Published:Updated:

கள்ளக்குறிச்சி: சிறுமியை காரில் கடத்திய கும்பல்! - கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்

கூட்டுப் பாலியல் வன்கொடுமை
கூட்டுப் பாலியல் வன்கொடுமை

திருக்கோவிலூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவி ஒருவர் நான்கு இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 9 வயது சிறுமி. அருகிலுள்ள பள்ளியில் 5- ம் வகுப்பு படித்துவந்திருக்கிறார். சுமார் 15 தினங்களுக்கு முன்பு, அவரது வீட்டின் அருகேயுள்ள பெட்டிக் கடைக்குப் பொருள்களை வாங்குவதற்குச் சென்றிருக்கிறார் அந்தச் சிறுமி. அப்போது அங்கு வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த பாரதி (எ) பார்த்திபன் (25), பிரபா (27), கோபி (26), அருள் (24) ஆகியோர் இணைந்து மயக்க மருந்து தடவிய கைக்குட்டையைப் பயன்படுத்தி அந்தச் சிறுமியை மயக்கமடைய செய்துள்ளனர். பிறகு அந்த மாணவியை காரில் கடத்தி சென்றுள்ளனர். சற்று தொலைவில் இருக்கும் மற்றொரு கிராமத்திலுள்ள பெருமாள் கோயிலின் பின் பகுதிக்குத் தூக்கிச் சென்று நான்கு இளைஞர்களும் இணைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை
சிறுமி பாலியல் வன்கொடுமை

மயக்கம் தெளிந்த மாணவியிடம், நால்வரும் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவோம் என்றும் கூறி, கத்தியை காட்டி மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. பிறகு, அந்த மாணவியை அதே காரில் அழைத்து வந்து ஊரை ஒட்டி இறக்கிவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். பெற்றோர் வெளியூரில் இருந்ததாலும், நான்கு நபர்கள் மிரட்டியதாலும் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்ல முடியாமல் மனதில்வைத்து துன்பப்பட்டுவந்திருக்கிறார் அந்த மாணவி. அண்மையில் பெற்றோர் ஊருக்கு வந்த நிலையில், தன் தாயிடம் தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூறி கதறித் துடித்திருக்கிறார் சிறுமி.

அதைக் கேட்டு பதறிப்போன சிறுமியின் தாய், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை புகார் அளித்துள்ளார். அந்த நான்கு இளைஞர்கள் மீதும் வழக்கு பதிவு செய்த மகளிர் காவல் துறையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று (14.09.2021) மாலை பார்த்திபன் என்ற இளைஞரைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் மூன்று இளைஞர்களையும் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

`6 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; 56 வயது நபர் போக்சோவில் கைது!'

இது தொடர்பாக திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளரிடம் பேசினோம். ``இந்தக் கொடூரச் சம்பவம் சுமார் 15 தினங்களுக்கு முன்பு நடந்திருக்கிறது. சிறுமியின் பெற்றோர் பெங்களூரிலிருந்து ஊருக்கு வந்தபோது, அவர்களிடம் தனக்கு நடந்த கொடுமை பற்றிக் கூறியிருக்கிறார் சிறுமி. அதன் பிறகு பெற்றோர் நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.

கைதுசெய்யப்பட்ட பார்த்திபன்
கைதுசெய்யப்பட்ட பார்த்திபன்

அதைத் தொடர்ந்து போக்சோ உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, நேற்று மாலை பார்த்திபன் என்ற இளைஞரைக் கைதுசெய்திருக்கிறோம். மீதமுள்ள மூன்று பேரையும் தீவிரமாகத் தேடிவருகிறோம்’’ என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு