Published:Updated:

`தமிழக முன்னாள் முதல்வரோட பணம்; 1 கோடிக்கு ரூ.30 லட்சம் போதும்’ - ஜெயலலிதா பெயரில் மோசடி

Representation Image
Representation Image

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் மோசடி செய்த 4 பேரை கர்நாடக போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் கோலார் பகுதியைச் சேர்ந்தவர் ஹபீப். சென்னையைச் சேர்ந்த சிலர் தன்னை ஏமாற்றி 5 லட்சம் ரூபாயை பறித்துச் சென்றதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கறுப்புப் பணத்தை மாற்றுவதற்காக ஹபீபை சிலர் தொடர்புகொண்டுள்ளனர். அவர்கள் `தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பணம் எங்களிடம் இருக்கிறது. மாற்றித் தாருங்கள்' எனக் கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவுசெய்துள்ள போலீஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மோசடியில் ஈடுபட்ட நபர்களை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

இதுகுறித்து பேசிய காவலர்கள், ``சென்னையைச் சேர்ந்த இஸ்மாயில், அஸ்லாம், சலீம் மற்றும் ஆரிப் ஆகியோர்தான் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஹபீபைத் தொடர்பு கொண்ட இந்த நால்வரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கறுப்புப்பணம் சுமார் 2,000 கோடி எங்களிடம் இருக்கிறது. 500 ரூபாய் நோட்டுகளாக நாங்கள் 1 கோடி தருகிறோம். நீங்கள் 2,000 ரூபாய் நோட்டுகளாக 30 லட்சம் கொடுங்கள் எனக் கூறியுள்ளனர்.

ஹபீப் இதற்குச் சம்மதம் தெரிவித்து முதற்கட்ட 5 லட்சம் ரூபாயை 2,000 நோட்டுக்கட்டாக கொண்டுசென்றுள்ளார். இஸ்மாயில், அஸ்லாம் ஆகிய இருவரும் நேரில் வந்து பணத்தைப் பெற்றுக்கொண்டனர். `ரூ.1 கோடி ரூபாயை காரில் வைத்திருக்கிறோம். கொஞ்சம் இருங்கள் எடுத்து வருகிறோம்' எனக் கூறி 5 லட்ச ரூபாயுடன் இருவரும் மாயமாகிவிட்டனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஹபீப், காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு