு பதவிகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், தனது குடும்பத்துடன் சிம்லாவிலுள்ள தனது வீட்டில் வசித்துவந்தார்.

சிம்லா வீடு
சிம்லா வீடு

இந்தநிலையில், அவர் நேற்று இரவு வீட்டிலுள்ள தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். குடும்பத்தினர் கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் அஷ்வனி குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். தொடர்ந்து அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்துவருகின்றனர். மேலும், தற்கொலை செய்வதற்கு முன்னர் அவர் எழுதிவைத்திருந்த கடிதம் ஒன்றையும் போலீஸார் கைப்பற்றியிருக்கிறார்கள்.

கடிதம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இமாச்சலபிரதேச டி.ஜி.பி சஞ்சய் குண்டு, ``அவர் தனது ஆன்மா ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவதாக கடிதத்தில் எழுதியிருக்கிறார். மேலும், எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கும் அவர், `சடங்குகள் போன்றவை இருக்கக் கூடாது’ என்று அவர் எழுதியிருக்கிறார்” என்றார். மேலும் அவர் கூறுகையில், ``அவர் குடும்பத்தினர் அதிர்ச்சியிலிருக்கிறார்கள். `அவருக்கு மன அழுத்தம் இருந்ததாக உணர்ந்ததில்லை’ என்கிறார்கள். நேற்று மாலை வரை நன்றாகத்தான் இருந்திருக்கிறார். என்ன காரணத்துக்காக இந்த முடிவை அவர் எடுத்தார் என்று தெரியவில்லை” என்றார் டி.ஜி.பி.

இமாச்சலபிரதேச டி.ஜி.பி., சஞ்சய்
இமாச்சலபிரதேச டி.ஜி.பி., சஞ்சய்

சி.பி.ஐ -யில் முக்கிய வழக்குகளைக் கையாண்ட அஷ்வனி குமார்!

2008 முதல் 2010-ம் ஆண்டு வரை சி.பி.ஐ இயக்குநராகப் பணிபுரிந்த அஷ்வனி குமார், பல முக்கிய வழக்குகளில் விசாரணை நடத்தியிருக்கிறார். பல மர்ம முடிச்சுகளைக்கொணட ஆருஷி கொலை வழக்கை, முற்றிலும் புதிய குழு ஒன்றை அமைத்து விசாரிக்கச் செய்தது அப்போதைய சி.பி.ஐ இயக்குநர் அஷ்வனி குமார்தான். இந்தக் குழுவின் விசாரணை அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Vikatan

காமன்வெல்த் விளையாட்டு ஊழல் தொடர்பான விசாரணை தொடங்கியதும் அஷ்வனி குமார் பதவிக்காலத்தில்தான். மேலும் அவரின் பதவிக்காலத்தில்தான், தற்போது மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா மீதான போலி என்கவுன்ட்டர் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து மணிப்பூர், நாகலாந்து மாநில கவர்னராகப் பணிபுரிந்தார். 2014 -ம் ஆண்டு நாகாலாந்து கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் தலைமையிலான அரசு பதவியில் நியமித்தவர்களை, 2014 -ம் ஆண்டில் புதிதாகப் பதவியேற்ற மோடி தலைமையிலான அரசு பதவி நீக்கம் செய்யலாம் என்று கருதி அவர் ராஜினாமா செய்ததாகச் சொல்லப்பட்டது. கவர்னர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அஷ்வனி குமார் ஏபிஜி கோயல் சிம்லா பல்கலைக்கழகத்தில் 2018 -ம் ஆண்டு வரை வேந்தராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு