Published:Updated:

`ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு திரும்பினார்; சத்தம் கேட்டது!' - மகள் கண்முன்னே ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்

மொஹாலியில் பள்ளி ஆசிரியை ஒருவர் 5 வயது மகள் கண்முன்னே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பள்ளி ஆசிரியை சரப்ஜித் கவுர்
பள்ளி ஆசிரியை சரப்ஜித் கவுர்

பஞ்சாப் மாநிலம் மொஹாலியைச் சேர்ந்தவர் சரப்ஜித் கவுர் (Sarabjit Kaur). இவருக்கு வயது 35. பள்ளி ஆசிரியையான இவருக்கு 5 வயதில் மகள் உள்ளார். இவருக்கும் ஹர்வீந்தர் என்பவருக்கும் 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பின் கணவருடன் பிரான்ஸ் சென்றுள்ளார். ஹர்வீந்தருக்கு பிரான்ஸில் வேலை என்பதால் அவருடன் தங்கியிருந்தார். வீட்டில் தனியாக இருந்ததால் பிரெஞ்ச் கற்கத் தொடங்கியுள்ளார்.

திருமணம்
திருமணம்

ஹர்வீந்தர் பணிக்குச் சென்றவுடன் சரப்ஜித் கவுர் பிரெஞ்ச் கற்க சென்றுவிடுவார். அங்கிருந்த நாள்களில்தான் கணவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆனதும் முதல் மனைவி மூலம் பெண் குழந்தை இருக்கும் விவரமும் சரப்ஜித் கவுருக்கு தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்து இந்தியா திரும்பினார். 2013-ம் ஆண்டு கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். இதற்கிடையில், இவருக்குப் பெண் குழந்தை பிறந்தது.

பஞ்சாப் திரும்பியவருக்கு தான் கற்ற பிரெஞ்ச் பெரும் உதவியாக இருந்தது. இதையடுத்து, தனியார் பள்ளி ஒன்றில் பிரெஞ்ச் ஆசிரியையாக பணிக்குச் சேர்ந்தார். மாணவர்களுக்கு பிரெஞ்ச் மற்றும் பஞ்சாபி கற்றுக்கொடுத்து வந்தார். தன் 5 வயது மகளுடன் பள்ளிக்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். வழக்கம்போல் இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்தார். பள்ளிக்கு அருகில் உள்ள இடத்தில் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தன் மகளுடன் திரும்பியுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சரப்ஜித் கவுரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்தவர் ரத்தவெள்ளத்தில் சரிந்துள்ளார்.

துப்பாக்கி
துப்பாக்கி

இதைக்கண்ட அவரது 5 வயது மகள் பள்ளி வளாகத்துக்குள் ஓடிவிட்டார். உடனடியாக பள்ளியின் நுழைவு வாயிலை தாழிட்டுள்ளனர். வெளியாட்கள் யாரும் பள்ளிக்குள் அனுமதிக்கப்படவில்லை. காவல்துறையினர் வரும்வரை பள்ளியின் நுழைவு வாயில் கதவு சாத்தப்பட்டிருந்தது. போலீஸார் வந்த பின்னர்தான் திறக்கப்பட்டது.

கவுர் சரிந்து விழுந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் விரைந்தனர். அவர்களைக் கண்டதும் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். கவுரை மீட்ட அப்பகுதி மக்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கவுர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கவுரின் உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விரைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கொலை
கொலை

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், ``கவுர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. மர்மநபர் நீண்ட நேரமாக அப்பகுதியில் நோட்டமிட்டு இருந்துள்ளார். கவுர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு திரும்பியுள்ளார். அவரை நோக்கி மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அந்த நபர் யார் எனத் தெரியவில்லை. அந்த நபரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கவுரின் உடலில் மூன்று தோட்டாக்கள் பாய்ந்துள்ளன. இதன்காரணமாக அவர் உயிரிழந்தார். அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்து வருகிறோம். மர்ம நபர் தன் முகத்தை மறைக்கும்விதமாக ஸ்கார்ப் கட்டியிருந்ததாக அப்பகுதியில் இருந்தவர்கள் கூறுகின்றனர். கணவருடன் விவாகரத்து பெற்றுள்ளார். அந்தக் கோணத்திலும் விசாரித்து வருகிறோம்” என்றனர். 5 வயது மகள் கண்முன்னே ஆசிரியை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.