Published:Updated:

`` எங்கள் மடியில் கனமில்லை" - சோதனை நடக்கும் விஜயபாஸ்கர் வீட்டில் குவிந்த ஆதரவாளர்கள்!

விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டுக்கு காலை 7 மணிக்குc சென்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த சில மாதங்களில், முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி உள்ளிட்டோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தினர். முன்னாள் அமைச்சர்கள் பலரின் வீடுகளிலும் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. கடந்த 2016 - 2021-க்கு இடைப்பட்ட ஐந்து வருட காலத்தில் விஜயபாஸ்கர், அவரின் மனைவி ரம்யா இருவரும் வருமானத்தைவிட ரூ.27,22,56,736 அதிகம் சொத்துச் சேர்த்ததாக அவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில்தான், அக்.18-ம் தேதி (இன்று) இலுப்பூரிலுள்ள விஜயபாஸ்கரின் வீடு, மதர்தெரசா கல்வி நிறுவனங்கள், விஜயபாஸ்கருக்குச் சொந்தமான கல்குவாரிகளில் அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டுக்கு காலை 7 மணிக்கு சென்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

குவாரி
குவாரி
`சொகுசு கார் முதல் தண்ணீர் தொட்டி வரை!' - விஜயபாஸ்கர் மாமனார் வீட்டை சல்லடை போட்ட அதிகாரிகள்!

ஐந்து வருட காலத்தில் மனைவி, மகள்கள் பெயரில் சொத்துகள், டிரஸ்ட் பெயரில் 14 கல்வி நிறுவனங்கள், பதவிக்காலத்தில் ரூ.6 லட்சம் செலவில் டிப்பர் லாரிகள், ஜேசிபி இயந்திரங்கள், ரூ.53 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபுள்யூ கார், ரூ.40 லட்சம் செலவில் 85 சவரன் நகை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான விவசாய நிலங்கள் என வருமானத்துக்கு அதிகமாக ரூ.27 கோடி அளவுக்குச் சொத்துச் சேர்த்ததாகக் கூறி இந்த ரெய்டு நடத்தப்பட்டுவருகிறது. அதிமுக பொன்விழா கூட்டத்துக்காக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னைக்குச் சென்றிருந்தார். தற்போது, அவர் சென்னையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. புதுக்கோட்டையிலுள்ள விஜயபாஸ்கரின் சகோதரர்களின் வீடுகள், விஜயபாஸ்கரின் உதவியாளர் அன்பானந்தம், சேட் என்கிற அப்துல் ரகுமான், சோத்துப்பாளை முருகேசன், சுபபாரதி கல்வி நிறுவன தாளாளர் தனசேகரன், அதிமுக நகரச்செயலாளர் பாஸ்கர், நத்தம் பண்ணை ஊராட்சி மன்றத் தலைவர் பாபு, வி.ராமசாமி, குருபாபு உள்ளிட்ட விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். புதுக்கோட்டை திருவேங்கைவாசல் குவாரி அருகே புதிதாகக் கட்டப்பட்ட பிரமாண்ட சொகுசு பங்களா ஒன்று இருக்கிறது. விஜயபாஸ்கர் புதுக்கோட்டைக்கு வரும்போது அங்கு வந்து தங்குவார் என்று கூறப்படுகிறது. குவாரியைத் தொடர்ந்து அங்கும் சோதனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. அதைச் சோதனையிட்டால், அங்கும் சில முக்கிய ஆவணங்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி இமயவர்மன் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குழுக்களாகப் பிரிந்து 29 இடங்களில் சோதனை நடத்திவருகின்றனர். இந்தச் சோதனையானது இன்று நள்ளிரவு வரையிலும் தொடரும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே அப்ரைசர் வரவழைக்கப்பட்டு, நகைகள் மதிப்பீடு செய்யும் பணியும் நடைபெற்றுவருகிறது. சோதனை முடிவில் கோடிக்கணக்கில் ஆவணங்கள் கைப்பற்றப்படும் எனத் தகவல்கள் வெளியாகின்றன. புதுக்கோட்டையைப்போல, சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விஜயபாஸ்கருக்குச் சம்பந்தப்பட்ட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.

மகாத்மா காந்தி கல்வி நிறுவனங்கள்
மகாத்மா காந்தி கல்வி நிறுவனங்கள்

புதுக்கோட்டை இலுப்பூரில் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்துவரும் சோதனையைக் கேள்விப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். அங்கு குவிந்த அதிமுக-வினர், "முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் யாருமே செய்யாத சாதனைகளைத் தொகுதிக்கும் தமிழகத்துக்கும் செய்திருக்கிறார். விராலிமலையில் அமைச்சர் தோற்பார் என்று திமுக-வினர் எதிர்பார்த்தனர். ஆனால், பெருவாரியான மக்கள் செல்வாக்கைப் பெற்று வெற்றிபெற்றார். அவரின் செல்வாக்கைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில், திமுக இந்த ரெய்டு நடவடிக்கையை எடுத்திருக்கிறது. எங்கள் மடியில் கனமில்லை. அனைத்தையும் எதிர்கொண்டு எங்கள் முன்னாள் அமைச்சர் மீண்டு வருவார். திமுக-வை வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு