Published:Updated:

வேலூர் : சூதாட்ட கிளப் நடத்தியவர் கைது! - ஜூ.வி செய்தி எதிரொலி; அதிரடி காட்டிய போலீஸ்!

கேடி சேட்டு
கேடி சேட்டு

‘ஜூனியர் விகடன்’ செய்தி எதிரொலியாக, வேலூரில் சூதாட்ட கிளப் நடத்திவந்த கும்பலின் தலைவன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

வேலூர் மாநகரத்தில், காவல்துறையினரின் துணையோடு சட்டவிரோதமாகச் சூதாட்டம் நடைபெறுவதாக புலம்புகிறார்கள் பொதுமக்கள். அதிலும், சின்ன அல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கேடி சேட்டு (வயது 44) என்பவரின் தலைமையில் மட்டும் 15 இடங்களில் லாட்டரி விற்பனை, காட்டன் சூதாட்டம் கொடிக்கட்டிப் பறப்பதாகவும் கூறப்படுகிறது. கேடி சேட்டு மீது ஏற்கெனவே ரௌடியிசம், கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு புகார்கள் உள்ளன. வழக்கு விசாரணைக்கு அடிக்கடி அழைத்ததால், போலீஸாருடன் அவருக்கு ‘நல்ல’ நட்பு ஏற்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சூதாட்டம்
சூதாட்டம்

இதனால், டோல்கேட் பகுதியில் கிளப் நடத்தும் அளவுக்கு சூதாட்டத்தில் கோலோச்சுகிறாராம் கேடி சேட்டு. வேலூர் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும், காவல் நிலையத்தைச் சேர்ந்த காமெடி நடிகரின் பெயரைக்கொண்ட ஏட்டு ஒருவரின் மூலம், மேல்மட்ட அதிகாரி ஒருவருக்கு கேடி சேட்டு மாதந்தோறும் மாமூல் கொடுப்பதாகவும் தகவல்கள் உலாவிக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், நேற்று காலை வெளிவந்திருந்த ‘ஜூனியர் விகடன்’ நடப்பு இதழின், வாக்கி டாக்கி பகுதியில், ‘சூதாட்டத்தில் கோலோச்சும் கேடி’ என்ற தலைப்பில் கேடி சேட்டுவின் பெயருடன் செய்தி வெளியாகியிருந்தது. இதையடுத்து, ‘ஐ.பி.சி 420’ உட்பட இரண்டுப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து, கே.டி.சேட்டுவை அதிரடியாக கைது செய்திருக்கிறார்கள், வேலூர் தெற்கு காவல் நிலைய போலீஸார்.

கேடி சேட்டு
கேடி சேட்டு

அதேசமயம், போலீஸாரின் இந்த நடவடிக்கை கண்துடைப்புக்காக இல்லாமல், கடுமையாகத் தொடர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். இந்த நிலையில், கேடி சேட்டுவின் கூட்டாளிகளான வெள்ளை, ஷபீல், ஷான், நவாஸ் உட்பட சில நபர்களால் சூதாட்டம் தொடர வாய்ப்பிருப்பதாகவும், அவர்களையும் விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு