Published:Updated:

5 ஆண்டுகள் காதல்; திருமணமான 5 மாதத்தில் விரிசல்!- செல்போனால் சிக்கிய சென்னை கானா பாடகர்

சென்னையில் புகழ்பெற்ற கானா பாடகர் பழனியின் மகன் தரணியை வரதட்சணைப் புகாரில் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

Arrest
Arrest

சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்தவர், பிரபல கானா பாடகர் பழனி. இவரின் மகன் தரணி (24). இவரின் மனைவி விஜயபானு, சென்னை புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், என் கணவர் தரணி வரதட்சணை கேட்டு என்னைக் கொடுமைப்படுத்துகிறார். எனவே, தரணி மற்றும் அவரின் குடும்பத்தினர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தரணிக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது.

கானா பாடகர் தரணி
கானா பாடகர் தரணி

அதை மறைத்து, 5 மாதங்களுக்கு முன் என்னை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். எனவே, தரணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில், தரணி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கானா பாடல் மூலம் பிரபலமானவர் கானா பழனி. இவரின் மகன் தரணியும் கானா பாடல்களைப் பாடிவருகிறார். இவருக்கும் விஜயபானுவுக்கும் 14.7.2019 ல் திருமணம் நடந்தது. சில தினங்களுக்கு முன் காவல் நிலையம் வந்த விஜயபானு, வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக தரணி மற்றும் அவரின் குடும்பத்தினர்மீது புகார் கொடுத்தார். அதன்பேரில், தரணியைக் கைதுசெய்துள்ளோம். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

Arrest
Arrest

விஜயபானு தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ``திருமணத்தின் போது விஜயபானுவுக்கு வரதட்சணையாகக் கொடுத்த நகையைத் தரணி குடும்பத்தினர் அடகு வைத்துள்ளனர். அதன்பிறகும் வரதட்சணையாக நகை, பணம் கேட்டு விஜயபானுவைக் கொடுமைப்படுத்தியுள்ளனர். விஜயபானுவும் தரணியும் கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்துவந்தனர். விஜயபானுவைக் காதலித்த சமயத்தில்தான் தரணிக்கு இன்னொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. ஆனால், இந்தத் தகவலை தரணி குடும்பத்தினர் எங்களிடம் மறைத்துவிட்டனர்.

இந்தச் சமயத்தில், தரணியின் செல்போன்களை விஜயபானு பார்த்தபோது, ஒரு பெண்ணுடன் தரணி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அதில் இருந்துள்ளன. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விஜயபானு, அதுகுறித்து தரணியிடம் கேட்டுள்ளார். அதற்குத் தரணி, அலட்சியமாகப் பதிலளித்துள்ளார். இதனால்தான், திருமணமான 5 மாதத்திலேயே தரணி மீது புகார் கொடுத்தோம். நாங்கள் கொடுத்த புகாரில் தரணி மட்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆனால், அவரின் குடும்பத்தினரை போலீஸார் இதுவரை கைது செய்யவில்லை" என்றனர்.

'ரூட் தல' வரலாறு! - 'கானா' உலகநாதன் விளக்கம்

கானா பழனி குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்க பல தடவை முயன்றோம். ஆனால், அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிடத் தயாராக உள்ளோம்.

கானா பழனி தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ``விஜயபானுவிடம் நாங்கள் வரதட்சணையாக நகை, பணம் கேட்கவில்லை. சிலரின் தூண்டுதலின்பேரில் எங்கள்மீது விஜயபானு புகார் கொடுத்துவிட்டார். விஜயபானுவை தரணி காதலித்துதான் திருமணம் செய்துகொண்டார். தரணி குறித்த முழு விவரமும் விஜயபானுவுக்குத் தெரியும். இந்தப் புகாரை சட்டப்படி எதிர்கொள்வோம்" என்றனர்.