Published:Updated:

முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கு; 6-வது குற்றவாளியாக, தம்பி கைது... பின்னணி பகிரும் போலீஸ்!

6-வது குற்றவாளியாக தம்பி கைது

முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கில் அவரின் தம்பி கைதுசெய்யப்பட்டிருப்பது குடும்பத்தினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கு; 6-வது குற்றவாளியாக, தம்பி கைது... பின்னணி பகிரும் போலீஸ்!

முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கில் அவரின் தம்பி கைதுசெய்யப்பட்டிருப்பது குடும்பத்தினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
6-வது குற்றவாளியாக தம்பி கைது

சென்னையைச் சேர்ந்தவர் மஸ்தான். அ.தி.மு.க முன்னாள் எம்.பி-யான இவர், அங்கிருந்து விலகி தி.மு.க-வில் இணைந்தார். தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் துணைத் தலைவராகவும் இருந்துவந்தார். இந்த நிலையில், செங்கல்பட்டு டோல்கேட் பகுதியில் காரில் சென்றபோது மஸ்தான், நெஞ்சுவலி காரணமாக இறந்துவிட்டதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், தன்னுடைய தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, மஸ்தானின் மகன் ஹரிஷ் ஷாநிவாஸ் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் 22.12.2022-ம் தேதி புகாரளித்தார். அதன்பேரில் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் அப்போதைய துணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி மேற்பார்வையில் கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் ஜெயராஜ் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். சிசிடிவி கேமராப் பதிவுகள், செல்போன் சிக்னல்கள், மஸ்தானின் பிரேத பரிசோதனை அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் விசாரித்தபோது, மஸ்தான் கொலைசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

மஸ்தானின் தம்பி ஆதாம் பாஷா
மஸ்தானின் தம்பி ஆதாம் பாஷா

இதையடுத்து, சம்பவம் நடந்தபோது மஸ்தானின் காரை ஓட்டிய அவரின் தம்பி மருமகன் இம்ரான் பாஷாவிடம் விசாரித்தபோது, அவர் தன்னுடைய கூட்டாளிகளோடு சேர்ந்து மஸ்தானைக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார். இம்ரான் பாஷா அளித்த தகவலின்படி அவரின் கூட்டாளிகள் தமீம் என்கிற சுல்தான், அவரின் நண்பர்கள் நஷீர், தௌபிக் அகமது, லோகேஷ்வரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கை போலீஸார் விசாரித்துவந்த நிலையில், திடீர் திருப்பமாக மஸ்தானின் தம்பி ஆதாம் பாஷாவுக்கும் இந்தக் கொலை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்த வழக்கு தொடர்பாக நம்மிடம் பேசிய கூடுவாஞ்சேரி போலீஸார், ``முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கில் இதுவரை அவரின் தம்பி மருமகன் இம்ரான் பாஷா உட்பட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். மஸ்தானுக்கும், இம்ரான் பாஷாவுக்குமிடையே 15 லட்சம் ரூபாய் வரை கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்தக் கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ஆனால், அதையும் தாண்டி இன்னொரு காரணமும் இருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது.

மஸ்தான் கொலை வழக்கில் கைதானவர்களைச் சில தினங்களுக்கு முன்பு போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தபோதுதான், இம்ரான் பாஷா தன்னுடைய மாமனார் ஆதாம் பாஷாவுடன் கொலை நடப்பதற்கு முன்புவரை தொடர்ந்து செல்போனில் பேசிவந்தது தெரியவந்தது. அது தொடர்பாக விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களை இம்ரான் பாஷா தெரிவித்தார். அதையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் மஸ்தானின் தம்பி ஆதாம் பாஷாவிடம் விசாரித்தபோது சொத்துத் தகராறு இருப்பது தெரியவந்தது.

இம்ரான் பாஷா
இம்ரான் பாஷா

மஸ்தான் கொலைசெய்யப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆதாம் பாஷா, தன்னுடைய அண்ணன் மஸ்தானின் கிளினிக்குக்குச் சென்று சொத்து தொடர்பாக சத்தம் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். இந்தத் தகவல் ஆதாம் பாஷாவின் மருமகன் இம்ரான் பாஷாவுக்குத் தெரியும். அதனால் மஸ்தானைக் கொலைசெய்துவிட்டால் சொத்துப் பிரச்னை தீர்ந்துவிடும் என இம்ரான் பாஷா கருதியிருக்கிறார். அது தொடர்பாக தன்னுடைய மாமனார் ஆதாம் பாஷாவிடமும் ஆலோசித்திருக்கிறார். மஸ்தான் கொலை வழக்கில் ஏற்கெனவே ஐந்து பேரைக் கைதுசெய்திருக்கிறோம். இதையடுத்து, மஸ்தான் கொலை வழக்கில் 6-வது குற்றவாளியாக மஸ்தானின் தம்பி ஆதாம் பாஷாவைக் கைதுசெய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடந்துகொண்டிருக்கிறது" என்றனர்.