Published:Updated:

அடுத்தடுத்த கொலைகள்… பட்டப்பகலில் பயங்கரம்! அதிர்ச்சியில் திருச்சி மக்கள்

போராட்டம்
போராட்டம்

கடந்த 5 நாள்களில் 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்த கொலைகள்

திருச்சி பாலக்கரையை அடுத்துள்ள வரகனேரி பென்ஷனர் தெருவைச் சேர்ந்தவர், விஜய ரகு. திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் பணி செய்து வந்த இவர், பி.ஜே.பி-யின் அப்பகுதி மண்டலச் செயலாளராக இருந்தார். கடந்த 27-ம் தேதி காலை, காந்தி மார்க்கெட் 6-வது நுழைவுவாயிலில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

கொலை செய்யப்பட்ட விஜயரகு
கொலை செய்யப்பட்ட விஜயரகு

அப்போது அங்குவந்த நான்குபேர் கொண்ட கும்பல், அரிவாளால் விஜய ரகுவின் தலையில் வெட்டியது. அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்ற நிலையில், அவரை அந்தக் கும்பல் சூழ்ந்துகொண்டு வெட்டிச் சாய்த்துவிட்டு, எவ்வித சலனமும் இல்லாமல் அங்கிருந்து தப்பிச்சென்றது. ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிய விஜய ரகுவை அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலைகுறித்து தகவலறிந்ததும், பி.ஜே.பி நிர்வாகிகள் திருச்சி மருத்துவமனை மற்றும் காந்தி மார்க்கெட் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு, நள்ளிரவு வரை பதற்றம் நிலவியது. சம்பவ இடத்துக்கு வந்த எஸ்ஐ தங்கமணி, மத்திய மண்டல ஐஜி அமல்ராஜ், திருச்சி மாநகரக் காவல் துணை ஆணையர் நிஷா உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். கொலைக்கான காரணம் தெரியாமல் போலீஸார் குழம்பினர். விஜய ரகுவின் குடும்பத்தார், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தியதால், விஜய ரகு கொலை செய்யப்பட்டதாகக் கூறவே, நள்ளிரவு வரை பதற்றம் நிலவியது.

போராட்டம்
போராட்டம்

தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், விஜய ரகுவைக் கொலை செய்தவர்களில் சிலர் சிக்கினர். அவர்களைக் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

போலீஸாரின் விசாரணையில் தெரியவந்ததாவது: மிட்டாய் பாபு என்பவர், விஜய ரகுவின் மகளைக் காதலித்துவந்ததாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஜய ரகு, மிட்டாய் பாபுவைக் கண்டித்ததாகவும், அதன்பிறகு மிட்டாய்பாபு, விஜய ரகுவின் மகளைப் பின் தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விஜயரகு, போலீஸில் புகார் கொடுத்திருந்தார். அதுதொடர்பாக நடைபெற்ற தகறாரில், விஜய ரகுவின் மைத்துனர் கிருஷ்ணகுமார் என்பவரை மிட்டாய்பாபு கொலை செய்துள்ளார். இந்த வழக்குகளில் ஜாமினில் வெளியே வந்த மிட்டாய் பாபு, மீண்டும் விஜய ரகுவிடம் அவரது மகளைப் பெண் கேட்டிருக்கிறார். மதத்தைக் காரணம் காட்டி பெண் தரமறுத்ததுடன், அவரை எச்சரித்தும் அனுப்பியுள்ளார் விஜய ரகு. இந்தக் காரணங்களால் ஆத்திரமடைந்த மிட்டாய்பாபு, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து விஜய ரகுவைக் கொலை செய்தது தெரியவந்தது.

ஆனால் கொலைக்கான காரணங்களை போலீஸார் மறைப்பதாகக் குற்றம் சாட்டிவரும் பி.ஜே.பி-யினர், விஜய ரகுவின் கொலையை தேசியப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துவருகின்றனர்.

"செல்போனைத் திருடியதால் கொலை செய்தேன்" அதிரவைத்த கொலையாளி

இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த கொலை நடந்துவிட்டது.

திருச்சி தென்னூர் அண்ணா நகர் சின்னசாமி நகரைச் சேர்ந்தவர், முகமது இசாக். பலூன் வியாபாரம் செய்துவந்த இவர், கடந்த 27-ம் தேதி இரவு, திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகே உள்ள மாநகராட்சி பொதுக்கழிப்பிடம் அருகே, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார்.

தகவலறிந்த போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், கொலை நடந்த இடத்தில் முகமது இசாக்கின் நண்பர் திருச்சி ஜீவா நகரைச் சேர்ந்த நாகூர் ஹனிபா இருந்தது தெரியவந்தது.

போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில், திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே மறைந்திருந்த நாகூர் ஹனிபா கைது செய்யப்பட்டார்.

கொல்லப்பட்ட முகமது இசாக்
கொல்லப்பட்ட முகமது இசாக்

போலீஸாரிடம் நாகூர் அனிபா,

"நானும் எனது நண்பன் முகமது இசாக்கும் அடிக்கடி ஒன்றாக கஞ்சா புகைப்பது வழக்கம். இசாக், செல்போன் திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்தான். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, என் அம்மா பரிசாக வழங்கிய செல்போனை இசாக் திருடிவிட்டான். எனது செல்போனை அவனிடம் தொடர்ந்து கேட்டும் திருப்பித் தரவில்லை.

இந்நிலையில், நாங்கள் இருவரும் கஞ்சா அடித்துக் கொண்டிருந்தோம். அப்போதும் எனது செல்போனை திருப்பித்தர இசாக்கிடம் கேட்டேன். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த நான், முகமது இசாக்கின் கழுத்தை அறுத்தேன். தொடர்ந்து உயிருக்குப் போராடிய அவனை முகத்திலும் உடலிலும் குத்திக் கொலை செய்தேன்" என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

வாக்குமூலத்தின் அடிப்படையில், நேற்று நாகூர் அனிபா திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 5 நாள்களில், திருச்சி உறையூர் புகழேந்தி, வரகநேரி விஜய ரகு, முகமது இசாக் உள்ளிட்ட 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு