Published:Updated:

திருச்சி: `பணம் இரட்டிப்பு ஆசை; லட்சங்களை இழந்த வாலிபர்’ - நிதிநிறுவன உரிமையாளர் மீது வழக்கு

`ராஜா உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் என்னை வழிமறித்து அடித்து கடுமையாகத் தாக்கினார்கள். அவர்களிடமிருந்து நான் உயிர் பிழைத்ததே பெரிய கதை’ என்கிறார் அந்த வாலிபர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

எல்பின் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தைத் திருப்பிக் கேட்டதால் ராஜ்குமார் என்பவரைச் சரமாரியாகத் தாக்கியதாக 'எல்பின்' நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர் ராஜா என்பவர் கடந்த வாரம் பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன் முன்னிலையில் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

எல்பின் நிதி நிறுவனம்
எல்பின் நிதி நிறுவனம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் என்பவர் திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதனடிப்படையில் 'எல்பின் நிறுவனம்’ மற்றும் அறம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் ராஜா, அவரின் தம்பி ரமேஷ் வழக்கறிஞர் பொன்.முருகேசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி பிரபாகரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எல்பின்
எல்பின்

இவர்கள் மீது வழக்கு பதிவு செய்துவிடக் கூடாது என்பதற்காக ஆளும்கட்சி முதல் பா.ஜ.க பிரமுகர் வரை அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள் என்ற தகவலும் பரவி வருகிறது.

என்ன நடந்தது என்று ராஜ்குமாரிடம் பேசினோம், "நான் வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோது அங்கு எனது இரண்டு கால்களும் அடிபட்டுவிட்டது. இன்ஷூரன்ஸ் க்ளைம்ல 50 லட்ச ரூபாய் பணம் கிடைத்தது. உடல்நிலை சரியில்லாததால் நான் ஊருக்கே வந்துவிட்டேன். இந்நிலையில், எல்பின் நிதி நிறுவனம் ஒரே வருடத்தில் பணத்தை இரட்டிப்பாகத் தருவதாக என்னுடைய நண்பர்கள் சொன்னார்கள்.

பாதிக்கப்பட்ட ராஜ்குமார்
பாதிக்கப்பட்ட ராஜ்குமார்

இந்நிலையில் அந்நிறுவனத்தில் ரூ.45 லட்சம் முதலீடு செய்தேன். 10 மாதங்களில் அதை இரட்டிப்பாக்கி ரூ.90 லட்சம் தருவதாகக் கூறினர். அதற்காக செக் கொடுத்தார்கள். அந்த செக்கை நாங்கள் சொல்லும் நேரத்தில் தான் போட வேண்டும் என்று சொன்னார்கள். அதன் பிறகு அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார்கள். அடுத்தகட்டமாக மிரட்டத்தொடங்கினார்கள். இவர்களைப்பற்றி விசாரித்தபோது மக்களை ஏமாற்றுவதாக இந்நிறுவனத்தின் மீது நான்கைந்து வழக்குகள் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் மீது நம்பிக்கை இழந்ததால், பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர்கள் தர மறுத்ததால் கடந்த ஜூன் 15-ம் தேதி புதுக்கோட்டை காவல்துறையில் புகார் செய்தேன். எனவே, இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு என்னை அழைத்தனர். இதற்காகக் கடந்த மாதம் 20-ம் தேதி எல்பின் நிறுவனத்துக்குச் சென்றபோது, ராஜா உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் என்னை வழிமறித்து அடித்து உதைத்தனர். இதில் நான் உயிர் பிழைத்ததே பெரிய கதை. இந்நிலையில் இதில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன்.

எல்பின் உரிமையாளர்கள்
எல்பின் உரிமையாளர்கள்

அவர்கள் சி.எஸ்.ஆர் மட்டும் போட்டுக்கொடுத்துவிட்டு வழக்கு பதிவு செய்யவில்லை. காரணம் அவர் ஆளும்கட்சி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் தலையிட்டால் போலீஸார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டனர். நானும் பொறுத்துப் பொறுத்து பார்த்துவிட்டேன். அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை வேறு வழியில்லாமல் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு அவர் மீது வழக்குப் போட வைத்தேன். அவர் மீது வழக்கு கொடுத்தற்காக அரசியல்வாதிகள் தொடர்ந்து என்னை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்" என்று ஆவேசமாகப் பேசினார்.

இதுகுறித்து எல்.பின் நிறுவனத்தின் உரிமையாளர் ரமேஷிடம் பேசினோம். ”ராஜ்குமார் சொல்வது முற்றிலும் பொய். அவர் வெறும் 30 லட்ச ரூபாய்தான் பணம் கட்டியிருக்கிறார். ஆனால், 45 லட்சம் பணம் கட்டியதாகப் பொய் சொல்கிறார்.

ரமேஷ், ராஜா
ரமேஷ், ராஜா

மேலும் அவருக்கு மெச்சியூட்டி டைம் 10 மாசம்தான். அதுக்குள்ள வந்து பணம் கேட்கிறார். அதற்கு நாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும். அத்தோடு அவர் ரவுடி கும்பலை அழைத்துவந்து மிரட்டுகிறார்" என்று முடித்துக்கொண்டார்.

கே.எஸ் நரேந்திரன்
கே.எஸ் நரேந்திரன்

பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் கே.எஸ்.நரேந்திரனிடம் பேசினோம். ”அறம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் ராஜா பா.ஜ.க-வில் இணைந்தது உண்மைதான். அவர் நல்லவரா கெட்டவரா என்பதனை விசாரித்துதான் கட்சியில் சேர்ப்போம். அந்த வகையில் நீங்கள் சொல்கிறீர்கள். விசாரித்து தலைமையிடம் பேசுகிறோம். மக்களை ஏமாற்ற நினைப்பவர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க தலைவர்கள் துணை போகமாட்டார்கள். கட்சியும் துணை நிற்காது" என்று முடித்துக்கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு