Published:Updated:

ஒரு பஸ்ஸையே திருடிச் சென்ற இளைஞர்கள்-திருவாரூரில் திருட்டுப்போனது திருச்சியில் மீட்கப்பட்டது எப்படி?

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் காணாமல்போன பேருந்து ஒன்று, திருச்சி காவல்துறையினரிடம் பிடிபட்டது. இது தொடர்பாக நான்கு பேரைக் கைதுசெய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாகப்பட்டினம் மாவட்டம், பாப்பாகோவில் பகுதியில் இயங்கிவரும் தனியார் கல்லூரி ஒன்றின் பேருந்து, சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இயக்கப்பட்டு மாணவர்களை அழைத்துவருவது வழக்கம். கடந்த 28-ம் தேதி, பல்வேறு பகுதிகளின் வழியாக அந்தப் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் ராஜசேகர், அன்றைக்கு, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள மணவாளம்பேட்டை பகுதியில் நிறுத்திவைத்திருந்தார். சில மணி நேரம் கழித்துப் பார்த்தபோது, கல்லூரிப் பேருந்து காணாமல்போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் பேருந்து கிடைக்காத நிலையில் நன்னிலம் காவல்துறையினரிடம் ஓட்டுநர் ராஜசேகர் புகார் அளித்திருக்கிறார்.

கைதுசெய்யப்பட்டவர்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள்

நன்னிலம் காவல் நிலைய ஆய்வாளர் சுகுணா தலைமையில் உடனடியாக விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். காணாமல்போன கல்லூரிப் பேருந்து, தஞ்சையை நோக்கிச் செல்வது தெரியவந்திருக்கிறது. இது குறித்து தஞ்சை, திருச்சி மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, திருச்சி திருப்பாயத்துறை நெடுஞ்சாலையில், காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த கல்லூரிப் பேருந்தைச் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து நிறுத்தச் சொல்லியிருக்கிறார்கள். இதனால் பேருந்தில் இருந்த நான்கு பேர் பதற்றமடைந்து, பேருந்தை அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு, தப்பி ஓடியிருக்கிறார்கள்.

கார் திருட்டு; சேஸிங்; `சைலேந்திரபாபு சார் 3 முறை போனில் பாராட்டிப் பேசினார்!’ - நெகிழ்ந்த காவலர்

இது தொடர்பாக நன்னிலம் காவல்துறையினருக்கு திருச்சி காவல்துறையினர் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். உடனே, நன்னிலம் காவல்துறையினர், திருச்சிக்குச் சென்று, அந்தக் கல்லூரிப் பேருந்தை ஓட்டிவந்திருக்கிறார்கள். கல்லூரிப் பேருந்தைத் திருடிச் சென்று தப்பியோடியவர்களைப் பிடிக்க, திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் தனிப்படை அமைத்து, தேடுதல் பணியை தீவிரப்படுத்தினார்.

தனிப்படை போலீஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், பேருந்தைக் கடத்தியவர்கள் திருப்பூர் மாவட்டம், பல்லடம் அறிவொளி நகர் பகுதியில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நன்னிலம் காவல்துறையினர், உடனடியாக பல்லடத்துக்கு விரைந்து சென்று, அங்கு பதுங்கியிருந்த நான்கு பேரையும் மடக்கிப் பிடித்து, கைதுசெய்து, நன்னிலம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

கைது
கைது

இது குறித்துப் பேசிய நன்னிலம் காவல்துறையினர், ``நாங்கள் மேற்கொண்ட விசாரணையில் நன்னிலம் அருகேயுள்ள திருக்கண்டீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 23 வயது சத்திய ஸ்ரீராம், பல்லடம் அறிவொளி நகர்ப் பகுதியைச் சேர்ந்த 22 வயது சிவக்குமார், அஷ்ரப், சதீஷ்குமார் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து, தனியார் கல்லூரிப் பேருந்தைக் கடத்திச் சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள்மீது இது தவிர வேறு ஏதேனும் குற்ற வழக்குகள் இருக்கின்றனவா என்பது குறித்தும் விசாரணை நடத்திவருகிறோம்’’ எனத் தெரிவித்தார்கள். வாகன திருடர்கள் பெரும்பாலும் இருசக்கர வாகங்களைதான் திருடிச் செல்வது வழக்கமாக இருந்தது. தற்போது ஒரு பேருந்தையே திருடிச் சென்றிருப்பது, இந்தப் பகுதி மக்களை மிகுந்த அதிரிச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு