Published:Updated:

`வெள்ளைதாள்கள் ரூபாய் நோட்டாக மாறும்; பாதிக்கு பாதி டீல்!’ - தூத்துக்குடியில் சிக்கிய மோசடி கும்பல்

இ.கார்த்திகேயன்

தூத்துக்குடியில் வெள்ளைத்தாளை 2,000 ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தருவதாகக் கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2,000 ரூபாய் நோட்டுகள்
2,000 ரூபாய் நோட்டுகள்

தூத்துக்குடியில் வெள்ளைத்தாளை 2,000 ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தருவதாகக் கூறி நூதன மோசடியில் ஈடுபட்டவர்களைப் போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி துரைசிங் நகரைச் சேர்ந்தவர் மரியஅந்தோணி மைக்கேல். இவர் திருமண புரோக்கராக இருந்துவருகிறார். இவரின் மகன் முத்துக்குமார். இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு செல்போனில் ஒரு மிஸ்டு கால் வந்துள்ளது. இதையடுத்து, அந்த எண்ணைத் தொடர்புகொண்டு பேசியபோது, அதில் பேசிய நபர் மிகவும் உருக்கமாகவும், தொடர்ந்து சில நாள்கள் நட்பாக பேசியுள்ளார். ``விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகிலுள்ள திருத்தங்கல், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பால்பாண்டியன் என்றும், தன்னால் வெள்ளைத்தாள்களை பணமாக மாற்ற முடியும் என்று கூறி நம்பும் விதமாக விவரித்துப் பேசியுள்ளார்.

மோசடியில் ஈடுபட்ட மூவர்
மோசடியில் ஈடுபட்ட மூவர்

அதற்கான உபகரணங்கள் தன்னிடம் உள்ளன. நீங்கள் விரும்பினால் உங்கள் இடத்துக்கே வந்து வெள்ளைத்தாளை இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தருகிறேன். இதற்கு நீங்கள் பாதிக்குப் பாதி பணம் தர வேண்டும் எனவும் சொல்லியுள்ளார். இதை மரிய அந்தோணி தரப்பினர் நம்பி, பால்பாண்டியனை தன் வீட்டுக்கு வரச் சொல்லியுள்ளனர். பால் பாண்டியனும் மரிய அந்தோணியின் வீட்டுக்கு வந்தார். அங்குள்ள தோட்டத்துக்குச் சென்று அவர்களிடம் ஒரு லட்சத்து 30,000 பணம் பெற்றுள்ளார். பின்னர், அவர் மண்பானையில் பினாயில் போன்ற ஒரு திரவத்தை ஊற்றி அதற்குள் ஒரு வயரை கொடுத்து மின்சார இணைப்பு கொடுப்பதுபோல பாவனை செய்துள்ளார்.

பின்னர், ஒரு சிரிஞ்சில் ஏதோ ஒரு ரசாயன மருந்தை எடுத்து அந்தப் பானைக்குள் விட்டு அதனுள் கட்டுக்கட்டாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டு அளவுக்கு வெட்டப்பட்ட வெள்ளை பேப்பர்களைப் போட்டு அவை 12 முதல் 24 மணி நேரத்துக்குள் ரூ.2,000 தாள்களாக மாறிவிடும் என்று கூறி அவர்களிடம் பேசிக்கொண்டே இருந்துள்ளார். விடிய, விடிய அவர்கள் அங்கேயே காத்திருந்துள்ளனர். ஆனால், வெள்ளைத்தாள் வெள்ளைத்தாளாகவேதான் இருந்தது. இதற்கிடையே, அந்த வழியாக ரோந்து வந்த தாளமுத்துநகர் காவல்நிலைய போலீஸார் மரியஅந்தோணியின் தோட்டத்தில் ஏதோ காய்ச்சுவதுபோல் தெரியவே, அதிரடியாக உள்ளே நுழைந்தனர். அங்கு பால்பாண்டியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து விசாரணையின்போது, தான் வைத்திருந்த பையுடன் தப்பிக்க முயன்றபோது, அவரை மடக்கிப் பிடித்த போலீஸார் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்த பையில், ரூபாய் நோட்டுகள், அதே அளவிலான வெள்ளைத்தாள்கள், ரசாயன மை போன்றவை இருந்துள்ளன. அத்துடன், அவரிடமிருந்த ஒரு லட்சத்து 30,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

இரண்டாயிரம் ரூபாய் நோட்டு
இரண்டாயிரம் ரூபாய் நோட்டு

பால்பாண்டி ஏற்கெனவே, இதுபோன்று கேரளா மற்றும் நாகர்கோவில் பகுதியில் 2 பேரிடம் மோசடியாகப் பணம் ஏமாற்றியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், அவர்கள் புகார் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. இதனிடையே பால்பாண்டியன் இதுபோன்று ஏதேனும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடந்துவருகிறது. பால்பாண்டியனுடன் அவர்களுடன் மோசடிக்கு உடந்தையாக இருந்த மரிய அந்தோணி மற்றும் அவரின் மகன் முத்துக்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளைத்தாளை ரூபாய் நோட்டுகளாக மாற்றலாம் என நூதன முறையில் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.