Published:Updated:

`பணத்தை ரெடி பண்ணுங்க, 10 நாளில் அரசு வேலை'‍-மோசடி கும்பலிடம் 10 லட்சத்தை இழந்த தேனி இளைஞர் கண்ணீர்

பத்து நாளில் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

ஆனந்தபாபு
ஆனந்தபாபு

அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி, இளைஞர் ஒருவரிடம் 10 லட்சம் ரூபாய் ஏமாற்றிய நால்வரை போலீஸார் தேடி வருகிறார்கள். விசாரணையில், பத்து நாளில் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

முகமது மரக்காயர் & இப்ராஹிம் ஷா
முகமது மரக்காயர் & இப்ராஹிம் ஷா

தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையைச் சேர்ந்தவர் ஆனந்தபாபு. பட்டதாரி இளைஞரான இவர், பெரியகுளம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்துவந்துள்ளார். அவரை அணுகிய சிலர், நிரந்தர வேலை வாங்கித்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

`தீபாவளி பரிசு காத்திருக்கிறது என்பார்கள்... நம்பாதே..!’ - தேனியைக் கலக்கும் காவல்துறையின் மீம்ஸ்

இதுதொடர்பாக ஆனந்தபாபுவிடம் பேசியபோது, “பெரியகுளம் நெல்லையப்பர் நடுநிலைப் பள்ளி அருகே வசிக்கும் முகமது மரைக்காயர் என்பவரும், வத்தலக்குண்டு வ.உ.சி நகரில் வசிக்கும் சையது இப்ராஹிம் ஷா என்பவரும், எனக்கு அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறினர். மேலும், அரசு அதிகாரிகளுடன் தொடர்புடைய நபர் எனக் கூறி, டி.கள்ளிப்பட்டி ஆசிரியர் காலனியில் வசிக்கும் நெளசத் அலி என்பவரை எனக்கு அறிமுகம் செய்தனர். ’பணத்தை மட்டும் ரெடி பண்ணுங்க… உங்களுக்கு பத்து நாளில் அரசு வேலை வாங்கித்தருகிறேன்’ எனக் கூறினர். அவர்களை நம்பி, முதல்கட்டமாக 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தேன். சில மாதங்கள் ஆனது. வேலை கிடைத்தபாடில்லை.

நெளசத் அலி & ஜெய்லானி
நெளசத் அலி & ஜெய்லானி

அவர்களிடம் வேலை தொடர்பாகக் கேட்டேன். உடனே, தேனி ரத்னா நகரில் வசிக்கும் ஜெய்லானியை அழைத்துவந்து, அரசு போக்குவரத்துக் கழகத்தில் மேலாளராகப் பணியாற்றுகிறார் எனக் கூறி என்னிடம் அறிமுகம் செய்துவைத்தனர். போக்குவரத்துக் கழகத்தில் வேலை கிடைத்துவிடும் எனக் கூறி ஆசை வார்த்தை காட்டினர். பின்னர், வேலைக்கான ஆர்டர் கையெழுத்து ஆக இருக்கிறது. உடனே பணம் ரெடி பண்ண வேண்டும் என என்னிடம் 6 லட்சம் ரூபாய் கேட்டனர். மனைவியின் நகைகளை அடகுவைத்து 6 லட்சம் ரூபாய் கொடுத்தேன்.

ரூ.10-க்கு கிஃப்ட் வவுச்சர்... ரூ.1.6 லட்சம் மாயம்! - கே.ஒய்.சி மோசடி உஷார்!

பின்னர், குமுளி, தேனி எனப் பல இடங்களில் ரூம் போடச் சொல்லி, வேலை விசயமாகப் பேசுவதாகக் கூறி பலரையும் அழைத்துவந்தனர். இதற்காக 50 ஆயிரம் வரை செலவுசெய்தேன். இறுதியில், வேலை கிடைப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. இந்நிலையில்தான் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன். விசாரணையில், மேற்படி நபர்கள் அனைவரும் மோசடி கும்பல் எனத் தெரியவந்தது. எனக்கு என் பணம் கிடைத்தால் போதும்” என்றார் கண்ணீரோடு.

ஆனந்தபாபு
ஆனந்தபாபு

வடகரை காவல்துறையினரிடம் கேட்டபோது, “அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை செய்வதாகக் கூறி, போலியான அடையாள அட்டை வைத்திருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்ற மோசடி கும்பலிடம் இளைஞர்கள், பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை வாங்கித்தருவதாகக் கூறி பணம் கேட்டால், உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என்றனர்.