Published:Updated:

சென்னை: டி.வி சீரியல் நடிகரைக் கொலை செய்தது ஏன்? - நண்பர் அதிர்ச்சித் தகவல்

கொலை செய்யப்பட்ட டி.வி சீரியல் நடிகர் செல்வரத்தினம்
கொலை செய்யப்பட்ட டி.வி சீரியல் நடிகர் செல்வரத்தினம்

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் டி.வி சீரியல் நடிகர் கொலை செய்யப்பட்டது ஏன் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த வழக்கில் நடிகரின் நண்பர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை எம்.ஜி.ஆர் நகர், வள்ளல் பாரி தெருவிலுள்ள வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடகைக்குக் குடியிருந்தவர் செல்வா என்கிற செல்வரத்தினம் (41). இவர், தனியார் தொலைக்காட்சியில் சீரியல் நடிகராக இருந்தார். செல்வரத்தினத்துக்குத் திருமணமாகி, மூன்று மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் விருதுநகர் மாவட்டத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் குடியிருந்துவருகின்றனர். செல்வரத்தினம் மட்டும் தனியாக சென்னையில் தங்கியிருந்தார். இந்தநிலையில் கடந்த 15-ம் தேதி ஆட்டோவில் வந்த மர்மக் கும்பல் செல்வரத்தினத்தை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

கொலை
கொலை
Representational Image

இந்தக் கொலை தொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் வழக்கு பதிந்து கொலையாளிகளைத் தேடிவந்தார். இந்தநிலையில் டி.வி சீரியல் நடிகர் செல்வரத்தினத்தின் நண்பரான விஜயகுமாரை (36) போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். விஜயகுமாருடன் சேர்ந்து அவர்களின் நண்பர்களும் இந்தக் கொலையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. அவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

இது குறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீஸார் கூறுகையில், ``செல்வரத்தினமும் விஜயகுமாரும் விருதுநகர் மாவட்டம், குல்லூர் சந்தை, டேம் காலனியில் குடியிருந்திருக்கின்றனர். அதனால் இருவரும் நண்பர்களாகப் பழகியிருக்கின்றனர். இந்தச் சமயத்தில் செல்வரத்தினம், டி.வி சீரியலில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்துவிட்டார். ஆனால், விஜயகுமார் விருதுநகரிலேயே டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டார். விஜயகுமாரின் மனைவி டைல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார்.

விஜயகுமாரின் மனைவி
விஜயகுமாரின் மனைவி
சென்னை:`அக்காவுக்கு ஜூஸ்; மாமாவுக்கு விஷம்!' - சொத்துக்காகக் கொலை... சகோதரிகள் சிக்கிய பின்னணி

விஜயகுமாரின் மனைவிக்கும் செல்வரத்தினத்துக்கும் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பை விஜயகுமார் கண்டித்திருக்கிறார். ஆனால், இருவரும் கேட்கவில்லை. செல்வரத்தினம் சென்னையில் தங்கியிருந்தபோதிலும் அடிக்கடி விஜயகுமாரின் மனைவியுடன் போனில் பேசிவந்திருக்கிறார். அதனால் செல்வரத்தினத்துக்கும் விஜயகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்தநிலையில்தான் விஜயகுமாரின் மனைவி தீபாவளி பண்டிகையையொட்டி உறவினர் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வெளியில் சென்றிருக்கிறார். அவரை ரகசியமாக பின்தொடர்ந்து வந்திருக்கிறார் விஜயகுமார்.

விருதுநகரிலிருந்து சென்னைக்கு வந்த விஜயகுமாரின் மனைவி, செல்வரத்தினத்தைச் சந்தித்திருக்கிறார். அதைப் பார்த்த விஜயகுமார் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து விஜயகுமாரின் மனைவி, ஊருக்குத் திரும்பிவிட்டார். தனக்கு துரோகம் செய்த செல்வரத்தினத்தைக் கொலை செய்ய விஜயகுமார் திட்டமிட்டிருக்கிறார். பின்னர் அது தொடர்பாக தனது நண்பர்களுடன் ஆலோசித்துவிட்டு, 15-ம் தேதி அதிகாலையில் செல்வரத்தினம் தங்கியிருந்த தெருவில் காத்திருந்தார். அப்போது வெளியில் வந்த செல்வரத்தினத்தை ஓட ஓட விரட்டிக் கொலை செய்த விஜயகுமாரும், அவரின் நண்பர்களும் சிசிடிவியையும் சேதப்படுத்திருக்கிறார்கள்.

கொலை
கொலை
representational image

சிசிடிவி சேதப்படுத்தப்பட்டபோதிலும் கொலையாளிகள் வந்த ஆட்டோவின் பதிவு நம்பரைக்கொண்டு விசாரணையைத் தொடங்கினோம். அதன் பிறகு கொலை செய்யப்பட்ட டி.வி நடிகர் செல்வரத்தினத்தின் செல்போனை ஆய்வு செய்தபோதுதான் விஜயகுமாரின் மனைவியுடன் அவர் அடிக்கடிப் பேசியது தெரியவந்தது. இதையடுத்து விஜயகுமாரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம். அவரின் நண்பர்களைத் தேடிவருகிறோம்" என்றனர்.

விசாரணையின்போது விஜயகுமார், `என்னுடைய மனைவி, செல்வரத்தினத்தை முழுமையாக நம்பினேன். ஆனால் அவர்கள் எனக்கு துரோகம் செய்துவிட்டனர். அதனால்தான் செல்வரத்தினத்தைக் கொலை செய்தேன்' என்று கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

டி.வி சீரியல் நடிகரின் வாழ்க்கையில் கூடா நட்பு கேடாக முடிந்திருக்கிறது.

சென்னை: இளம்பெண்ணுடன் நட்பு  - டி.வி சீரியல் நடிகர் ஓட ஓட விரட்டிக் கொலை
அடுத்த கட்டுரைக்கு