Published:Updated:

ராமநாதபுரம்: நேருக்கு நேர் மோதிய வேன்கள் - நான்கு மீனவர்கள் உயிரிழந்த சோகம்; 19 பேர் படுகாயம்

எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மீனவர்கள்

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு கடல் அட்டை பிடிக்க அனுமதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவிட்டு, சொந்த ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்த மீனவர்கள் வேன் விபத்தில் சிக்கியதில் நான்கு மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம்: நேருக்கு நேர் மோதிய வேன்கள் - நான்கு மீனவர்கள் உயிரிழந்த சோகம்; 19 பேர் படுகாயம்

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு கடல் அட்டை பிடிக்க அனுமதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவிட்டு, சொந்த ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்த மீனவர்கள் வேன் விபத்தில் சிக்கியதில் நான்கு மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மீனவர்கள்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மண்டபம், தொண்டி, கடலாடி, சாயல்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடல் அட்டை மீதான தடையை நீக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக அந்தந்தப் பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேன்களிலும், இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகளிலும் வந்திருந்தனர்.

விபத்தில் சிக்கிய வேனில் மீட்புப் பணி
விபத்தில் சிக்கிய வேனில் மீட்புப் பணி

மண்டபம் பகுதிகளிலிருந்து மூன்று வேன்களில் வந்திருந்த மீனவர்கள் ஆர்ப்பாட்டம் முடிந்து மீண்டும் மண்டபம் நோக்கி வேனில் சென்றுகொண்டிருந்தனர். அதேநேரத்தில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா வந்துவிட்டு வேனில் சொந்த ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். மண்டபம் அகதிகள் முகாம் அருகே மீனவர்கள் சென்ற வேன் எதிர்பாராதவிதமாக சுற்றுலா வந்த ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் வேன்மீது நேருக்கு நேர் மோதியது. அப்போது பின்தொடர்ந்து வந்த மற்ற இரு மீனவர்களின் வேன்களும் முன்னாள் விபத்தில் சிக்கி நின்ற மீனவர்களின் வேன்மீது கட்டுப்பாட்டை இழந்து மோதிவிட்டு சாலையோர பள்ளத்தில் இறங்கியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக வேன்களில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் மண்டபம் அம்பலக்காரத் தெருவைச் சேர்ந்த ரஜப்முகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மண்டபம் மேற்குத் தெருவைச் சேர்ந்த அப்துல்காதர் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்சர் அலி, சேதுபதி ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும் 19 பேர் படுகாயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

காயம் அடைந்தவர்களை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்ட காட்சி
காயம் அடைந்தவர்களை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்ட காட்சி

இந்நிலையில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ஆறுதல் கூறினார். அப்போது மீனவர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் அவர்களைச் சமாதானப்படுத்தினர். ஆட்சியர் காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களை அறிவுறுத்திவிட்டுச் சென்றார்.

எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மீனவர்கள்
எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மீனவர்கள்

அதேபோல் ராமநாதபுரம் எம்.எல்.ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் காயமடைந்தவர்களைப் பார்த்து ஆறுதல் தெரிவிக்க வந்தபோது அவரைப் பார்க்கவிடாமல் முற்றுகையிட்டு, அவசர சிகிச்சை பிரிவின் கதவைப் பூட்டி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் காயமடைந்தவர்களைப் பார்க்க மீனவர்கள் அனுமதிக்காததால் வேறு வழியின்றி எம்.எல்.ஏ திரும்பிச் சென்றார்.

உயிரிழந்த நான்கு மீனவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. படுகாயமடைந்த மீனவர்களின் உறவினர்கள் மற்றும் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினர் 500-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் திரண்டனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

எஸ்.பி.தங்கதுரை தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸார்
எஸ்.பி.தங்கதுரை தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸார்

ராமநாதபுரத்தில் வேன்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தது மீனவர்களிடைய சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.