Published:Updated:

``திருடனாக மாறிய முன்னாள் போலீஸ்காரர்; துணிந்து போராடிய பெண்"- மோசடி வழக்கால் வேலை பறிபோனது!

செயின் பறிப்பு
செயின் பறிப்பு

ஆவடியில், அதிகாலை நேரத்தில் மீன் வாங்க தனியாகச் சென்ற பெண்ணிடம் தங்கச்செயின் பறிக்கப்பட்ட வழக்கில், முன்னாள் போலீஸ்காரர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஆவடி, ஸ்ரீதேவி நகர், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் கற்பகம். இவர், கடந்த 15-ந்தேதி அதிகாலை 5.45 மணிக்கு மீன் வாங்குவதற்காக காமராஜர் நகர், போஸ்ட் ஆபீஸ் தெருவில் நடந்து சென்றிருக்கிறார். அப்போது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒருவர், கற்பகம் அணிந்திருந்த தங்கச் செயினைப் பறித்துக்கொண்டு தப்ப முயன்றார்.

`காலையில் டிபன் கடை; மதியம் செயின் பறிப்பு!' -சென்னையில் கணவரின் தம்பியுடன் சிக்கிய இளம்பெண்
செயின் பறிப்பு
செயின் பறிப்பு

அப்போது, சுதாரித்துக்கொண்ட கற்பகம், கழுத்தில் கிடந்த தங்கச் செயினை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். அதோடு, திருடன்... திருடன் என சத்தம் போட, அவ்வழியாகச் சென்றவர்கள் கற்பகத்துக்கு உதவ முன்வந்தனர். அதைப்பார்த்த கொள்ளையன், அவசர அவசரமாக தங்கச் செயினைப் பறித்துக்கொண்டு பைக்கில் தப்பிச்சென்றான். கற்பகத்தின் கையில் பாதி செயினும் கொள்ளையனின் கையின் பாதி செயினும் சிக்கிக்கொண்டது. இதுகுறித்து கற்பகம், ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆவடி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். அப்போது, கற்பகத்திடம் தங்கச் செயினை கொள்ளையன் பறிக்கும் காட்சி மற்றும் பைக்கின் பதிவு நம்பரும் சிசிடிவி-யில் பதிவாகியிருந்தன.

அந்தப் பதிவு நம்பரின் அடிப்படையில் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அந்தப் பைக், ஆவடி நந்தவன மேட்டூரைச் சேர்ந்த சதீஷ் (35) என்பவருடையது என்று தெரியவந்தது. இதையடுத்து சதீஷிடம் போலீஸார் விசாரித்தபோது, அவர்தான் கற்பகத்திடம் தங்கச் செயினைப் பறித்தது என்பது தெரியவந்தது. இதனால் அவரை போலீஸார் கைதுசெய்தனர். பின்னர், அவரிடமிருந்து 50 கிராம் தங்க நகைகள் மற்றும் பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சதீஷிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

போலீஸ்
போலீஸ்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஆவடியைச் சேர்ந்த சதீஷ், தமிழ்நாடு சிறப்பு காவல்படை பிரிவில் காவலராகப் பணியாற்றிவந்தவர். இவர், தன்னுடைய நண்பருக்கு பணம் கொடுக்கல் வாங்கல் வழக்கில் 2019 -ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவால் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்ற உத்தரவால் சதீஷின் போலீஸ் வேலையும் பறிபோனது. சிறையிலிருந்து வெளியில் வந்த சதீஷ், பின்னர் தனது குடும்பத்தைக் காப்பாற்ற உணவு டெலிவரி வேலை செய்தார். போதிய வருமானம் இல்லாததால், செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுவந்துள்ளார். கடந்த மாதம், ஆவடி திருமுல்லைவாயல் பகுதியில் 4 இடங்களில் சதீஷ் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது'' என்றனர்.

செயின் பறிப்பு சம்பவத்தில் முன்னாள் போலீஸ்காரர் ஒருவர், ஈடுபட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு